Tuesday 17 August 2021

இந்தியா, இந்து இன்று வந்த பெயர்கள்

 08.05.1948 - குடிஅரசிலிருந்து...

 இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன்றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் தஸ்யூக்கள் என்றும், சூத்திரர் என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக்கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.

No comments:

Post a Comment