கட்டுரை – 

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே-16-31,2023

குடியாத்தம் தேன்மொழி

இந்திய வரலாறு பல கசப்பான உண்மைகளை தன்னகத்தே கொண்டது. பல இழிவுகளைச் சுமந்தது. மனிதநேயம் என்ற ஒன்றையே மறந்து மக்கள் தன் இனத்தையே இழிவாக நடத்திய வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு வரலாறு 200 ஆண்டுகால முந்தையது. மதத்தைக் காரணம் காட்டி சாதியைக் காரணம் காட்டி மிக மிக மோசமான நிலையில் மனிதர்கள் நடத்தப்பட்டார்கள் என்பது வேதனையான செய்தி எனில் பெண்கள் மானமிழந்து வாழ்ந்தனர் என்பது கொடுமையான நிகழ்வாக இருக்கிறது.

அரை நிர்வாணமாக மக்கள் இடுப்புக்கு மேலே ஆடை அணியக்கூடாது என்று பெண்களும் ஆண்களும் ஒடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, விரட்டப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு இருந்தார்கள் என்ற வரலாறு துயரத்தைத் தருவதாக இருக்கிறது.

தங்கள் மானம் காக்க சுயமரியாதை காக்கத் தெரியாதவர்களாய் வாழ்ந்தும் பின்னாளில் மானம் காக்கவும் மக்கள் நடத்திய போராட்டமே தோள் சீலைப் போராட்டம் என்பது. தென் திருவிதாங்கூர் பகுதியான குமரி மாவட்டம் இந்திய வரலாற்றில் மிக வலுவான ஒரு மனித உரிமை போராட்டம் நடந்த இடம். அங்கே உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் வந்தேறிகளான ஆரியர்கள். உழைக்கும் மக்களிடம் இருந்து அனைத்தையும் சுரண்டுபவர்களாக அவர்கள் இருந்தார்கள். இதற்கு மன்னர்களையும் அதிகாரிகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் நம்பூதிரிகள் என்று அழைக்கப்பட்டனர். கல்வி முதல் அனைத்தும் தங்களது ஆக்கியதோடு அக்கல்வி மற்றவருக்குச் சேராமல் பார்த்துக் கொண்டனர் என்பதும் முக்கியமான வரலாறு.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த நாயர்கள் சூத்திரர்கள் ஆயினும் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர். அதே சமயம் நம்பூதிரிகளுக்கு அடங்கியிருந்தனர். அதாவது இரவு நேரத்தில் நம்பூதிரி இவர்கள் வீட்டின் பின்பக்கம் வந்தால் இவர்கள் வீட்டுப் பெண்களை அவர்களிடம் ஒப்படைத்து ஒதுங்கிக் கொள்ளும் கீழ்த்தரமான வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். .நாடார் சமூகத்தினர் சாணார் சமூகத்தின் ஒரு பிரிவினர். இவர்கள் ஜாதிக்குப் புறம்பானவர்கள். இவர்களோடு ஈழவர், புலையர் போன்று பல ஜாதிகள் இழி நிலையில் இருந்தனர். இவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள். இவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்தார்கள். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.

அடிப்படை வசதிகள் கூட இவர்களுக்குக் கிடையாது. காலணி அணியக்கூடாது. இவர்கள் குடைகளைப் பயன்படுத்தக்கூடாது. மாடி
வீடு கட்டக்கூடாது. ஓட்டு வீடு கூட கூடாது. பெண்கள் பொன் நகை அணியக்கூடாது. இதையெல்லாம் தாண்டி இவர்கள் இடைக்கு மேல் உடை உடுத்தக்கூடாது. பெண்கள் மார்பகங்களை மூடக்கூடாது ஜாதியின் பெயரால் எவ்வளவு மோசமான காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றது.

ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பது உடையும் இருப்பிடமும். இது இந்த மக்களுக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இப்படி அடிப்படை உரிமைகளைக்கூட பெறாமல் மக்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பதும் மேலாடை இல்லாமல் பெண்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பதும் அதிர்ச்சியான வேதனையான செய்தியாக இருக்கிறது. அதைவிட கொடுமை ஆணுக்கு தலைக்கும் பெண்ணுக்கு முலைக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதையும் அம்மக்கள் செலுத்தி கொண்டு இருந்தார்கள்.

