Saturday, 28 September 2024

காமராசரை கொலை செய்ய முயன்ற ஆர் எஸ் எஸ் கும்பல்!



07.11.1966ல் காமராசர் டில்லியில் தங்கி இருந்தபோது ஆர் எஸ் எஸ், சங் பரிவார், சாமியார் கும்பல் அவர் வீட்டை தீயிட்டு கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்தது. அது குறித்த செய்திகள் வருமாறு ...

கலவரம் நடந்த நாளில் காமராசருடன் இருந்தவர் தரும் தகவல்:

"பார்லிமெண்டிலிருந்து வழக்கம்போல் இடைவேளை யின்போது காமராஜ் அவர்களின் இல்லமான ஜந்தர் மந்தர் ரோடு நாலாம் எண் பங்களாவிற்கு வந்தேன். பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஒரு பர்லாங் தூரமே காமராஜ் இல்லம். மணி ஒன்றரை இருக்கும். இந்தச் சமயத்தில்தான் காமராஜ் அவர்களைச் சாவகாசமாகப் பார்க்கவும் பேசவும் முடியும்.

பார்லிமெண்டுக்கு முன்புறம் பெருத்த கூட்டம் கோஷங்கள் செய்து கொண்டிருந்தது. சமீப காலத்தில் இது சாதாரண நிகழ்ச்சியாகி விட்ட விஷயம். (சென்ற பார்லிமெண்ட் கூட்டத்தின்போது ஊர்வலம் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம்.)

"ஏக ரகளையாமே!"

காமராஜ் அவர்களுடன் பகலுணவு அருந்தி விட்டுச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓய்வெடுக்கச் சென்றதும், என் மனைவிக்குப் போன் செய்தேன். அவள்தான் எனக்கு முதலில் செய்தி தெரிவித்தாள். "பார்லிமெண்ட் வீதியில் ஏக ரகளையாமே. பி.டி.அய். ஆபீஸ், ஆகாஷ் வாணி பவன் எல்லாவற்றிலுமே நெருப்பு வைத்து விட்டார்களாம்," என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. உடனே என் மனைவியிடம், "ரகளை இங்கேயே ணவந்துவிட்டது போலிருக்கிறது," என்று போனில் கூறிவிட்டு வெளியே வந்தேன்.

ஓவென்று இரைச்சலுடன் கூட்டம் உள்ளேவர முயல, காமராஜரின் உதவியாள் நிரஞ்சன்லாலும், சேவகர் பகதூர்சிங்கும் அவர்களை எதிர்த்தனர். வெறிகொண்ட கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.கூட்டம் உள்ளே புகுந்துவிட்டது.

நான் போலீஸுக்குப் போன் செய்தேன். அதே சமயத்தில் பார்லிமெண்ட் வீதியில் துப்பாக்கிப் பிரயோகம். ஆகவே போலீஸ் போன் கிடைக்கவில்லை.

நிரஞ்சனின் எதிர்ப்பு

காம்பவுண்ட் கதவைத் தாண்டி வந்த கூட்டத்தைத் தனியாளாக நிரஞ்சன் எதிர்க்க, பகதூர்சிங் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் கற்களை வீச,பதிலுக்கு நிரஞ்சனும் கற்களை வீசினார். துப்பாக்கியில் ரவை தீர்ந்துவிட்டது. நிரஞ்சனுக்கும் நல்ல அடிப்பட்டுவிட்டது. பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஓடி வந்த கூட்டம் இங்கே சேர்ந்து கொண்டது.

பகதூர்சிங் வேறு வழியின்றி முன் அறையில் புகுந்து தாளிட்டுக் கொண்டார்.

காமராஜ் அவர்களுக்கு நான் விஷயத்தைச் சொல்லி நிரஞ்சனுடன் உள் அறை ஒன்றில் தாளிட்டுக்கொண்டோம்.

கூட்டம் வீட்டின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. கற்கள் சரமாரியாகப் பொழிந்தன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. உள்பக்கம் வலைக் கதவுகள் இருந்ததால் கற்கள் உள்ளே வரவில்லை.

இப்படி ஓர் ஆபத்தான நிலையில் இருப்பதை வெளியில் தெரிவித்து உதவிக்கு வழிதேடக்கூட முடியாத இக்கட்டான நிலை.

வெளியில் ஒரே கூச்சல், வாக்குவாதம் ஏதோ எரிவது போன்ற நாற்றம். அம்பியின் குரல் கேட்டது.

