வரலாற்றுச் சுவடுகள்
தஞ்சையில் மகாத்மா சில பார்ப்பனரல்லாத கனவான்களிடம் பேசிய பிறகு, தான் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயமான பூசலைப்பற்றி முன்னையை விட அதிகமாகத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டு அதற்குமேல் வருணாசிரமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்:-
அவ்வாறு பேசியிருப்பது, தேசியப் பார்ப்பனரல்லாதார் என்போர் பார்ப்பனரை விடுவதற்கும் தைரியமில்லாமல், பார்ப்பனரல்லாதாரை விடுவதற்கும் தைரியமில்லாமல் இரண்டுபேரையும் ஏமாற்ற நினைத்துக் கொண்டு, அங்கொருகால் இங்கொருகாலாக வைத்துக்கொண்டு இருப்பது போல், மகாத்மாவின் பிரசங்கமும் இரண்டு பேரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவே காணப்படுகிறது.
அதில் மகாத்மா குறிப்பிட்டிருப்பதாவது :- உயர்வு தாழ்வு என்பதே மனிதனுக்கு எந்த நிலையிலும் கிடையாது என்றும், அதிலும் பிறவியில் உயர்வு தாழ்வு சுத்தமாகக் கிடையாது என்றும் சொல்லி இருக்கிறார்.
பார்ப்பனர்கள் தங்களை உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்ளுவார்களானால், அதை அழிக்கத் தானும் பார்ப்பனரல்லாதாருடன் சேர்ந்து கொள்ளுவேன் என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் வருணாசிரமம் உண்டு என்றும், யார் முயற்சித்தாலும் அதை ஒழிக்க முடியாது என்றும், அது நமது வாழ்க்கைக்கு அவசியமானது என்றும், வருணாசிரமம் என்பது அடக்கம் என்றும் சொல்லியிருக்கிறார்.
பிறக்கிறபோது எல்லோரும் சமமாய்ப் பிறக்கிறார்கள் என்றும், ஆனால் பிறவியிலேயே தகப்பன் குணம் மக்களுக்கு வருகிறது என்பது மாத்திரம் உறுதி என்றும், இதை ஒப்புக்கொள்ளுவது வாழ்வை நடத்த அனுகூலமானது என்றும், ஆகவே இது தான் நான் சொல்லும் வருணாசிரம தர்மம் என்றும், நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வருணாசிரம தர்மத்தை ஒழிக்க முயலுவதில், நான் சொல்லும் வருணாசிரமத்தையும் ஒழித்து விடாதீர்கள் என்றும், பார்ப்பனனின் உயர்வை ஒழிக்க வேண்டியது தான் என்றும், ஆனால் அவனுடைய கல்வி அறிவுக்கு மரியாதை செய்யவேண்டியது தான் என்றும், இதைச் செய்துதான் தீருவேன் என்றும் பேசியிருக்கின்றார்.
ஆகவே அவர் தஞ்சையில் பேசிய வருணாசிரம வியாக்கியானத்தில், இவைகளைப் பொருத்தவரை ஆராயலாம் என்பதாக எடுத்துக்கொண்டோம்.
