Sunday, 24 October 2021

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட்டது எப்படி?

#பச்சையப்பன்கல்லூரி #பெரியார் #நீதிக்கட்சி #என்_சிவராஜ்

இந்து சமய அறநிலையத்துறை தொடங்கும் கல்லூரியில் பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்றொரு அரசு விளம்பரம். அதைத் தவறென்று கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுக்கிறார். (16.10.2021 விடுதலை)

அதில் பழைய வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டும் அவர், பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக நினைவூட்டலாக ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கிறார்.

 //1928-க்குமுன் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லீம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது; அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சி தான் மாற்றியது. (காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து; அவரது அறக்கட்டளைமூலம் நடத்தப்படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டுகாலம் இருந்ததை தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது).// என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிவிட்டார். இது பொய் என்கிறார் ஒருவர்.

அதற்குச் சான்றாக தான் எழுதிய கட்டுரையையும் காட்டுகிறார். மறுக்க வேண்டியதில்லை. அவர் எழுதியிருக்கும் செய்திகள் உண்மையானவை தான் என்போம். ஆனால், முழுமையானவையா? நிறைவானவையா? அக் கட்டுரையில் அவர் கவனமாகத் தவிர்த்திருக்கும் செய்திகள் என்ன? அல்லது கவனம் கொள்ள மறுத்திருக்கும் செய்திகள் என்ன? தான் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வழக்கு தொடர்ந்ததா என்பது பற்றித் தகவல்கள் இல்லை என்று சொல்லும் கட்டுரையாளர் திரு.ஏ.பி.ராஜசேகரன், நீதிபதியின் அவதானிப்பை ஏற்றுக்கொண்ட அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க  முடிவெடுத்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றினர் என்று எழுதியுள்ளார். ஆனால், அந்த அறங்காவலர் குழுவில் என்ன நடந்தது என்பதை 'குடிஅரசு' சொல்கிறது. இக் கட்டுரையின் பின்பகுதியில் அதுபற்றி குறித்துள்ளோம்.

நினைவூட்டலாக ஆசிரியர்  சொன்ன செய்திகள் பொய்யென்று சொல்லும் அவ்வழக்குரைஞர், ஏன் சில செய்திகளை, நீதிக்கட்சி, பெரியார் ஆகியோரின் முன்னெடுப்புகளை மறைக்கிறார்? அல்லது என்ன செய்தியை விதைக்க முயல்கிறார் என்பதை அவரே உணர்வார்.

ஆசிரியர் வீரமணி சொல்லியிருப்பவை பொய்யா? முதலில் அதைப் பார்ப்போம்.

* //1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். // சான்று: http://adi-dravidar.blogspot.com/p/6.html
அப்போது சிவராஜ் நீதிக்கட்சியின் சார்பில் மேலவை உறுப்பினராக இருந்தார்.

* 1927 அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னை மாகாண முதல் பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு. பனகல் அரசர், சர்.ஏ.ராமசாமி (முதலியார்), தந்தை பெரியார் உள்ளிட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். அதில் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுரேந்திரநாத் ஆரியா முன்மொழிந்த தீர்மானம்: "பச்சையப்பன் கல்லூரியிலும், அவர்களின் அறக்கட்டளை நிர்வகிக்கும் பள்ளிகள், மாணவர் விடுதிகளிலும் ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறித்துவ மாணவர்களும் படிக்கச் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை கல்லூரியின் அறங்காவலர்களுக்கு வலியுறுத்தி இந்த மாநாடு கூறுகிறது. இவ்வாறு அவர்களை சேர்க்காமல் ஒதுக்குவது பச்சையப்ப வள்ளல் அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் சேர்ப்பதாகும்.” பின்னர் விவாதத்துக்குப் பிறகு சேர்க்கப்பட்ட வரிகள்: “இந்தக் கோரிக்கையை அறக்கட்டளை ஏற்று செயல்படத் தவறினால் அக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.” இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அதே மாநாட்டில் ஆர்.வி.சொக்கலிங்கம் இதே போன்ற மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார். “ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.” அத் தீர்மானமும் நிறைவேறியது.

* 1927 நவம்பர் குடிஅரசில் காட்டமான “ஆதி திராவிடர் - விபசாரி மக்களை விட இழிந்தவர்களா?” என்ற கட்டுரை கேட்கிறது - ”தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா?”.

* அதையொட்டி நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா மாநாட்டில், வழக்கின் முடிவில் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர் சேர்க்கப்பட்டதற்கு வரவேற்பும், இதே போல் கிறித்துவ, முஸ்லிம் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும், பச்சையப்பன் அறக்கட்டளையில் ஆதிதிராவிடர் சேர்க்கப்படுவதற்குத் தடையாயிருந்த திரு.வெங்கடேச சாஸ்திரலு பார்ப்பனரைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

* பச்சையப்பன் அறக்கட்டளையிலிருந்து கொண்டு கலாட்டா செய்துகொண்டிருந்த 'வெங்கடேச சாஸ்திரலு’ என்ற பார்ப்பனரைப் பற்றி எழுத மனம் வராததேன்? காலச்சுவடு தடுக்குமா?

* காலச்சுவடு கட்டுரையில் அவர் எடுத்துக்காட்டியிருக்கும் பக்கங்களில் மேயர் என்.சிவராஜ் அவர்களைப் பற்றிய பதிவே காணாமலிருப்பதேன்? தெரியவில்லை. சிவராஜ் அவர்களின் வரலாற்றில் இருக்கும் செய்தி தவறா? அவர் எதுவும் செய்யவில்லையா இந்தப் பிரச்சினையில்? எது உண்மை?