அம்பி (எனும் வரதராஜன்) காமராஜரின் உதவியாள். சமையல் முதல் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளும் இளைஞர். மெட்ரிக்குலேஷன் பாஸ் செய்துள்ள அம்பி கூறுவதைக் கேளுங்கள்

"என்ன விஷயம்" என்று பார்க்கச் சமையலறையிலிருந்து வந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. வரவேற்பு அறையில் ஒரே அமர்க்களம். " காமராஜ் எங்கே?" என்று என்னைக் கேட்டார்கள். "வீட்டில் இல்லை” என்றேன். "சுடும்படி நீதானே சொன்னாய்? என்று கூறி என்னை அடித்தார்கள். நானோ நோஞ்சான். ஆனால் இந்தச் சமயத்தில் அடிக்குப் பயந்தால் பிரயோஜனம் இல்லை என்று நானும் பதிலுக்குக் கொடுத்தேன். ரௌடிகள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள். தலை, முகம், மூக்கு, தோள் என்று பார்க்காமல் ‘பொட்' ‘பொட்' டென்று அடிகள் போட்டனர். ரத்தம் வழிந்தது.

"கொன்றுவிடுங்கள்!"

ஒரு வெறியன் பெட்ரோல் தோய்த்த துணியை என் மேல் போட்டான். யாரோ நெருப்பு வைக்க வந்தார்கள். சடசடவென்று சட்டை, பனியனைக் கழற்றி எறிந்தேன்.

நான் வயிற்று வலிக்காகப் பல ஆபரேஷன்கள் செய்து கொண்டிருக் கிறேன். அந்த ஆபரேஷன் தழும்புகளைக் காட்டி, "ஏற்கனவே நான் அரை உயிர் ஆசாமி, என்னைக் கொல்வதானால் முழுதாகக் கொன்றுவிடுங்கள். தலைவர் வீட்டில் இல்லை. தயவு செய்து நம்புங்கள்!" என்று கத்தினேன்.

பேட்ரோல் டின்னுடன் ஒருவன் வந்தான். ஆனால் வேறு ஒருத்தன் அவனைத் தடுத்தான். விழுந்த அடிகளும் கிலியும் என்னை மயக்கமடையச் செய்தன."

ரங்கராஜன் மேலே கூறுகிறார்

உள்ளே நுழைந்த வெறியர்கள், கொளுத்தல் படலத்தைத் துவங்கினார்கள். ஏர்கண்டிஷன் கருவி உடைபடுவதையும் பல பொருள்கள் எரிவதையும் அறிந்தேன்.

காமராசர் என்னிடம், "வெளியே போய் அவர்களுக்குச் சமாதானம் கூறுகிறேன்!" என்றார். நான் "கூடவே கூடாது. வெறி பிடித்த நேரத்தில் நிதானத்துடன் கேட்க மாட்டார்கள்," என்று தடுத்தேன்.

வீட்டிலிருந்து எழுந்த புகை, பின்னால் இருந்த அய்ந்து அடுக்கு வித்தல்பாய் ஹவுஸில் இருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. அவர்கள் போலீஸுக்கு விஷயம் தெரிவிக்க, ஒரு பெரிய படை வந்தது. போராட்டக் காரர்களை விரட்டி அடித்தது.
வெளியே வந்த காமராசர் சரசரவென்று காரியத்தில் இறங்கினார். எரியும் பொருள்களின் மீது மணலை அள்ளி வீசினார். அந்த நேரத்திலும் அவரது கடமையுணர்வு என்னைச் சிலிர்க்கச் செய்தது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பின் பங்களாவுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டார்.

எத்தனையோ பெரிய கலவரங்களை நான் பார்த்துள்ளேன். எத்தனையோ கலகங்களுக்கு மத்தியிலே அகப்பட்டுக் கொண்டிருக் கிறேன். அப்போதெல்லாம் கலவரமடையாத நான் அன்று அந்த அறையில் காமராசர் அவர்களுடன் இருந்தபோது கலங்கிப் போனேன்.

ஒரு பெரும் தலைவரின் உயிர் அல்லவா அப்போது ஆபத்தில் இருந்தது.

''குமுதம்' 1-12-66 இதழில் புதுடில்லியில் உள்ள 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் திரு. ரெங்கராஜன் எழுதியது)

-திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்" உண்மை முகம் இதுதான்...(கோல்வால்கர் கருத்து)

"ஆர்.எஸ்.எஸ்" உண்மை முகம் இதுதான்...

நல்ல தரமான மனித இனத்தை உருவாக்க வேண்டும், அதற்கு வட இந்தியாவிலிருந்து 'நம்பூதிரிப் பார்ப்பனர்களை' தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக 'கேரளாவிற்கு' கொண்டு வர வேண்டும். திருமணமாகும் பெண், அவள் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் முதல் குழந்தையை இந்த நம்பூதிரியோடு கூடி பெற வேண்டும்.

அப்பொழுது தான் உயர்ந்த உன்னதமான சந்ததியை உருவாக்க முடியும். இதற்கு"உத்தம சந்ததி" என்றும் பெயரிட வேண்டும்.  அடுத்த  குழந்தைகளை அவள் புருஷனோடு கூடி பெற்றுக் கொள்ளலாம். 