இவைகளுக்குச் சமாதானம் எழுதுமுன் ஒரு விஷயத்தை முதலில் தெரிவித்து விடுகிறோம். அதாவது மகாத்மா தம்மை இந்து என்று சொல்லிக்கொண்டு, இந்துமதம் ஆதாரம் என்பதான ஆரியர் கொள்கைகள் கொண்ட ஆதாரங்களையே தாம் பார்த்தும் கேட்டும் அனுபவத்தில் பழகியும் வந்ததோடு, தாமும் ஆரியர் ஆகிவிட்டார், அல்லாமலும் தமிழரின் பழக்க வழக்கம், தமிழரின் கொள்கை முதலியவைகளைக் கொண்ட ஆதாரங்கள் ஒன்றையும் பார்த்தோ, கேட்டோ, பழக்கத்தில் நடத்தியோ அனுபவமில்லாதவர். அதோடு ஆரியமே இந்தியா முழுதும் என்றும் அந்தக் கொள்கையே இந்தியா முழுதும் பொருந்தி இருக்கிறதென்றும் கருத்துக் கொண்டவர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இந்த நிலையில் நாம் சொல்லுவதென்னவென்றால், இந்துமதம் என்பதாக ஒரு மதமேயில்லை என்றும், ஆரியர் கொள்கை பழக்க வழக்க ஆதாரங்கள் நமக்குக் கொஞ்சமும் பொருந்தியது அல்லவென்றும், நமது நாட்டுக்குக் கிறிஸ்துவ மதம், மகமதிய மதம் முதலியவைகள் வந்ததுபோல் ஆரிய மதமும் ஒரு காலத்தில் புகுத்தப்பட்டதென்றும், கிறிஸ்துவர்களும் மகமதியர்களும் தங்கள் மதத்தைப் பெருக்க நாட்டில் அதைப் புகுத்தியது போல் கூட அல்லாமல் ஆரியர்கள் தங்களுடைய சொந்த வாழ்வைப் பெருக்கிக் கொள்ளும் சுய நல எண்ணத்தோடேயே. அதாவது அய்ரோப்பியர்கள் இந்தியாவை ஆளுவது என்பது எப்படி இந்திய நன்மைக்கு என்று சொல்லுவதானாலும், அய்ரோப்பியர் வாழ்வதற்கும் இந்தியாவைச் சுரண்டுவதற்காக பிரிட்டிஷ் வியாபாரம் ஆட்சியின் பேரால் நடைபெறுகிறதோ, அதுபோலவே ஆரியர்கள் வாழ்வதற்கு மதத்தின் பேரால் புரோகித வியாபாரம் என்பது நடைபெறுகிறது என்பதே நமது முடிவு. மகாத்மா மதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் நமக்கு வருணாசிரமத்தை வியாக்கியானம் செய்வது எப்படி இருந்தாலும் அது ஆரியப் பிரச்சாரம் என்று தான் சொல்லுவோம்.
ஆனால் மகாத்மாவின் பிரச்சாரத்திற்கும் சங்கராச்சாரியார் செய்த பிரசங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்ப்போமானால் அரசியலில் நடக்கும் பார்ப்பன பிரச்சாரத்தில் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்திக்கும் சீனிவாசசாஸ்திரிக்கும் உள்ள வித்தியாசங்கள் எவ்வளவோ அவ்வளவு தான். ஆகவே இரண்டு பேர்களின் பிரச்சாரமும் ஒரே கொள்கையைக் கொண்டதும் வியாக்கியானத்தில் சிறிது வித்தியாச முடையது மாத்திரமல்லாமல் வேறல்ல.
இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதாகத் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய்விட்டது.
சாமி விவேகானந்தர் போன்ற பெரியாராலும், நம் தமிழ்நாட்டு ஆராய்ச்சி வல்லவர்களான சுவாமி வேதாசலம் ஸ்ரீமான் கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றவர்களாலும் இதே அபிப்பிராயங்கள் வெகு நாள்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நமது நாட்டில் பார்ப்பனர்களுக்கே செல்வாக்கு பலவழிகளிலும் அதிகமாயிருப்பதால், இப்பேர்ப்பட்ட அபிப்பிராயங்களைத் தமிழ் பத்திரிகைகள் வெளியிட பயப்படுகின்றன. இவ்வபிப்பிராயம் வெளியிடுபவர்களும் அடக்கி மிதித்துவிடப்படுகின்றார்கள். எனவே, மக்களுக்கு இவ்வபிப்பிராயங்கள் மிகப் புதியதுபோல் காணப்படுகிறது.
ஆரியக் கொள்கைப்படியும் இந்துமதம் என்பதன் தத்துவப்படியும் தான் மகாத்மா நமக்கு வருணாசிரமத்தைப் போதிக்கிறாரே ஒழிய, உலகப்பொது இயல்பின் படியாவது தமிழ்நாட்டின் நிலைமைப்படியாவது தமிழ் மக்களுக்கு நன்மை உண்டாகவாவது அவர் போதிக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த விவகாரம் இப்படி இருந்தாலும், அவர் சொல்வதில் ஏதாவது ஒன்றுக்கொன்று பொருத்தமிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
குணத்திலாவது பிறவியிலாவது உயர்வு தாழ்வு இல்லை என்கிறார் ஒருபக்கத்தில்; மற்றொரு பக்கத்தில் பிராமணனை அவருடைய கல்விக்கு மரியாதை செய்துதான் தீருவேன் என்கிறார்.
