இப்போது ராமானுஜரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் தற்போது ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் இந்த விழாவுக்கு நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கத் துப்பில்லாத அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களின் பணம் கொழிக்கும் மடங்களுக்கும், மக்களிடையே மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்க உத்திரவிடும் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டத்தான். அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பன கும்பலின் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தவும் தான்.
ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.
ஒரு நாள் தனது இல்லத்திற்கு சாப்பிட தனது குரு திருக்கச்சி நம்பியை ராமானுஜர் அழைத்திருக்கின்றார். அதை நம்பி அவரும் ராமானுஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கின்றார். ஆனால் ராமானுஜர் மனைவி அவர் சாப்பிட்ட இலையைக் கையால் எடுக்காமல் கோலால் தள்ளி அவர் உட்கார்ந்த இடத்தை சாணத்தால் மொழுகி சுத்தப்படுத்தி இருக்கின்றார். இதைப் பார்த்த ராமானுஜர் கொதித்துப்போய் அவர் மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்டார் என்று சொல்கின்றார்கள். இந்தக் கதையில் எங்கே சாதிக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது எனத் தெரியவில்லை. ராமானுஜம் தன் மனைவியிடம் “நீ எப்படி அவர் இலையைக் கோலால் தள்ளிவிடலாம், அதுவும் எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது என உனக்குத் தெரியாதா, இதைப் பார்த்தால் ஊர் உலகம் என்னுடைய சாதி எதிர்ப்பு கருத்தைப் பற்றி கேலி பேசாதா” என சொல்லி அவரின் மனைவியைத் திட்டியதாக எந்தக் குறிப்பும் இல்லை.ஆனால் இதை எல்லாம் வைத்துக்கொண்டு ராமானுஜர் ஒரு சாதிய எதிர்ப்பாளர் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்? சம்மந்தப்பட்ட ராமானுஜர் சாதிக்கு எதிராகப் பேசியதாக ஒரு வார்த்தை கூட கதையில் பதிவாகவில்லையே.
அதுமட்டும் அல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில் ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். எனவே ராமானுஜர் அடிப்படையில் தான் ஒரு சாதி வெறியன் என்பதை அவரே அவருடைய நூலில் ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
அடுத்து அவரை சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் செய்தியைப் பார்க்கலாம். இது ராமானுஜர் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த போது நடந்ததாக சொல்லப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கன் ஒரு ஏட்டில் “சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவத்தைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை) என்று எழுதி அதில் பண்டிதர்கள் அனைவரையும் கைச்சாத்து இடும்படி கட்டளையிட்டதாகவும், வைணவரான ராமானுஜர் அதில் கைச்சாத்து இடாமல் தனக்குப் பதில் தனது சீடரான கூரத்தாழ்வாரை தன்னைப்போலவே வேடமிட்டு அனுப்பி வைத்தாகவும் அவர் அங்கு சென்று “குருணிக்கு மேல் பதக்கு உண்டு” என்று எழுதி கைச்சாத்து இட்டதாகவும், ஆனால் குருணி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு ஒன்று படி போல ஒரு முகத்தல் அளவை, மற்றொன்று சிவன் என்பதாகும். இந்த அறிய உண்மையைக் கண்டுபிடித்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களை பிடிங்கிவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய சந்நியாச ஆடைகளைக் களைந்து வெள்ளை உடை தரித்து ராமானுஜர் கர்நாடகத்திற்குத் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகின்றது.
திருவரங்கம் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த எண்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு கல்வெட்டில் கூட இந்தச் செய்தி பதிவாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி எல்லாம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், தங்கம், கால்நடைகள் பற்றியும் வழிபாட்டிற்கான செலவுகள் பற்றியுமே உள்ளது. மேலும் இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. ‘கோயில் ஒழுகு’ என்ற நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார், ராமானுஜரைக் கொல்ல முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்தான் என்பதை மறுத்துள்ளார். இதனால் குழம்பிப் போன வரலாற்றுப் பொய்யர்கள் உடனே முதலாம் குலோத்துங்கன் கிடையாது, இரண்டாம் குலோத்துங்கன் என கதைவிட ஆரம்பித்து விட்டார்கள்.
ராமானுஜர் 1017இல் பிறந்தார் என்பதை பொதுவாக வைணவ வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ராமானுஜர் 120 வயதுவரையும் வாழ்ந்ததாகவும், தன்மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க அவர் கர்நாடகா தப்பிச்சென்று அங்கே 12 ஆண்டுகள் வாழ்ந்தாகவும், பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி அவர் தன்னுடைய சாதிய எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்ததாகவும், பிறகு தன்னுடைய 120வது வயதில் மண்டையைப் போட்டதாகவும் நம்புகின்றார்கள். இதிலே கேலிக்கூத்தானது என்னவென்றால் 1133இல் தான் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றான். அதன் படி பார்த்தால் ராமானுஜருக்கு வயது 116. தள்ளிவிட்டாலே செத்துப்போகும் நிலையில் இருந்த ஒரு கிழவனை இரண்டாம் குலோத்துங்கன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும், அதற்குப் பயந்து அந்தக் கிழவன் கர்நாடகம் தப்பிச் சென்றான் என்பதும், பிறகு 12 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்தான் என்பதும் குமாரசாமி கணக்கைவிட மோசமான கணக்காகும். இருந்தாலும் இங்கிருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பல்கள் இதே கதையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
அவர் கூறிய வாழ்வியல் நெறி என்னவென்றால் “இறைவன், உயிர், பொருள் ஆகிய மூன்றும் உண்மை. அதே வேளையில் இம்மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒன்றில் இணைந்துள்ளன. அந்த ஒன்றே பிரும்மம் என்பது. எனவே தனிமனித ஆன்மா ஒரு நாளும் பிரம்மமாக முடியாது என்றாலும் பிரம்மத்தை சரணடைவதன் மூலம் மோட்ச நிலையை அடைய முடியும்" என்பதுதான் சாரமாக ராமானுஜரின் கருத்து. தினம் தினம் உழைத்துச் சோறு தின்னக்கூடிய மக்களால் எளிதில் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் நாள் கணக்கில், வருடக்கணக்கில் உழைக்காமல் ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்பவராக இருக்க வேண்டும். அதனால் இராமாஜர் கண்டுபிடித்த அந்த உண்மையைப் பற்றி ஆழமாக நாம் உள்ளே போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சமூகத்தில் அறிவியல் சிந்தனை காயடிக்கப்பட்டதற்குச் சங்கரருக்கு எந்த அளவிற்குப் பங்குண்டோ அதே அளவிற்கு இந்த ராமானுஜர் என்ற பார்ப்பனனுக்கும் பங்குண்டு.
- செ.கார்கி
பாலமுருகன் முகநூல் பதிவு, 2.5.21
No comments:
Post a Comment