இன்றைய கருஞ்சட்டைகளே தத்துவ பரிணாமத்தின் நாளைய செஞ்சட்டைகள்
பெரியாரியல் என்பது மார்க்சியமே..!
பகுத்தறிவின் எல்லை எது? என பெரியாரிடம் கேட்கப்பட்டது.
பகுத்தறிவின் எல்லை பொதுவுடமை என்றார் பெரியார்.
பொதுவுடமைதான் இலக்கு எனில், இச்சமூகத்தில் கருஞ்சட்டைகளின் பணிதான் என்ன?
அதையும் தெளிவாகச் சொன்னார் பெரியார்!
“நாங்கள் (கருஞ்சட்டைகள்) இன்பேண்ட்ரீஸ்”
(In-fantrys) என்றார்.
ஏன் கருஞ்சட்டைகளை இன்பேண்ட்ரீஸ் என்றார் பெரியார்?
இராணுவம் மீட்புப் பணியிலோ, போரிடவோ செல்கையில், தங்குதடையின்றி இராணுவம் வேகமாக முன்னேற வழியில் இடற்தரும் கற்கள், முட்கள், பள்ளம், மேடு, காடு என அனைத்தையும் சீர்படுத்தி வழி ஏற்படுத்தும் ஓர் இராணுவப் பிரிவே இன்பேண்ட்ரீஸ்.
இச்சமூகத்தில் ஏற்படப்போகும் நாளைய பொதுவுடமை புரட்சிக்கு தடையாக இருக்கும் ஜாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், பிற்போக்கு கருத்தியல்கள் அத்தனையும் ஒழித்து போராளிகளுக்கு வழி உண்டாக்குவதே கருஞ்சட்டைகளாகிய இன்பேண்ட்ரீஸ்களின் பணி!
சரி, இப்போது மற்றொரு கேள்வி வரும்
நாளை உண்மையான போராளிகள் புரட்சிக்கு அணியுமாகி விட்டால்...! வழி ஏற்படுத்தியதோடு உங்கள் வேலை முடிந்ததா?
இல்லை, முடியாது
இச்சமூக இழிவுகளாகிய ஜாதி மத பிற்போக்கு களைந்த சமூகத்தில் எங்கள் சட்டையிலும், கொடியிலும் உள்ள கருப்பு மறையும், கொடியின் நடுவேயுள்ள புரட்சியின் (சிகப்பு) நிறமே கொடி முழுக்க வியாபிக்கும்!
அதன் பொருள்?
நாங்களும் கம்யூனிஸ்டுகளாய் புரட்சியின் நடுவில் போராளிகளாய் நிமிர்ந்து நின்றிருப்போம்.
அதற்கு கம்யூனிஸ்ட்களாகவே இருக்கலாமே.., ஏன் திராவிடர் கோட்பாட்டில் இயங்க வேண்டும்?
பொது உரிமை வராத நாட்டில் பொதுவுடமை வந்தால் மீண்டும் ஆதிக்கக்காரன் கைக்கே பொதுவுடமை போய் விடும் என்று மிகத் துல்லியமாக சொன்னார் பெரியார்
1925 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்க்கவில்லை.
பெரியார் தான் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதை நூலாகவும் வெளியிட்டார்.
ஏழெட்டு வாரம் தொடர்ச்சியாக ‘குடிஅரசி’ல் வெளியிட்டு விட்டு பிறகு புத்தகமாகவும் வெளியிட்டார் முன்னுரையில் பெரியார் எழுதினார். அதை எழுதும் போதே சொன்னார், “இல்லையில்லை இந்த நாட்டில் பொதுவுடமை அப்படியே வந்து விடாது. இங்கே மக்களை பிரிப்பதற்கு பாட்டாளிகளை பிரிப்பதற்கு ஜாதிமுறை இருக்கிறது. அதை எடுத்துவிட்டு அதற்கு அடிப்படையான இந்து மதத்தை ஒழித்து விட்டுதான் இங்கு பொதுவுடமை வரும்” என சொல்லிவிட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும்.., சதி செய்வதற்கு என்றே ஒரு ஜாதி இல்லாத இரஷ்யநாட்டில் லெனின் வெற்றிப் பெற்று விட்டார்- என்று சொன்னார். இங்கு அப்படி வெல்ல முடியாது என்றார். சதி செய்வதற்கென்று ஒரு ஜாதி அதற்கென்று ஒரு அமைப்பு இங்கிருக்கிறது. அதை தடுக்க பொது உரிமையோடு கூடிய பொதுவுடமை வேண்டும் என்றும் பெரியார் சொன்னார்.
ஆகவேதான்...
திராவிட கோட்பாட்டில் என்று பொது உரிமையை பெறுவதும் அதன் அடிப்படையிலான சமூகத்தில் பொதுவுடமை காண புரட்சியை வித்திடுவதும் கருஞ்சட்டைகளின் ஆகப்பெரிய பொறுப்பாகும்
வாக்கு அரசியல் நிலைப்பாடுகள் தேர்தல் ஆதரவு எதிர்ப்பு என்பதெல்லாம் தற்காலிகமானதே!
இம் மண்ணில் உண்மையான பொதுவுடமை மலர தன் நெடிய பயணத்தை மிகச் சரியான இலக்குடன் கொண்டு செல்லும் மார்க்சியவாதிகள் கம்யூனிஸ்டுகள் கருஞ்சட்டையினரே என உறுதியாகக் கூறலாம்.
பெரியாரியலாளர்களே! கருஞ்சட்டைக்குள்ளிருக்கும் செஞ்சட்டை போராளிகள் என்கிற தத்துவ உண்மையை ஒவ்வொரு பெரியாரிஸ்டுகளும் உணர வேண்டும்
மாமேதை மார்க்சின் பிறந்தநாளில் உண்மையான பொதுவுடமைக்காகப் போராடும் கருஞ்சட்டைகளாகிய செஞ்சட்டைகளுக்கு வாழ்த்துகள்!
- மு.தமிழ் மறவன்
No comments:
Post a Comment