* ஆதிதிராவிட மக்களை சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்று ’தீர்மானம்’ இயற்றினார் என்று சர்.பிட்டி. தியாகராயர் குறித்த அபாண்டங்களுக்கெல்லாம் தன் முகநூல் பதிவில் தூபம் போடும்  வழக்குரைஞர், (அப்படி ஒரு தீர்மானம் இருந்தால் அவர்கள் எடுத்துக் காட்டட்டும். அப்படி அபாண்டம் பேசப்பட்ட பி&சி மில் பிரச்சினையில் மக்களைத் துண்டாடியவர்கள் யார் என்பதையெல்லாம் ஏற்கெனவே ஆய்வாளர் க.திருநாவுக்கரசு விரிவாக எழுதிவிட்டார்) இப்போதுவந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் வைக்கும் அபாண்டங்களைத் தூக்கி சாட்சிக் கூண்டில் நிறுத்துகிறார், பாவம்!

* சர்.பிட்டி தியாகராயர் பச்சையப்பன் கல்லூரி அறங்காவல் குழுவில் இருந்தது பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கப்படும் முன்னான காலம். (1917-ல் அது குறித்து அவர் பேசுகிறார்.) அங்கு அவருக்கு நடந்த அனுபவம் தான் பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதார் மாணவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகத் தனிக் குழுக்களை அமைக்க ஏற்பாடு செய்யக் காரணமாயிற்று. (ஏ.பி.பாத்ரோ நீதிக்கட்சி அமைச்சராக இருக்கும்போது!) அவை நடைமுறைக்கு வர பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

* "ஆதிதிராவிடர், கிறித்துவர், முஸ்லிம் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுக்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு எந்த வித மான்யங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்றொரு தீர்மானத்தை மேலே கண்டோமே, அதற்கு முன்னோடி என்ன தெரியுமா?  

“தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படமாட்டாது” என்ற (கல்வி 87, 16.1.1923) அரசாணை!

அதுமட்டுமல்ல, “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களை மிகுதியாகச் சேர்க்கும் பள்ளிகளுக்கு பண உதவி மிகுதியாக வழங்கப்பட்டமை (ஆணை 205 கல்வி, 11.2.1924)”, மருத்துவக் கல்வி பயில நிதி உதவி, ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள வாங்க நிதி, ஆதி திராவிடர் அணுகும் இடத்தில் பள்ளிகள் அமைய வேண்டும் என்பதற்கான ஆணைகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிற்காலத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் சேர்த்துக் கொள்ள மறுத்தால் அனுமதி ரத்து என்பதுவரை படிப்படியாக மாற்றங்கள் வந்தன.

* இந்தக் கல்வி உரிமைப் போராட்டம், ஆணைகளின் தொடர்ச்சி தான் பச்சையப்பன் கல்லூரிப் பிரச்சினை. அது தனியாக எங்கிருந்தோ முளைத்து வந்ததல்ல. இந்த உரிமைக்காகப் படிப்படியாக நீதிக்கட்சி அரசுகளும், அதனைத் தொடர்ந்து அதன் ஆதரவோடு அமைந்த பி.சுப்பராயனின் அமைச்சரவையும் செயல்பட்டமையைத் தெளிவாக அறியலாம். அன்றைக்கிருந்த அத்தனைப் பிரச்சினைகளையும் சமூகக் கேடுகளையும், கொடுமைகளையும், தனக்கிருந்த வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மத்தியில் ஒவ்வொன்றாக எதிர்கொண்டு வெற்றிகண்ட நீதிக்கட்சியின் செயல்பாடுகள் வரலாற்றில் எங்கும் கண்டிராத சாதனைகள். இவற்றையெல்லாம் மறைக்க நினைப்பது ஏன்? நீதிக்கட்சியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகவே திட்டமிட்டுத் திரித்துக் காட்ட முயற்சிப்பது ஏன்?

அன்றிருந்த சூழலில் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவ்வரசு ஆற்றியிருக்கும் பணிகளை விடுத்து, ஒரேடியாக ஏன் மாறவில்லை என்பதைப் போல கேள்வி எழுப்புவதை 'வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பது' என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்றும் அந்த சமூகநீதிப் பாதைதான் தொடர்கிறது - பயணம் முடியவில்லை. என்ன காரணம்? இன்னும் சமூகக் கேடுகள் ஒழியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும்! எனில், நூறாண்டுகளுக்கு முன்னான நிலையை நினைத்துப் பார்ப்போம். 

நீதிக்கட்சியையும், திராவிட இயக்கத்தையும் குறை/அவதூறு சொன்னால், சமூகநீதிச் சக்திகளின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு பார்ப்பனர்களுக்கும், சங் பரிவாருக்கும் பயன்படலாம். அதற்காகப் பார்ப்பன சடகோபம் கிடைக்கலாம்; பாராட்டு கிடைக்கலாம். பத்ரிகள் ஷேர் செய்யலாம் (ஏ.பி.ரா. அவர்களே இந்த உத்தமர்களின் பகிர்வைப் பற்றி எழுதியுமிருக்கிறார். வெளிப்படையாகப் பத்ரிகள் ஷேர் செய்வதால் மட்டுமல்ல.. இல்லாவிட்டாலும் இவை யாருக்குப் பயன்படும் என்பதை நாம் அறிவோம் அல்லவா!) 

ஆனால் சமூகநீதிக்கோ, சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமைக்கோ ஒருபோதும் பலன் கிட்டாது என்பதைப் புரிந்துகொள்ளட்டும். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் உள்ளவை உண்மையே என்பதையும் உணரட்டும்.
- பிரின்ஸ் என்னாரெசு பெரியார் முகநூல் பக்கம், 19.10.21

No comments:

Post a Comment