இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன?
- கவிஞர் கலி.பூங்குன்றன்
(தமிழர் தலைவர் உரையைத் தழுவியது இக்கட்டுரை )
"இராமாயணம் -இராமன் இராமராஜ்ஜியம்" எனும் தலைப்பிலே 23, 27.3.2018 அன்று இருநாள்களிலும் மாலை நேரத்தில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.
குறுகிய கால அறிவிப்பு எனினும் மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டனர்.
இரண்டாவது சொற்பொழிவில் "பிராமணர்கள்" கடவுளுக்கு மேலே எப்படி தூக்கி நிறுத்தப்படுகிறார்கள்? இராமன் - இராமராஜ்ஜியம் என்ற சொல்லாடல்கள் உச்சத்தில் இருக்கும் காலக்கட்டம் இது ; இவற்றின் மீதான காதல் அல்லது உச்சக்கட்ட மதிப்பு என்பதெல்லாம் மக்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சியின் வெளிப் பாடல்ல; மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைங்கர்யம் இது. இராமராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறி அதிகார பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்திலிருந்து இராம ராஜ்ஜிய ரத ஊர்வலம் புறப்பட்டு பல
மாநிலங்களின் வழியாக செல்லும் திட்டத்தோடு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அவர்கள் காலடி வைத்த போது, ஈரோட்டுப் பூகம்பம் வெடித்து, பேரச்சத்தை ஊட்டியது.
இராமராஜ்ஜியம் என்றால் வருணாசிரம ராஜ்ஜியம், சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிய ராஜ்ஜியம்தானே!
இந்த அடிவேரின் இரகசியத்தை உணர்ந்ததால் அல்லவா திராவிடர் கழகத் தலைவர் ஓர் அறிவிப்பினைக் கொடுத்தார்.
"இராமராஜ்ஜியம்" என்றால் பார்ப்பனர் களின் ராஜ்ஜியம் தான் என்பதற்குப் பல ஆதாரங்களை அடுக்கிக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்கள்.
அந்த உரையைத் தழுவி இந்தக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.
வேதம் என்ன கூறுகிறது?
தெய்வாதீனம் ஜகத் சர்வம்,
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்
தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத என்பது ரிக் வேதம்.
(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் - அவனைத் தொழ வேண்டும்.
பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்திற் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.
(மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100)
பிராமணன் பிறப்பானது தருமத்தின் அழிவில்லாத உருவமாயிருக்கிறது. தருமம் விளங்கும் பொருட்டு உற்பவித்த அந்தப் பிராமணனின் ஞாநத்திலே மோக்ஷத்திற் குரியவனாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 98)
.........
கிருஷ்ண அவதாரக் கற்பிதம்
"புத்தர்பிரான்" அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப் பட்டது. காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே 'கிருஷ்ண லீலா' கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக்கட்டப்பட்டது."
('என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தொகுதி -4, பக்கம் 210)
மகா பாகவதம் செப்புவது என்ன?
ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாச்சாரியார் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. (எண்பத்தாறாவது அத்தியாயம், தசம ஸ்கந்தம், பக்கம் 351-352)
"ஸ்ரீகிருஷ்ணன் எதிரே தோன்றிய தபசியான நீ ஒரு பெண் கணங்களை விசேஷமாய்ப் பூஜிக்காமல் மாதவனை மாத்திரம் விசேஷமாய்ப் பூஜித்தபடியால் அந்தப் பகவான் அம்மறையோனை நோக்கி இந்த ரிஷிகள் எந்த ஜலத்தைத் தொடுகிறார்களோ, அதுவே புண்ணிய தீர்த்தமாகும் படிச் செய்யத் தக்கின மகிமையுடையவர்கள், சகல தேவர்களுடைய சொரூபம் யான்.
