Wednesday 11 March 2020

திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பெரும் சாதனை - இனமான பேராசிரியர் (தமிழன் உயர்வு)


திராவிடக் கட்சிகளின் ஆட்சி 
சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
#பேராசிரியரிடம்_கற்றுக்கொள்வோம்_3

நான் வசித்த மயிலாடுதுறையில் 
மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு 
என்று இரண்டு தெருக்கள் உண்டு. பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள்.

‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்?’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப்பட்டார்கள். 

மேல்சாதி என்று சொல்லிக்
கொள்பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப்
பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில் தண்ணீர் குடிக்க யோசித்த இந்துக்கள் உண்டு. 

என்னுடைய அப்பாவின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர். ஆனால், அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால், திண்ணையில்தான் உட்காருவாரே தவிர, வீட்டுக்குள் வர மாட்டார். அவரும் சைவர்; நாங்களும் சைவர்கள். ஆனால், அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டார். “அரிசியைக் கொடுத்துவிடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்” என்பார். 

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இன்றைக்குத் தமிழ்நாடு உள்ள நிலைமையை யோசித்துப்பாருங்கள். தமிழன் என்ற அடையாளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோமா, இல்லையா? அன்றைக்கெல்லாம் வெளிமாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ நம்மவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு ஒடுங்கிப்போய் நிற்பார்கள்.

தமிழன் என்றாலே பிறவியிலேயே ஏதோ தாழ்ந்துவிட்டதாக எண்ணிய, இழிவாகக் கருதிய நாட்கள் எல்லாம் உண்டு. இன்றைக்கும் நாம் முழுக்க உயர்ந்து நிற்கிறோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நம் உடல் யார் முன்னாலும் குனிந்து நிற்கவில்லை அல்லவா? அதுதான் திராவிட இயக்கத்தின், 
திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பெரும் சாதனை என்று சொல்வேன்.
- சைதை அன்பரசன் முகநூல் பதிவு, 11.3.20

No comments:

Post a Comment