திருவனந்தபுரம்,மே22- கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் உட்பட 21 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகிய கே.ராதாகிருஷ்ணனுக்கு முதல்முறையாக தேவசம்போர்டு துறை வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கோயில்களில் அர்ச்சகராக பணியாற்ற முதல்முறையாக கேரள மாநில பினராயி விஜயன் அரசு உத்தரவிட்டது. இந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேவசம் போர்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பாரம்பரியக் கோயில்கள், சபரிமலை அய்யப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு கே.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tuesday, 25 May 2021
Thursday, 20 May 2021
பல பகுதிகளின் சொற்கள் ஒன்றிணைந்து உருவானதே தமிழ்
Monday, 17 May 2021
நவபாரத சிற்பிகள் 'சி.என்.அண்ணாதுரை' நூல் விமர்சனம்
இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘பப்ளிகேஷன் டிவிஷன்’ ‘நவபாரத சிற்பிகள்’ என்ற தலைப்பில் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டு வருகிறது, அந்த வரிசையில் சி.என்.அண்ணாதுரை என்ற பெயரில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பி.சி. கணேசன் என்பவரை கொண்டு எழுதி நூலாக வெளியிட்டு உள்ளது.
பக்கங்கள் : 226
நூலாசிரியர் காங்கிரசை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வண்ணமே நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், பெரியார், அண்ணாவைப் பற்றி எழுதியுள்ளார்.
ஆனால் தந்தை பெரியார் பற்றி சரியான புரிதலின்றி எழுதியுள்ளார். மேலும் சில தவறான தகவல்களையும் எழுதியுள்ளார்.
ஈ.வெ.கி. சம்பத் பெரியாரின் தம்பி மகன் என்று எழுதியுள்ளார். அவர் தந்தை பெரியாரின் அண்ணனான ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஆவார்.
இந்த நூலில் “பெரியார் முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தவாதி. முரட்டு சுபாவம் உடைய பகுத்தறிவு வாதியான அவர் மனிதர்களையும் செயல்களையும் கணிக்கும் போது மனித உறவுகளில் காரண காரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் மனிதாபிமான கோணத்திலேயே அண்ணா பார்த்தார். அண்ணாவும் பகுத்தறிவுவாதி தான் ஆனால் ஓர் இயக்கத்தை வளர்க்கும் போது மனித உறவுகளுக்கும் இருதரப்பு அன்பிற்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் நம்பினார். நாத்திகவாதியான பெரியார் இடத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் இடம் இருந்ததில்லை. தொன்மையான கலை இலக்கியங்களை தூக்கி எறியும் அளவிற்கு அவரின் பகுத்தறிவு தீவிரவாதம் அமைந்து இருந்தது. ஆனால் அண்ணாவோ இலக்கிய மாணாக்கரும் கலைகளின் ரசிகருமாக எல்லா உயர்ந்த விஷயங்களையும் விரும்பினார்.
பெரியாரைப் பொருத்தவரை மதமும் கடவுளும் வெறுமனே சுரண்டல் கருவிகள். மக்களின் சொந்த சுகங்களுக்காக சூழ்ச்சி நிறைந்த பூசாரிகளும் இவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததாக அவர் நம்பினார். இந்த சுரண்டலுக்கு முடிவு கட்ட கடவுள் கருத்துக்களையும் மதக்கோட்பாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்பது அவசியம் என்று பெரியார் கருதினார். எனவே இவைகளின் மேல் உள்ள பெரியாரின் எதிர்ப்பு நேரடி ஆனதும் தீவிரமானதுமாகும். ஆனால் இலக்கிய கல்வியாலும், வரலாற்று அறிவிலும் நன்கு பதப்படுத்தப்பட்ட அண்ணா ஆக்கப்பூர்வமாக இப்பிரச்சினையை அணுகினார். கடவுள் மதம் கலை இலக்கியம் மூலமாக உயர்ந்த குலத்தவர் சமுதாயத்தை தமது இறுக்கமான பிடியில் வைத்துக் கொள்ளும் போது அதனை சமணப்படுத்துவது என்பது அதே கலை இலக்கியம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று அவர் கருதினார். அதே நோக்கோடு வரலாற்றின் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு - தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கண்டெடுத்து பிறகு சமுதாய அமைப்பை தங்களின் கட்டுக்கோப்பில் வைத்துக் கொண்டு அதற்கு மேல் குடியினர் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகங்களாக உருவாக்கினார். அண்ணாவின் பிரச்சார உத்திகளை வெளிப்படையாகவே பெரியார் விமர்சித்தார். இருவரும் ஒத்துப் போகாத சூழ்நிலை உருவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது” - இவ்வாறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
“கடவுளை மற, மனிதனை நினை” என்று சொன்ன பெரியாருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்கிறார். முரட்டுசுவாபம் உள்ளவர் என்கிறார். இயக்கத்தின் தலைவர் பெரியார். அனைத்திற்கும் பொறுப்பு அவரே ஆவார். கம்பிமேல் நடப்பது போன்றது. மனிதாபிமானம் இருந்தால்தான் தன் சொந்த செலவில் இயக்கத்தைக் கட்டி தன்னலம் பாராமல், உடல்நலம் பாராமல், ஓயாமல் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார். அவ்வளவும் மக்கள் நலனுக்காகத் தான்!
