Friday 6 March 2020

பவுத்தர்களின் தலைகளைச் சீவியது பார்ப்பனீயம்!


அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனு மான “புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிட்சுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசனான “விக்கிரமாதித்தன்” என்பானும், மற்றொரு அரசனான “கனிஷ்கன்” என்பானும் மேற்கூறியவாறே பிட்சுக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலை களை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த ‘விக்கிரகங்களையும் துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த சேமகுப்தன் சிறீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிட்சுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான “குமாரிலபட்டன்” என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்சுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடு மாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. “சுதன்வா”வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரை யிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளை யிட்டிருந்ததாகச் “சங்கவிஜயம்“ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

புத்தபிட்சுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று “பிருஹந் நாரதீய புராணம்“ கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய “சூலபாணி” என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணு பகவான் ‘கல்கி’யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப் போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.

-  விடுதலை ஞாயிறு மலர், 1.2.20

No comments:

Post a Comment