Tuesday 10 March 2020

‘‘பிராமணனுக்கு'' ஸ்பெஷல் டாய்லெட்டாம் - கேரளக் கோவிலில்!

இன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் (சென்னை பதிப்பு, 6.3.2020, பக்கம் 9) வெளிவந்துள்ள அதிர்ச்சிக்கும், அருவருப்புக்கும்  உரிய தகவல் - செய்தி!

‘கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குட்டுமுக்கு மகாதேவர் கோவிலில் பார்ப்பனர் களுக்கென்று ஒரு தனி கழிப்பறை  (Exclusive Toilet for Brahmins in Kerala temple raises a stink)    உள்ள செய்தி ‘நாறுகிறது' என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில்,

கேரளத்து ஆராய்ச்சி மாணவர் அரவிந்த் ஜி கிறிஸ்டோ என்பவர் இந்த அதிர்ச்சித் தகவலை ‘போர்டு' அமைக்கப்பட்டுள்ளதோடு, படம் எடுத்து சமூக வலைத்தளங்களின்மூலம் பரவவிட்டு - ‘‘திருவிழாவின்போது நான் அங்கே போனேன்; பார்த்தேன் - அதிர்ச்சியாக இருந்தது; இதற்குப் பிறகு அந்தப் பலகை ‘‘பார்ப்பனர்களுக்கு மட்டும்'' என்ற கழிப்பறைப் பலகை நீக்கப்படும் என்று தேவசம் போர்டும், அக்கோவில் நிர்வாகிகளும் கூறுவது அறிய மகிழ்ச்சி'' என்கிறார் அவர்!

‘‘அவர் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை? ஏன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார்'' என்று கோபத்துடன், அவர்மீது காவல்துறையில் புகார் மனுவை பார்ப்பனர்கள் கொடுத்திருப்பது எவ் வளவு மோசமான ஜாதிவெறியின், மதவெறியின் அப்பட்டமான வெளிப்பாடு பார்த்தீர்களா?

‘‘25 ஆண்டுகளுக்குமேல் அந்த பார்ப்பனர் களுக்கு மட்டுமே அந்த கழிப்பறை என்ற பலகை இருப்பதுபற்றி எங்கள் கமிட்டியின் தகவலுக்கு இது கொண்டு வரப்படவில்லை; உடனடியாக நீக்குகி றோம்'' என்று தேவசம்  போர்டும், கோவில் நிர் வாகிகளும் கூறியிருப்பது ஒரு வகையில் வர வேற்கத்தக்கதுதான்; ஆனால், கேரளப் பார்ப் பனர்கள் இதற்கு சப்பைக் கட்டும் விளக்கங்கள் கூறுவதுதான் மிகப்பெரிய கேலிக் கூத்தாக உள்ளது!

அந்தப் பெயர்ப் பலகை 2003 இல் வைக்கப்பட்டது என்று தேவசம் போர்டு தலைவர் ஏ.பி.மோகனன் என்பவர் கூறுகிறார். இந்து அறநிலைய ஆணையர் ஜெயக்குமார், இதுகுறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

‘யோக க்ஷேம சபா'வின் மேனாள் மாவட்ட செயலாளரான ஹரிநம்பூதிரி என்ற பார்ப்பனர், ‘‘பிராமண சமூகத்தின்மீது அவதூறு பரப்புவதற்கே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது'' என்று சிறிதும் வெட்கமின்றி கூறுவது வேடிக்கையான ஜாதி ஆணவப் போக்கு அல்லவா?

‘‘ஆறுகால பூஜையில், சாப்பிடுவதாகக் கூறப் படும் பகவானுக்கே ‘‘கக்கூஸ்'' கோவில்களில் தனியே கட்டப்படுவதில்லையே, ஏன்?'' என்று நடிகவேள் எம்.ஆர்.இராதா தனது நாடகங்களில் கேட்பார்! அதுவும் இப்போது நினைவுக்கு வருகிறது.

பார்ப்பன சாம்ராஜ்யம் - ஆட்சியில்  இல்லாமல்  ராஜகுரு ஸ்தானத்தில் பார்ப்பனீயம் அமர்ந்து, அர்த்தமுள்ள இந்து மதத்தின் அட்டகாசமான வர்ணாஸ்ரமக் கொடுமை எவ்வளவு கோரமான முகத்தையுடையது என்பது இதன்மூலம் புரிய வில்லையா? முன்பு - கேரளாவை ‘‘ஒரு பைத்தி யக்காரர்கள் வாழும் விடுதி'' என்றார் விவே கானந்தர்; அது இப்போது முற்போக்கு - பகுத்தறிவு - இடதுசாரிகளால் பெரிதும் மாற்றப்பட்டு வருகிறது!

பைத்தியக்காரர்கள் என்னும்போது, மற்றொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது.

சுமார் 150 ஆண்டுகளுக்குமுன்பு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ‘‘பைத்தியக்கார ஆஸ்பத் திரியில்'' பார்ப்பனர்களுக்கென்று தனி வார்டு (ஸ்பெஷல் வார்டு) இருந்தது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்காதே!

பகவானுக்கு இல்லாத வசதிகள்கூட பார்ப்ப னர்களுக்கு உண்டு என்பதுதான் சாஸ்திர விதி யாகுமே!

‘‘தெய்வாதீனம் ஜகத் சர்வம்,

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்

தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத

(‘ரிக் வேதம்',  62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது.

மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை.

எனவே பிராமணனையே தொழவேண்டும்''

துளசிதாஸ் ராமாயணத்தில், ராமன் போன்ற அவதாரங்களே பிராமணர்களைத்தான் முதலில் தொழுது வணங்கினார்கள் பக்தி சிரத்தையோடு; கடவுளை வணங்குவதுகூட அவ்வளவு முக்கியத் துவமானது அல்ல!

எனவேதான், பிராமணர்களுக்கு டாய் லெட்டில்கூட ‘‘ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்!''

இதை சட்டமாக்கவே துடிக்கிறார்கள் பலரும் இன்று!

கடவுளும், பக்தியும் யாருக்குப் பயன்படுகிறது பார்த்தீர்களா?

பக்தகே(ர)டிகளே, சிந்தியுங்கள்; வெறுப்பு விருப்பின்றி சிந்தியுங்கள்!

பெரியார் உங்கள் மனக்கண்ணில் படுவார்!

- விடுதலை நாளேடு, 6.3.20

No comments:

Post a Comment