வருணாசிரமம் பிறவியில் ஏற்படுவதில்லை, குணத்தில் ஏற்படுகிறது என்கிறார் ஒரு பக்கத்தில்; குணம் பிறவியிலேயே ஏற்படுகிறது என்கிறார் மற்றொரு பக்கத்தில்.
பார்ப்பனர் உயர்வு என்பதை அழிக்க வேண்டும் என்கிறார் ஒரு பக்கத்தில்; அவனுடைய அறிவையும் தியாகத்தையும் புகழ்ந்தாக வேண்டும் என்கிறார் மற்றொரு பக்கத்தில். வருணாசிரமத்தை யாரும் ஒழிக்க முடியாது என்கிறார் ஒரு பக்கத்தில்; வருணாசிரமத்தை ஒழித்துவிடாதீர்கள் என்கிறார் மற்றொரு பக்கத்தில். இது இப்படி இருக்க, இதன் தத்துவங்களைப் பற்றிச் சற்று கவனிப்போம்.
பார்ப்பனன் உயர்வு தாழ்வு கற்பித்தால் அதை ஒழிக்கத் தானும் பார்ப்பனரல்லாதாருடன் சேர்ந்து கொள்ளுவேன் என்கிறார். கோயில், பள்ளிக்கூடம், தெரு, ஆகாரம் அருந்துமிடம் முதலியவைகளில் உள்ள பிரிவினைகள் எதைக் காட்டுகின்றன? இவைகளை ஒழிக்க மகாத்மா என்ன முயற்சி எடுத்தார்? குரு குல விவாதத்தின் போதே தமிழ்நாட்டின் நிலைமை தெரிந்திருக்கும். இதுவரை ஒரு வார்த்தையாவது அதைப்பற்றி நமக்குச் சொன்னாரா? முயற்சியாவது எடுத்தாரா? பிறவியில் குணம் வருகிறது என்கிறார் இதை ஒப்புக்கொள்ளுவதானால் மகாத்மாவின் மக்களை மகாத்மா என்று தானே சொல்லியாகவேண்டும்? மகாத்மாவின் மக்களில் ஒருவர் தப்புவழியில் நடப்பதாக மகாத்மாவே கூறியிருக்கிறார். அப்படியிருக்க எப்படி எல்லோரும் மகாத்மாவாகக்கூடும்? பிராமணன் அதிகம் படித்தவன், அறிவாளி, தியாகி என்று ஒப்புக்கொண்டால், பிராமணன் மக்கள் எல்லாம் இந்த முறைப்படிக்கு அப்படித்தானே சொல்லியாக வேண்டும். பார்ப்பனரல்லாதாருக்கும் அவரவர்கள் தகப்பன் குணம் தானே இருக்கும்? இந்த முறையில் தானே ஜாதி பிரித்திருக்கிறதாகப் பார்ப்பன சாஸ்திரிகளும் சொல்லுகிறார்கள். இப்படியிருக்கும் போது பார்ப்பனர் உயர்ந்தவர்கள் அல்ல என்று மகாத்மா எப்படி சொல்லக்கூடும்? நம்முடன் எப்படி சேர்ந்து அவ்வேற்றுமைகளை ஒழிக்க வேலை செய்யக்கூடும்?