என்னுடைய சொரூபம் வேதம், அந்த வேதங்களுடைய சொரூபம் மறையோர். அவர்களுக்கு மிஞ்சினவர்கள் உலகி லில்லை. அவர்கள் சாமானிய மானிடர் களென்றெண்ணி அவர்களை பழித்து என்னைப் பூஜித்ததனால் ஒரு பயனையு மடைய மாட்டார்கள். அந்த வேதியரை பூஜிக்கிறவன்தான் ஞானி அவனே எனக்கு மிகவும் இஷ்டனென்று ஸ்ரீபகவனால் ஆக்கியாபிக்கப்பட்டு அந்தச் சுவாமியின் எதிரில்தானே அந்த ரிஷிகளை அநேக விதமாய்ப் பூஜித்து உபசரித்து சந்தோஷப் படுத்தினார்.
........
(சிங்கப்பூர் அறிஞர் அ.சி.சுப்பய்யா அவர்களின் 'சுந்தரமூர்த்தி நாயனார்' கிரிமினல் கேஸ்)
கம்ப இராமாயணம்
வால்மீகி தனது இராமாயணத்தில் இராமனை சாதாரண மனிதனாகப் படைத்திருக்க, கம்பனோ மிகப் பெரிய அளவில் உயர்த்திப் பிடித்தான்; கடவுளுக்கு மேல் பார்ப்பனர்கள் என்றும் கூச்சமின்றிப் பாடி சென்று இருக்கிறான்.கரிய மாலினும் கண்ணுத லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமோ ரைந்தினும் மெய்யினும்
பெரிய ரந்தணர் பேணுதி யுள்ளத்தால்
அதாவது, திருமால், சிவன், நான்முகன், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக என்றும்,
2 அந்த ணாளர் முனியவு மாங்கவர்
சிந்தை யாலருள் செய்யவுந் தேவரில்
நொந்து ளாரையும் நொய்துயர்ந் தாரையும்
" மைந்த எண்ண வரம்புமுண் டாங்கொலோ
அதாவது அந்தணர்கள் கோபத்தால் அழிந்தவர்களையும், அந்தணர்கள் அருளினால் செல்வாக்குப் பெற்றுயர்ந்தவர்களையும் கணக்கிட முடியாது என்றும்,
3 அனைய ராதலின் அனையஇவ்வெய்யதீ
அதாவது, அந்தணர்கள் இத்தனையு முடையவராக இருத்தலினால், தீவினை செய்யாது உயர்ந்தவர்களாகிய அவ்வந்தணர் பாதங்களில் உன் தலை படும்படியாக வணங்கி, அவர்களைப் புகழ்ந்து அவர்களிடம் இனிய சொற்களைக் கூறி அவர்களிடும் கட்டளைப்படி நடப்பாய் என்றும்,
4. ஆவ தற்கும் அழிவதற் கும்மவர்
ஏவ நிற்கும் விதியுமென் றாலினி
யாவ தெப்பொருள் இம்மையு மம்மையுந்
தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே
ஒருவன் செல்வம் அடைவதற்கும்
அழிவதற்கும் காரணமான விதியும் அந்தணர்களின் கட்டளைப் படியேதான் நடக்கும்; ஆகையால் இப்பிறப்பிற்கும், மறுபிறப்பிற்கும் (அவர்களை விடுத்தால்) வேறு பயன் ஏது? எனவே, அந்தணர்களை வணங்குதல் தேவர் களை வணங்குதல் போலச் சிறந்ததாகும் என்று கூறி அந்தணர் (பார்ப்பனர்) பெருமையை இவ்வாறு கூறுகிறார். போதுமா? இன்னும் வேண்டுமா?
(குடிஅரசு - கட்டுரை - 12.02.1944)
...............
சங்கராச்சாரியார் பார்வையில்
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நூலை வெளியிட்டு நூலோர் வழிவந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது
"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்
சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப்
பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி
செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான்
நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட
போதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு.
அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த
காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட
அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்
(நக்கீரன் 5.112002) இப்பொழுது சொல்லுங்கள் -
இந்து மதம் என்றால், இராமன் என்றால், அதன்
பொருள் என்ன?
பிராமணாள் நமது கடவுள் - இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?
- விடுதலை ஞாயிறு மலர், 31.3.2018


“ஆச்சாரியார்’’


