Saturday, 31 July 2021
பெரியாரின் பன்முகம்
Tuesday, 27 July 2021
பெரியார் கிராமம் "திருவிளையாட்டம்" !
Sunday, 25 July 2021
பார்ப்பனரல்லாதவர்க்கு... (சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் )
03.07.1927- குடிஅரசிலிருந்து.....
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்குத் தெரியும்.
தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி அங்கு கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்துவிட்டார்கள். இத்தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர்களுக்கும், திருப்தியாக சம்மதந்தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன் இந்து முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டிக்காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும். ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத்தனமான மூடக் கொள்கை களின் பாசத்தால், கட்டுப்பட்டிருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்முலாம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு போன்றும் கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப்பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது. நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தமெழுதப்பட்டிருக்கிறது. அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அநேகருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று பார்ப்பனர்களுக்குத் தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்மானம் செய்திருக்கமாட்டார்கள்.
சூத்திரன் என்னும் பதத்திற்குக் கிலேசமுடையவன், துக்கி, வேசிமகன், ஆசார மில்லாதவன், தேஜசில்லாதான், ஒழுக்க மில்லாதவன், ஏவற்றொழில் செய்வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தையுடையவர்கள் நீங்களானால் எங்களுக்குப் பார்ப்பாரிடம் இனிச் சண்டையேயில்லை. இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பதுண்மை யானால் உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வந்துப் பார்ப்பாரப் புரோகிதர்களை நீக்கி விடுங்கள்.
திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்
July 23, 2021 • Viduthalai
* சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் ஆகும்.
* திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.
-தந்தை பெரியார் பொன்மொழி
சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?
‘புளுகு’ மலருக்கு பதிலடி!
சென்னை மாநகரம் மீட்கப்பட்டது ராஜாஜியாலா?
21.7.2021 நாளிட்ட ‘தினமலரி’ல் (பக்கம் 11) நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர். எனும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது.
சென்னையை - ஆந்திராவின் தலைநகராக்குவது குறித்த பிரச்சினை அது. என்ன எழுதுகிறது தினமலர்?
ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங் களுக்கும், போலிக் கண்ணீருக்கும் மத்திய சர்க்கார் பணிந்து சென்னையை ஆந்திராவின் தற்காலிகமாக தலைநகராக்கத் தீர்மானித்திருக்க ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததன் பலனாக, “பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது போல, சென்னையைத் தமிழர்களுக்கு கொண்டு வந்தார்” என்று தினமலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் உண்மை நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சென்னை தலைநகரப் பிரச்சினை தொடர்பாக நீதிபதி வாஞ்சு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953 இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமை யும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை” என்பதை வாஞ்சு உதாரண மாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக். 5)
“சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத் தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றும் கூறியுள்ளார். “ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன்.” (பக். 8) அதற்கு உதாரணத்தையும் வாஞ்சு காட்டியுள்ளார். “ஒடிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது” என்கிறார். (பக். 9) “ஆந்திராவின் தலைநகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னையை விட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாத வர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல”. (பக். 10)
“சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36 இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும்“. (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கருநாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங் களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது.சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக். 26)`
சென்னை பிரமுகர்கள் ஆலோசனை
“அனைத்துக் கட்சிக்கூட்டம், வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகரா யர் கட்டிடத்தில் 13.02.1953இல் மாலை 4 மணிக்கு சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.
அக்கூட்டத்திற்கு தந்தை பெரியார், சர்.முகமது உஸ்மான், மேயர் டி.செங்கல்வராயன், மாஜி மந்திரிகள், எம்.பக்தவச்சலம், டி.பரமேஸ்வரன், எஸ்.முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி அய்க் கோர்ட் ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன், லக்கபராய், நஜீர் உசைன், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், மீனாம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கருநாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு அறிக்கை அனுப்புவது என்றும், அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒருமனதாக முடிவு செய்தனர். அதில் மேற்கண்டவர்கள் கையெழுத்திட்டனர். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்திய சர்க்காருக்கு வேண்டுகோள்!
அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம் சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர மாநிலத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக்கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் விருந்தாளியாகக்கூட இருப்பதற்கு அனுமதிப்பதால் அநாவசிய மான தொல்லைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும். ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சவுகர்யமாகவும் நேச மனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்ததால் அநாவசியமான தகராறுகள், சர்ச்சைகள் ஏற்படுகிறது. ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்பகாலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள். ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந் திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிக வும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை மாநிலத்தின் தலைநகராக இருக்கும். ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலை நகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத் தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யா மலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானிக்கப்பட்டது. (‘விடுதலை’, 14.02.1953)
தந்தை பெரியார் வேண்டுகோள்
சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் தந்தை பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதாவது: மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட் டத் தகுந்த காரசாரமான பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது. இந்தக் கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலை காட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாய்ப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத் தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன். வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என் னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறை பாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.நம் காரியம்: நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர் பார்க்கக் கூடுமா?இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்ட டமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும்.ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன் என்றார்.