பெரியாரிடம் இருந்த காலமே வசந்த காலம் என்று அண்ணாவே கூறியுள்ளார்.
பெரியாருக்கு இலக்கிய ரசனை இல்லை என்கிறார். இக்கருத்து அவரது அறியாமையை அல்லது காழ்புணர்ச்சியையோ காட்டுவதாகும். நல்ல இலக்கியம்தான் தேவையென்றார் பெரியார். திருக்குறளை மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார். இலக்கிய ரசனை இருந்தால்தானே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை உடன் வைத்திருந்தார். நாடகங்களை விரும்பாமலா எம். ஆர். ராதா வை உடன் வைத்திருந்தார். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; மருந்து தடவ வேண்டிய இடத்தில் மருந்து தடவ வேண்டும்!
இன்னொரு இடத்தில் பெரியாரை சர்வாதிகாரி என்கிறார்.
கொள்கைக்கு தலைவரும் அவரே; இயக்கத்திற்கு தலைவரும் அவரே; நிர்வாக செலவுக்கும் தலைவர் அவரே! அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை தானே கேட்கவேண்டும்! சர்வ அதிகாரமும் உடையவர் சர்வாதிகாரி தானே!
மேலும் ஒரு அவதூறை பரப்புகிறது.
தொண்டர்கள் இடத்தில் அன்பு இல்லாதவர், பாரதிதாசனுக்கு கூட உதவி செய்யாதவர், அண்ணாதான் உதவி செய்தார் என்று கூறுகிறார். உதவி செய்ததைக் கூட பெரியார் கண்டித்ததாக கூறுகிறார்.
ஆனால் திராவிடர் கழக மாநாட்டில் பாரதிதாசனுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போட வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் ஏற்பாட்டில் தான் அண்ணா மூலமாக பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது உண்மை. இப்படி அரசு வெளியிட்டுள்ள புத்தககத்தில் பல இடங்களில் பெரியாரை தவறான புரிதலுடன் விமர்சித்து எழுதியுள்ளது வருந்தத்தக்கதாகும்.
செ.ர.பார்த்தசாரதி,
மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம், தென்சென்னை
கருப்பு கம்யூனிஸ்டுகள்
இன்றைய கருஞ்சட்டைகளே தத்துவ பரிணாமத்தின் நாளைய செஞ்சட்டைகள்
பெரியாரியல் என்பது மார்க்சியமே..!
பகுத்தறிவின் எல்லை எது? என பெரியாரிடம் கேட்கப்பட்டது.
பகுத்தறிவின் எல்லை பொதுவுடமை என்றார் பெரியார்.
பொதுவுடமைதான் இலக்கு எனில், இச்சமூகத்தில் கருஞ்சட்டைகளின் பணிதான் என்ன?
அதையும் தெளிவாகச் சொன்னார் பெரியார்!
“நாங்கள் (கருஞ்சட்டைகள்) இன்பேண்ட்ரீஸ்”
(In-fantrys) என்றார்.
ஏன் கருஞ்சட்டைகளை இன்பேண்ட்ரீஸ் என்றார் பெரியார்?
இராணுவம் மீட்புப் பணியிலோ, போரிடவோ செல்கையில், தங்குதடையின்றி இராணுவம் வேகமாக முன்னேற வழியில் இடற்தரும் கற்கள், முட்கள், பள்ளம், மேடு, காடு என அனைத்தையும் சீர்படுத்தி வழி ஏற்படுத்தும் ஓர் இராணுவப் பிரிவே இன்பேண்ட்ரீஸ்.
