அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (301)

2022 அக்டோபர் 01-15 2022 அய்யாவின் அடிச்சுவட்டில்

இந்துத்துவ சக்திகள் ஒன்றியத்தில் பாஜ.க. ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்தி பசுவதைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி மாடுகள் ஏற்றிச் சென்ற வண்டியை வழிமறிப்பது, கடைகளை மிரட்டுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதிகளைச் சேர்ந்த மாட்டிறைச்சி வியாபாரிகள் என்னை பெரியார் திடலில் நேரில் சந்தித்தனர்.
5.8.2000 அன்று பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்து, பேரணி சென்னை பெரியார் திடலில் புறப்பட்டு ஈ.வெ.கி.சம்பத் சாலை, டவுட்டன், பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக புளியந்தோப்பு பகுதியில் டிகாக்ஸ்டர் சாலையில் முடிவுற்றது. பேரணி முடிவில் கருத்தரங்கம் எனது தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையும், வாணியம்பாடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் சமது, இந்தியக் குடியரசுக் கட்சியின் (கவாய் பிரிவு) அகில இந்திய செயலாளர் டாக்டர் சேப்பன், அய்க்கிய ஜமாஅத் உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜே.எம்.ஹாரூன், தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், இந்திய குடியரசுக் கட்சி (பிரகாஷ் அம்பேத்கர்) அகில இந்தியப் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான செ.கு.தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ ஆசிரியர் வி.மீனாட்சிசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக நான் உரையாற்றினேன்.