சென்னை நகரம் தமிழ்நாட்டுக்குரியதே என்பதை வலியுறுத்தி 1.2.1953 அன்று பிற்பகல் சென்னை ராபின்சன் பூங்கா அருகிலிருந்து புறப்பட்டன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்ட அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் அமர்ந்து வர சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது - சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்றும், மொழிவாரி மாநிலம் என்று ஆன பிறகு நிர்வாக வசதிக்காக ஆந்திராவோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் வலியுறுத்திப் பேசினார்.
15.2.1953 சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியிலும், சென்னையில் தற்காலிகமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தை வைத்துக் கொள்ளலாம். அரசு அலுவலகங்களையும் சென்னையில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி வாஞ்சு குழுவின் அறிக்கையை கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக உரிமை பாதுகாப்பு நாள் (22.2.1953) தமிழ்நாடெங்கும் கொண்டாடுவது என்று குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத்துக்கு கறுப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இவ்வளவு நிகழ்வுகளும் (அனைத்துக் கட்சிக்கூட்டம் உட்பட) தலைநகரைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றுள்ளன. இவற்றுள் எதிலும் தலைகாட்டாத ராஜாஜிதான் சென்னையை மீட்டாராம் - சொல்லுகிறது பூணூல் மலரான ‘தினமலர்’. (21.7.2021, பக்கம் 11)
ஒரு எழுபது ஆண்டுகளுக்குள் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வையே தலைகீழாக புரட்டி, பார்ப்பனர்களால் அவர்களின் ஊடகங்களால் திரிக்க முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும். புளுகுப் பூணூல்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
Thursday, 22 July 2021
மதுரை கோயில் நுழைவும் வைத்தியநாதய்யரும்
(ஆலயப்பிரவேசத்தின் முன்னோடி - மதுரை வைத்தியநாதய்யர் என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் நீட்டி முழங்குகிறது உண்மையில் நடந்தது என்ன? ஆலய பிரவேச உரி மைக்கான போராட்டங்கள் வைத்தியநாத அய்யருக்கு முன்பே யாரால் எப்பொழுதெல்லாம் நடத்தப்பட்டு உள்ளன என்பதை விளக்குகிறது இதோ ஆதாரம்)
கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927 இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடு துறை மயூரநாதசுவாமி கோயிலில் நுழையச்சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோயில் நிர்வாகி கள் பூட்டிவிட்டபோதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று மணிக்கதவம் தாழ் திறவாய்' என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினர். 12.8.1928இல் திரு வானைக்கோயிலிலும் 25.6.1928இல் திருச்சி மலைக் கோயிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன (மங்கள முருகேசனின் "சுயமரியாதை இயக்கம்",
229-230). ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக் குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத் துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது (குடிஅரசு, 21.4.1929 : குவெ, 160).
நீதிக்கட்சித் தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக, 1939 இல் தமிழக மெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங் கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில், எம்.சி. ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோ தாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில், அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப் பட்டவருடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் பெரும் ஆரவாரம் * மிக்க அங்கீகாரம், ராஜகோபாலாச் சாரியிலிருந்து காந்திவரைதேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் பெரியாரால் குள்ள நரி' என்று அழைக்கப்பட்ட மதுரை ஏ.வைத்தி நாதய்யர். தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்பு'களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரி, ஜமீன் தாரி ஒழிப்பையும் எதிர்த்தவரும் இவர்தான்.
மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் வைத்தியநாதய்யர் நடத்திவைத்த 'நுழைவும்' கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர். எஸ். நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதி யாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த் தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கரு வறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான் (குஅ, 16.7.1939 : நகரதூதன், 16.7.1939).
நன்றி: பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா (பக்கம் 550-551)
உண்மை இவ்வாறு இருக்க பார்ப்பனப் பத்திரி கைகள் தொடர்ந்து மதுரையில் நடைபெற்றது தான் முதல் கோயில் நுழைவு என்றும் வைத்தியநாத அய்யர் தான் ஆலய நுழைவின் முன்னோடி என்றும் தொடர்ந்து பேசி வருவது கடைந்தெடுத்த பித்தலாட்டம் அல்லவா?
கோவில் நுழைவை எதிர்த்த வைத்தியநாதய்யர்
திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங் காருமாவர்.
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் பக்.644
ஆலயபிரவேசத்தில் சுயமரியாதைக்காரர்கள்
மதுரையில் 30.7.1939 அன்று பேசிய ராஜாஜி கோபாலாச்சாரியார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதி திராவிடர்கள் நுழைந்தமை) காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களும் ஜஸ்டிஸ் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக் கின்றனர்" என்று குறிப்பிட்டார்.
இச்செய்தி 31.7.1939 நாளிட்ட
'சுதேசமித்திரன்' ஏட்டில் வெளியாகி இருந்தது.
(ஆதாரம்: விடுதலை 1.8.1939)