இச்சமூகத்தில் ஏற்படப்போகும் நாளைய பொதுவுடமை புரட்சிக்கு தடையாக இருக்கும் ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், பிற்போக்கு கருத்தியல்கள் அத்தனையும் ஒழித்து போராளிகளுக்கு வழி உண்டாக்குவதே கருஞ்சட்டைகளாகிய இன்பேண்ட்ரீஸ்களின் பணி!
சரி, இப்போது மற்றொரு கேள்வி வரும்
நாளை உண்மையான போராளிகள் புரட்சிக்கு அணியுமாகி விட்டால்...! வழி ஏற்படுத்தியதோடு உங்கள் வேலை முடிந்ததா?
இல்லை, முடியாது
இச்சமூக இழிவுகளாகிய ஜாதி மத பிற்போக்கு களைந்த சமூகத்தில் எங்கள் சட்டையிலும், கொடியிலும் உள்ள கருப்பு மறையும், கொடியின் நடுவேயுள்ள புரட்சியின் (சிகப்பு) நிறமே கொடி முழுக்க வியாபிக்கும்!
அதன் பொருள்?
நாங்களும் கம்யூனிஸ்டுகளாய் புரட்சியின் நடுவில் போராளிகளாய் நிமிர்ந்து நின்றிருப்போம்.
அதற்கு கம்யூனிஸ்ட்களாகவே இருக்கலாமே.., ஏன் திராவிடர் கோட்பாட்டில் இயங்க வேண்டும்?
பொது உரிமை வராத நாட்டில் பொதுவுடமை வந்தால் மீண்டும் ஆதிக்கக்காரன் கைக்கே பொதுவுடமை போய் விடும் என்று மிகத் துல்லியமாக சொன்னார் பெரியார்
1925 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்க்கவில்லை.
பெரியார் தான் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதை நூலாகவும் வெளியிட்டார்.
ஏழெட்டு வாரம் தொடர்ச்சியாக ‘குடிஅரசி’ல் வெளியிட்டு விட்டு பிறகு புத்தகமாகவும் வெளியிட்டார் முன்னுரையில் பெரியார் எழுதினார். அதை எழுதும் போதே சொன்னார், “இல்லையில்லை இந்த நாட்டில் பொதுவுடமை அப்படியே வந்து விடாது. இங்கே மக்களை பிரிப்பதற்கு பாட்டாளிகளை பிரிப்பதற்கு ஜாதிமுறை இருக்கிறது. அதை எடுத்துவிட்டு அதற்கு அடிப்படையான இந்து மதத்தை ஒழித்து விட்டுதான் இங்கு பொதுவுடமை வரும்” என சொல்லிவிட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும்.., சதி செய்வதற்கு என்றே ஒரு ஜாதி இல்லாத இரஷ்யநாட்டில் லெனின் வெற்றிப் பெற்று விட்டார்- என்று சொன்னார். இங்கு அப்படி வெல்ல முடியாது என்றார். சதி செய்வதற்கென்று ஒரு ஜாதி அதற்கென்று ஒரு அமைப்பு இங்கிருக்கிறது. அதை தடுக்க பொது உரிமையோடு கூடிய பொதுவுடமை வேண்டும் என்றும் பெரியார் சொன்னார்.
ஆகவேதான்...
திராவிட கோட்பாட்டில் என்று பொது உரிமையை பெறுவதும் அதன் அடிப்படையிலான சமூகத்தில் பொதுவுடமை காண புரட்சியை வித்திடுவதும் கருஞ்சட்டைகளின் ஆகப்பெரிய பொறுப்பாகும்
வாக்கு அரசியல் நிலைப்பாடுகள் தேர்தல் ஆதரவு எதிர்ப்பு என்பதெல்லாம் தற்காலிகமானதே!
இம் மண்ணில் உண்மையான பொதுவுடமை மலர தன் நெடிய பயணத்தை மிகச் சரியான இலக்குடன் கொண்டு செல்லும் மார்க்சியவாதிகள் கம்யூனிஸ்டுகள் கருஞ்சட்டையினரே என உறுதியாகக் கூறலாம்.
பெரியாரியலாளர்களே! கருஞ்சட்டைக்குள்ளிருக்கும் செஞ்சட்டை போராளிகள் என்கிற தத்துவ உண்மையை ஒவ்வொரு பெரியாரிஸ்டுகளும் உணர வேண்டும்
மாமேதை மார்க்சின் பிறந்தநாளில் உண்மையான பொதுவுடமைக்காகப் போராடும் கருஞ்சட்டைகளாகிய செஞ்சட்டைகளுக்கு வாழ்த்துகள்!
- மு.தமிழ் மறவன்