மனித இனம் மற்றொரு மனிதனை ஆடையின்றி பார்த்துக் கொண்டிருந்தது. ஆடை மறுத்து கொடுமை செய்து கொண்டிருந்தது. இது இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத அவலமாய். ஆதிக்க ஜாதிகள் நம்பூதிரிகளோடு சேர்ந்து நாயர் இன மக்களும் அடித்தட்டு மக்களுக்கு ஆடை சுதந்திரம் தரக்கூடாது என்பதில் உறுதியாக நின்றனர்.

1806 ரிங்கல் தவுபே அய்யர் என்பவர் கிறிஸ்துவம் பரப்ப குமரி மண்ணுக்கு வந்தவர், மேலாடை இன்றி இருந்த பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு அவர்களுக்கு குப்பாயம் எனும் ஆடை கொடுக்கின்றார். அந்த ஆடைக்காகவே அன்று ஏராளமான பெண்கள் மதம் மாறி கிறிஸ்துவத்தைத் தழுவி இருக்கின்றார்கள். கிறிஸ்துவக் கொள்கை கோட்பாடுகளால் மதம் மாறவில்லை. ஜாதிய இழிவில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள மதம் மாறினார்கள். தங்கள் திறந்த மார்பகங்களை மறைக்க வழி கிடைத்ததே என்று மதம் மாறினார்கள். மதம் மாறிய பெண்கள் மார்புகளை மறைத்து ஆடை அணிந்தனர். அதைக் கண்டு இந்துப் பெண்களும் மார்பை மறைத்து ஆடை அணிந்தனர் அதோடு நிற்காமல் நாயர் பெண்களைப் போன்று தோள் சீலையும் அணிந்தனர்.

இதை எதிர்த்தவர்கள் போராட்டம் நடத்தியவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்த பெண்களுமே. தங்களுக்கு இணையாக ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் தோள் சீலை அணிவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதை கலாச்சார கேடாகக் கருதி அவர்கள் புகார் அளிக்கின்றனர்.

ஒரு நாயர் பெண்மணி மார்புகளை மறைத்துக்கொண்டு மகாராணியைக் காண அரண்மனை சென்ற பொழுது அந்த மகாராணி இவர் மார்பகத்தை மறைத்து இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பணியாளர்களை விட்டு அந்தப் பெண்ணின் முலைகளையும் வெட்டி வீசி உள்ளதாக james Fordes â¿Fò oriantal memorial.. London (1836) என்ற தன் நூலில் ஆதாரமாகத் தந்துள்ளார் .ஆதாரம். John Henry Grouse â¿Fò ‘A voyage to the East Indies’.
“கேரள சரித்திரத்தின் இருளடைந்த ஏடுகள்” என்ற மலையாள நூலின் ஆசிரியர் இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை இன்னுமொரு தகவலை தருகிறார்.தங்கள் மார்பகத்தை மறைத்து ரவிக்கை அணிந்து கோவிலுக்கு வந்த நாயர் பெண்ணின் ரவிக்கையை கிழிக்க சொல்லி உத்தரவிட்டது கொச்சி அரச குடும்பத்து ராணி.அதற்கும் மேலாக யாராவது ரவிக்கை அணிந்து கோவிலுக்கு வந்தால் அவர்களின் ரவிக்கையை கிழிக்க உயர்நிலையில் இருந்த நாயர் சமூகத்து இளைஞர்களே நியமிக்கப்பட்டனர்.

ஆனாலும் ரிங்கல் தவுபே முயற்சியால் பெண்கள் மதம் மாறி மேலாடை அணிந்தனர். அதே சமயம் ஆதிக்க ஜாதியில் புகாரினால் தோள் சீலை அணிய மட்டும் தடை விதிக்கப்பட்டது. மார்பினை மட்டும் மறைக்க உரிமை வழங்கப்பட்டது. இந்த உரிமை ஆதிக்க ஜாதிகளுக்கு மனதைத் திருப்தி செய்யாததால் மீண்டும் மீண்டும் கலவரம் ஏற்படுத்தினர். 1822 கிறிஸ்துவ நாடார் பெண்கள் மேல் ஆடை அணிந்து ஆலயம் சென்ற பொழுது அவர்கள் மேலாடைகளை அறுத்து அவைகளை மரங்களில் கொடி போல தொங்கவிட்டு நாடார் இனப் பெண்களை இழிவு படுத்தியவர்கள் நாயர் இன ஆண்கள்.

