Sunday 10 October 2021

‘துக்ளக்' வெளியிட்ட கார்ட்டூன்களுக்கு துளைத்திடும் வினாக் குண்டுகள்!

 


‘துக்ளக்', 1.9.2021, அட்டைப்படம்

கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறுவது இருக்கட்டும். சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட கமிஷன் (1960-1962) என்ன சொல்லுகிறது?

"அனேகமாக இந்தக் கோயில் பண்டாரங்கள் (அர்ச்சகர்கள்) தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் பெற முடியுமோ, அவ்வளவுப் பணம் பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே வேலை" என்று சர்.சி.பி.ராமசாமி அய்யர் கமிஷன் சொல்லுகிறது.

அத்தோடு அய்யர் கமிஷன் நின்றுவிடவில்லை.

தஞ்சாவூர்  பிரகதீஸ்வரர் கோயிலுக்கு 60 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் சொந்தமாக இருந்தது. இதுபற்றி அய்யர் கமிஷன் கூறுகிறது கேளுங்கள்! கேளுங்கள்!!

40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போனதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுவது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் அல்ல. சாட்சாத் சர் சி.பி.ராமசாமி அய்யர் கமிஷன்தான்.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘துக்ளக்' கார்ட்டூன் கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கி யன் என்று கூறுகிறதோ!

வெகு காலத்திற்கு முன்கூடப் போக வேண்டாம்.

சிதம்பரம் நடராஜன் கோயில் தி.மு.க. ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வரப்பட்ட தல்லவா? அது பற்றிய வழக்கில் தில்லை நடராஜர் கோயில் தீட்சதர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த கணக்கு என்ன?

ஆண்டு வருமானம் - ரூ. 37,199 (என்ன, பேட்டா விலை போல் இருக்கிறதா?)

செலவு - ரூ. 37,000

மிச்சம் - ரூ. 199

இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்தபோது அதே சாட்சாத் நடராஜன் கோயில் வருமானம் என்ன?

15 மாதங்களில் வந்த தொகை ரூ. 25,12,485.

இப்பொழுது புரிகிறதா சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை கோடி கோடி என்று. ஒருக்கால் இதை நினைத்துதான் கடவுளைப் பரப்புகிற அர்ச்சகன் அயோக்கியன் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ‘துக்ளக்‘கில் கார்ட்டூனைப் போட்டு இருப்பாரோ!

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு மன்னன் கிருஷ்ணதேவராயன் கொடுத்த வைரங்கள், நகைகள் காணோம் காணோம் என்ற குற்றச்சாட்டு உயர்நீதி மன்றம் வரை சிரிப்பாய் சிரித்ததே!

சினிமா நடிகர் சிரஞ்சீவி தமது பிரஜாராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று திருப்பதி கோவிந்தா கடவுளைக் ‘கோவிந்தா' ஆகாமல் காப்பாற் றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லையா?

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திராவின் முதல்வராக இருந்தவருமான சந்திரபாபு நாயுடுகாரும் களத்தில் குதிக்கவில்லையா?

திருப்பதி கோயில் ஊழல் பற்றி சி.பி.அய். விசாரணை தேவை என்று குரல் கொடுக்கவில்லையா?

"மன்னர் கிருஷ்ணதேவராயர் வழங்கிய நகைகள் திடீரென மாயமாகிவிட்டன. விஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதன் மீது விசாரணை நடத்தி, ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டில்லியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறிடவில்லையா?

திருப்பதி கோயில் நகைப் பாதுகாப்புப் பிரிவில் முக்கிய பணியில் இருந்த சேஷாத்திரி என்ற பார்ப் பனருக்கு டாலர் சேஷாத்திரி என்றே பெயர். ஏன் தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் உருவம் பொறித்த டாலர் விற்பனையிலேயே மோசடி! அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விசாரணை அதிகாரி ரமணகுமார் தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தும், டாலர் சேஷாத்திரி மீது ஒரு துரும்புக் கூடப் படவில்லையே!

இதுபோன்றவற்றால் தான் ‘துக்ளக்' கார்ட்டூனில் அர்ச்சகர்கள் என்றால் அயோக்கியர்கள் என்று கல்வெட்டுச் சாசனமாகப் பொறிக்கப்பட்டுள்ளதோ!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமையை எதிர்க்கும், ஒழிக்கும் நடவடிக்கையே!

பொது இடங்களில் இருந்த தீண்டாமை ஒழிக்கப்பட்டு கோயில் கருவறைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கி இருக்கிறது. அந்தப் பாம்பை அடித்து விரட்ட வேண்டும் என்பதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது!

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் அது! அந்தக் களத்திலேயே தான் தனது இறுதி மூச்சையும் துறந்தார்.

அதனைத்தான் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்துவிட்டோமே என்று குறிப்பிட்டார்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அடிப்படையில் பயிற்சி பெற்ற 58 பேர்களுக்குப் பணி நிய மனத்துக்கு ஆணையினை வழங்கினார் (14.8.2021).

இதனைக் கேலி செய்யும் வகையில் தான் ‘துக்ளக்' கார்ட்டூன் போடுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

"ஏய், நீங்கள் எல்லாம் சூத்திர பஞ்சம பசங்க தான் - உங்களுக்கு எல்லாம் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் விபசாரி மக்கள் தான் - எங்கள் ஹிந்து சாஸ்திரப்படி.

அதை உங்களால் மாற்ற முடியாது - முடியவே முடியாது - நீங்கள் அர்ச்சகராகி விடுவீர்களா? பார்த்து விடுவோம்" என்று பூணூலை உருவிவிட்டு ஆவேசம் காட்டினாலும் அந்த வருணாச்சிரம ஆணவத்தின் நச்சுப் பல்லைப் பிடுங்கிட எண்ணற்ற இளைஞர்கள் கிளர்ந்தெழுவர் - எச்சரிக்கை!

எங்களால் கார்ட்டூன் போட முடியாதா?

கோயிலுக்கு வாங்கோ... வாங்கோ... சரச லீலை ஆடலாம் வாங்கோ... வாங்கோ.... எங்களாத்து தேவநாதன்களின் காமலீலா வினோதங்கள் ஜோர்! ஜோர்!! என்று கார்ட்டூன் போட முடியாதா?

நாங்களாகக் கற்பனை செய்து கூடப் போட வேண்டாம். திருவாளர் சோ.ராமசாமி அய்யர்வாளே போட்ட கார்ட்டூன்தான் இருக்கவே இருக்கிறதே! கார்ட்டூன்களை ஒட்டிப் போடப்பட்ட வாசகங்களும் இருக்கின்றனவே. (‘துக்ளக்', 1.6.1981, பக். 32)

"வாங்கோ! வாங்கோ!! கோயிலுக்கு வாங்கோ! ‘சைட்‘ அடிக்கலாம் வாங்கோ! வாங்கோ!!" என்று உங்க வார்த்தையைக் கொண்டே சுளுக்கு எடுக்க முடியாதா எங்களால்?

எழுதுங்கள்! எழுதுங்கள்!! கார்ட்டூன் போடுங்கள்! போடுங்கள்!! எங்கள் இனத்து இளைஞர்களுக்கு நல்லா வேலை  கொடுங்கோ! எங்கள் தலைமுறையையும் தாண்டி பார்ப்பன எதிர்ப்பு என்ற நெருப்பு சுடர் விட்டு எரிய வேண்டாமா? நன்னா எழுதுங்கோ! எழுதுங்கோ!!

No comments:

Post a Comment