Monday, 17 May 2021

நவபாரத சிற்பிகள் 'சி.என்.அண்ணாதுரை' நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்  ‘பப்ளிகேஷன் டிவிஷன்’ ‘நவபாரத சிற்பிகள்’ என்ற தலைப்பில் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டு வருகிறது, அந்த வரிசையில் சி.என்.அண்ணாதுரை என்ற பெயரில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பி.சி. கணேசன் என்பவரை கொண்டு எழுதி நூலாக வெளியிட்டு உள்ளது.

பக்கங்கள் : 226

நூலாசிரியர் காங்கிரசை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வண்ணமே நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், பெரியார், அண்ணாவைப் பற்றி  எழுதியுள்ளார்.

ஆனால் தந்தை பெரியார் பற்றி சரியான புரிதலின்றி எழுதியுள்ளார். மேலும் சில தவறான தகவல்களையும் எழுதியுள்ளார்.

ஈ.வெ.கி. சம்பத் பெரியாரின் தம்பி மகன் என்று எழுதியுள்ளார். அவர் தந்தை பெரியாரின் அண்ணனான ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஆவார்.

இந்த நூலில்  “பெரியார் முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தவாதி. முரட்டு சுபாவம் உடைய பகுத்தறிவு வாதியான அவர் மனிதர்களையும் செயல்களையும் கணிக்கும் போது மனித உறவுகளில் காரண காரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் மனிதாபிமான கோணத்திலேயே அண்ணா பார்த்தார். அண்ணாவும் பகுத்தறிவுவாதி தான் ஆனால் ஓர் இயக்கத்தை வளர்க்கும் போது மனித உறவுகளுக்கும் இருதரப்பு அன்பிற்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் நம்பினார். நாத்திகவாதியான பெரியார் இடத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் இடம் இருந்ததில்லை. தொன்மையான கலை இலக்கியங்களை தூக்கி எறியும் அளவிற்கு அவரின் பகுத்தறிவு தீவிரவாதம் அமைந்து இருந்தது. ஆனால் அண்ணாவோ இலக்கிய மாணாக்கரும் கலைகளின் ரசிகருமாக எல்லா உயர்ந்த விஷயங்களையும் விரும்பினார்.

 பெரியாரைப் பொருத்தவரை மதமும் கடவுளும் வெறுமனே சுரண்டல் கருவிகள். மக்களின் சொந்த சுகங்களுக்காக சூழ்ச்சி நிறைந்த பூசாரிகளும் இவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததாக அவர் நம்பினார். இந்த சுரண்டலுக்கு முடிவு கட்ட கடவுள் கருத்துக்களையும் மதக்கோட்பாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்பது அவசியம் என்று பெரியார் கருதினார். எனவே இவைகளின் மேல் உள்ள பெரியாரின் எதிர்ப்பு நேரடி ஆனதும் தீவிரமானதுமாகும். ஆனால் இலக்கிய கல்வியாலும், வரலாற்று அறிவிலும் நன்கு பதப்படுத்தப்பட்ட அண்ணா ஆக்கப்பூர்வமாக இப்பிரச்சினையை அணுகினார். கடவுள் மதம் கலை இலக்கியம் மூலமாக உயர்ந்த குலத்தவர் சமுதாயத்தை தமது இறுக்கமான பிடியில் வைத்துக் கொள்ளும் போது அதனை சமணப்படுத்துவது என்பது அதே கலை இலக்கியம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று அவர் கருதினார். அதே நோக்கோடு வரலாற்றின் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு - தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கண்டெடுத்து பிறகு சமுதாய அமைப்பை தங்களின் கட்டுக்கோப்பில் வைத்துக் கொண்டு அதற்கு மேல் குடியினர் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகங்களாக உருவாக்கினார். அண்ணாவின் பிரச்சார உத்திகளை வெளிப்படையாகவே பெரியார் விமர்சித்தார். இருவரும் ஒத்துப் போகாத சூழ்நிலை உருவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது” - இவ்வாறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது

“கடவுளை மற, மனிதனை நினை” என்று சொன்ன பெரியாருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்கிறார். முரட்டுசுவாபம் உள்ளவர் என்கிறார். இயக்கத்தின் தலைவர் பெரியார். அனைத்திற்கும் பொறுப்பு அவரே ஆவார். கம்பிமேல் நடப்பது போன்றது. மனிதாபிமானம் இருந்தால்தான் தன் சொந்த செலவில் இயக்கத்தைக் கட்டி தன்னலம் பாராமல், உடல்நலம் பாராமல், ஓயாமல் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார். அவ்வளவும் மக்கள் நலனுக்காகத் தான்!

பெரியாரிடம் இருந்த காலமே வசந்த காலம் என்று அண்ணாவே கூறியுள்ளார்.

பெரியாருக்கு இலக்கிய ரசனை இல்லை என்கிறார். இக்கருத்து அவரது அறியாமையை அல்லது காழ்புணர்ச்சியையோ காட்டுவதாகும். நல்ல இலக்கியம்தான் தேவையென்றார் பெரியார். திருக்குறளை மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார். இலக்கிய ரசனை இருந்தால்தானே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை உடன் வைத்திருந்தார். நாடகங்களை விரும்பாமலா எம். ஆர். ராதா வை உடன் வைத்திருந்தார். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; மருந்து தடவ வேண்டிய இடத்தில் மருந்து தடவ வேண்டும்!

இன்னொரு இடத்தில் பெரியாரை சர்வாதிகாரி என்கிறார்.

கொள்கைக்கு தலைவரும் அவரே; இயக்கத்திற்கு தலைவரும் அவரே; நிர்வாக செலவுக்கும் தலைவர் அவரே! அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை தானே கேட்கவேண்டும்! சர்வ அதிகாரமும் உடையவர் சர்வாதிகாரி தானே!

மேலும் ஒரு அவதூறை பரப்புகிறது.

தொண்டர்கள் இடத்தில் அன்பு இல்லாதவர், பாரதிதாசனுக்கு கூட உதவி செய்யாதவர், அண்ணாதான் உதவி செய்தார் என்று கூறுகிறார். உதவி செய்ததைக் கூட பெரியார் கண்டித்ததாக கூறுகிறார்.

ஆனால் திராவிடர் கழக மாநாட்டில் பாரதிதாசனுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போட வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் ஏற்பாட்டில் தான் அண்ணா மூலமாக பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது உண்மை. இப்படி அரசு வெளியிட்டுள்ள புத்தககத்தில் பல இடங்களில் பெரியாரை தவறான புரிதலுடன்  விமர்சித்து எழுதியுள்ளது வருந்தத்தக்கதாகும்.

செ.ர.பார்த்தசாரதி,

மாவட்டச் செயலாளர்,

திராவிடர் கழகம், தென்சென்னை

No comments:

Post a Comment