திருவிதாங்கூர் மகாராஜா ஆண்டுக்கு இருமுறை கடற்கரை ஆறாட்டு விழாவிற்குச் சென்றால் அவர் செல்லும் பாதையில் பல நூறு பெண்கள் திறந்த மார்புகளோடு கையில் விளக்கேந்தி அரசரின் பின் நடக்க வேண்டுமாம். எவ்வளவு பெரிய பெண் இழிவு! பல ஆண்டுகளாக இந்த இழிவு தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த வழக்கம் ஒழிவதற்காக மன்னரிடம் வேண்டியது மிஷினரிகளே. அதன் பின்னரே மன்னர் இந்த வழக்கம் பின்பற்ற வேண்டியதில்லை என்று ஆணை வெளியிட்டார்.

ஆதாரம் (குமரி மண்ணில் கிறிஸ்துவம்)

இப்படிப்பட்ட இழிவுகளை எல்லாம் அகற்றப் போராடியவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரிகள் என்பது வரலாறு. அவர்கள் கொடுத்த ஆதரவும் தைரியமும்தான் பெண்களை மேலாடை அணியப் போராட வைத்தது என்றால் மிகையாகாது. வைகுண்ட அய்யர், இராமன் தம்பி போன்றோர் போராடினாலும் பெரும் பங்காற்றியது கிறிஸ்துவ மிஷனரிகளே.

மிஷனரிகள் கொடுத்த ஆதரவு பெண்களுக்கு மிகப்பெரிய பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. 43 ஆண்டுகால போராட்டம் பெண்கள் மார்பகம் மறைத்து ஆடை அணியவே உரிமை தந்தது. நாயர் இனப் பெண்கள் போல தோள் சீலை அணிய உரிமை தரவில்லை. ஆனால், நாடார் இனப் பெண்கள் தாங்களே அந்த உரிமையை எடுத்துக்கொண்டனர் .அவர்களைத் தொடர்ந்து ஈழவர், புலையர், பறையர் இனப் பெண்கள் மார்பை மறைக்கத் தொடங்கினர். மேல் ஜாதிப் பெண்களைப் போல தோள் சீலை அணிய உத்தரவு வராத போதிலும் பெண்கள் தோள் சீலை அணிந்து துணிந்து வெளியே வந்ததுதான் தோள் சீலைப் போராட்டத்தின் வெற்றியாக அமைந்தது.

இந்த அரை நூற்றாண்டு காலப் போராட்டம் வெற்றியைத் தேடித் தந்தது என்றாலும் மிகப்பெரிய உண்மையைச் சொல்கிறது.
மனிதகுலம் எப்பொழுது எல்லாம் மனித நேயம் தாண்டி மதம் என்ற போர்வையில் ஜாதிய வண்ணம் கொண்டு அடுத்தவரைக் கொடுமை செய்தாலும், அந்த இழிநிலையைத் துடைக்கவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீரியத்துடன் போராட வேண்டும் என்ற மிகப்பெரிய உண்மையை சொல்கிறது இந்த தோள் சீலைப் போராட்டம். அங்கே மதங்களைத் தாண்டி மனிதர்கள் இணைந்ததால் ஆதிக்க ஜாதிகளை எதிர்க்க முடிந்தது வெற்றியையும் சுவைக்க முடிந்தது. இந்த ஆண்டு தோள்சீலைப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு. தங்கள் மானம் காக்க தோள்சீலைப் போராட்டம் நடத்திய அத்தனை மகளிருக்கும் வாழ்த்துகள்…
(

கருத்து உதவி : தோள்சீலைப் போராட்டம்
– கொல்லால் எச். ஜோஸ்)