வருணாசிரமம் என்பது அடக்கம் என்கிறார். இது எந்த அகராதியில் இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அப்படியானால் மகாத்மா எந்த நிலையில் வருணாசிரமத்தை அனுபவிக்கிறார்? அவர் வாழ்விற்கு அவருடைய வருணாசிரமம் என்ன உதவி செய்கிறது? அந்த வருணாசிரமத்தை ஒப்புக் கொள்ளாதவனுக்கு என்ன கெடுதி செய்கிறது என்பவைகளை எல்லாம் யோசித்துப் பார்த்தால் மகாத்மா சொல்லுவதில் ஏதாவது உண்மை இருப்பதாக நினைக்க முடியுமா? அப்படியில்லாமல் இரண்டு பேரையும் கண்டிப்பது போலவும், இரண்டு பேரையும் திருப்தி செய்வது போலவும், வழ வழ கொழ கொழ என்று பேசுவது என்ன பிரயோஜனத்தைக் கொடுக்கும் என்பது நமக்கு விளங்கவில்லை. எனவே, நாம் ஒரு விஷயம் மாத்திரம் அதிலிருந்து எடுத்துக்கொள்வோம். அதாவது மகாத்மா இப்போது அனுஷ்டானத்தில் உள்ள வருணாசிரம தர்மம் அக்கிரமமானது, அதை அழிக்க வேண்டியது என்று சொல்லிவிட்டார். இந்த அளவுக்கு நாம் ஒரு விதத்தில் திருப்தி அடைகிறோம். ஆகவே இதை அழிக்க நாம் முற்பட வேண்டியதுதான். இந்த வருணாசிரமம் இப்போது நமது நாட்டில் பார்ப்பது, கேட்பது, படிப்பது, நடப்பது, சாப்பிடுவது, சுவாமி கும்பிடுவது, கிட்ட வருவது, தெருவில் நடப்பது முதலிய காரியங்களில்தான் இருக்கிறது. இதைத்தான் சாஸ்திரிமார்களும், ஆச்சாரிமார்களும், வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் முதலியவைகளில் இருப்பதாகச் சொல்லி அமலில் வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் இதை ஒழிக்கிற வேலையில் நாம் எல்லோரும் வேலை செய்ய வேண்டியதே தவிர, வேறு விவகாரம் வேண்டியதில்லை. மற்றபடி மகாத்மா சொல்லும் வியாக்கியானங்களைப்பற்றி நாம் காது கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பின்னால் ஏதோ விரிவாய்த் தெரியப்படுத்துவதாக மகாத்மா சொல்லியிருக்கிறபடிக்கு அதை எதிர்பார்க்கிறோம் – “திராவிடன்” துவக்கும்படி கனம் முஹம்மத் உஸ்மான் சாகிபைக் கேட்டுக் கொள்ளுகையில் கான்பகதூர் பி. கலிபுல்லா சாகிப் செய்த பிரசங்கத்தின் சாரமாவது:- 1917ஆம் வருஷம் மஜ்லிசுல், உலமா ஏற்பட்டது. தென்னிந்தியாவிலும் மலேயா முதலிய நாடுகளிலும் வசிக்கும் முஸ்லிம்களை எல்லாம் ஒருங்கு சேர்த்து சமூக, மத ஆசார விஷயங்களைப்பற்றி வாசிப்பதற்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைக் கவனிப்பதற்காகவும் இத்தகைய ஸ்தாபனம் ஒன்றிருக்க வேண்டுமென்ற எண்ணம் காலஞ் சென்ற ஜனாப் ஜமால் மொகிதீன் சாகிபின் மனதில்தான் முதன் முதலாக உதித்தது. அவர் அழகிய கட்டடத்திற்காக 60,000 ரூபாய் கொடுப்பதாக வாக்களித்ததுடன் மாதம் 500 ரூபாய் நன்கொடை கொடுப்பதாக சாஸ்வத நிதியும் ஏற்படுத்தினார்.
மதரஸயே ஜமாலியா என்ற அரபிக்கல்லூரிக்குக் காலஞ் சென்ற ஜமால் மொகிதீன் 7, 8 லட்சரூபாய் முதல் ஒதுக்கி வைத்திருக்கின்றார். அவரது வாழ் நாட்களில் ஏற்படுத்தப்பட்ட தர்மங்களை நீடித்து நடத்துவதற்காக மற்றும் 10 லட்ச ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. துருக்கி செம்பிறைச் சங்க தூதரகக் கட்டடத்திற்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த முஸ்லிம் அவர் ஒருவர்தான். தர்மஞ் செய்வதிலேயே அவர் தம்வாழ்நாள் முழுவதையும் கழித்த பெரியவர். இதனால் இக்கட்டடத்திற்குப் பணசகாயம் செய்தவருடைய பெயரையே வைப்பது தகுதியுடையதாகும். இக்கட்டடத்தைத் திறந்து வைத்து சங்கத்தையும் நம்மையும் ஆசீர்வதிக்குமாறு கனம் முஹம்மத் உஸ்மான் சாகிபவர்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 25.09.1927