மேற்சொன்ன மகா ஒழுக்கமான தத்துவத்தை உதிர்த்தவர் 'ஆர்.எஸ்.எஸ் குரு எம்.எஸ்.கோல்வால்க்கர்'. தத்துவ முத்துக்களை கொட்டிய இடம் குஜராத் பல்கலைக்கழகம். நாள் டிசம்பர்17, 1960. இவையெல்லாம் ஆர்.எஸ்,எஸ் சின் ஆங்கில இதழான "ஆர்கனைசரில்" ஜனவரி 2, 1961, ஆம் ஆண்டு 5ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 
Ilango Manivannan பதிவு.
(ஜே எஸ் கார்த்திக் முகநூல் பதிவு) 
29.09.22

அக்கப்போர் அண்ணாமலை''யின் இடைச்செருகல் - திருவிளையாடலா - பித்தலாட்டமா? (இறுதிப் பேருரையில் இடைச் செருகல்)


‘அக்கப்போர் அண்ணாமலை' என்று நாம் எழுதியதை அன்றாடம் அவரே முன்வந்து ‘ஆமாம், ஆமாம்' என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

அத்தகைய அக்கப்போர்களை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் கழிவுக் குப்பைத் தொட்டியாக ‘இன மலரான' ‘தினமலர்' என்ற ஒன்று இருக்கிறது.

தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் திருவாளர் அண்ணாமலை கரூரில் பேசியதாக ‘தினமலர்' (28.9.2022, பக்கம் 5) ஒரு பெட்டிச் செய்தியைப் போட்டுள்ளது.

‘‘ஆ.ராஜா கூறிய அதே ஈ.வெ.ரா. இறுதி பேருரை புத்தகத்தின் 21 வது பக்கத்தில் நாதி இல்லையே... சொல்வதற்கு நாதி இல்லையே....! சிந்திக்க நாதி இல்லையே....! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான், பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான், ஓட்டு வாங்குவதற்கு; இதற்கு கவலையே பட மாட்டேன் என்கிறானே, யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக்காரன்தான்'' என்று ஈ.வெ.ரா. பேசியதாக உள்ளது.''

‘‘ஹிந்து மதம் பற்றி ஈ.வெ.ரா. பேசியதை கூறும் ஆ.ராஜா தி.மு.க.பற்றி ஈ.வெ.ரா. பேசியதையும் கூறத் தயாரா?'' இவ்வாறு அண்ணாமலை பேசியதாக ‘தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உண்மையில் என்ன இருக்கிறது?

‘‘நாதி இல்லையே, சொல்றதுக்கு ஆள் இல்லையே, சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே, ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேங்கிறானே, முன்னேற்றக் கழகத்துக்காரன். மற்றவன் எல்லாம் என்னை வைவான். ‘இவனுக்கு ஏன் இது எல்லாம் என்ன கேடு இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்'' என்று. 

- இதுதான் அக்கப் போர் அண்ணாமலை எடுத்துக்காட்டிய தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உள்ளது.

இதில் எந்த இடத்தில் யாரது? என்ற சொல் இருக்கிறது? இந்தச் சொல்லை ‘அரோகரா' அண்ணா மலை இடைச்செருகல் செய்வானேன்? இது கடைந்தெடுத்த மோசடி அல்லவா?

‘‘ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண் டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறான்'' என்று ஓட்டு வாங்கும் எல்லோரையும்தான் பொது வாகக் குறிப்பிடுகிறார். அப்படித்தான் அந்த நூலிலும் இருக்கிறது.

நாட்டின் அரசியல், தேர்தல் தரம் எவ்வளவுக் கீழிறக்கத்துக்குப் போய்விட்டது என்ற கவலையோடு பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அந்தப் பொதுவாகச் சொன்ன வார்த்தைகளின் இடையில் எதோ தி.மு.க.வைப்பற்றி மட்டும் பெரியார் குறிப்பிட்டுப் பேசினார் என்பதுபோல் ‘‘யாரது'' என்ற சொல்லை இடையில் திணிப்பானேன்? யாரது - அந்த அக்கப் போர் அண்ணாமலைதான் இந்த மோசடியைச் செய்திருக்கிறார்.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கூடி இருக்கிற மக்களைப் பார்த்துக்கூட தந்தை பெரியார் கேட்டிருக் கிறார். ‘நீ என்ன யோக்கியன்? நீ பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போடுகிறாய்?' என்று வாக்காளர்களைப் பார்த்தே நேரடியாகக் குற்றம் சாட்டியதுண்டே!

பெரியார் சொல்லுவது நியாயம்தானே என்று பொதுமக்கள் கைதட்டி வரவேற்கத்தான் செய்தார்கள்.

தந்தை பெரியார் சொல்லாத வார்த்தையை இடையில் சொருகுவது ஏன்?

போலீஸ்காரர் அல்லவா, வழக்கை ஜோடிக்க இதுபோல் இடைச்செருகல் செய்து பழக்கப்பட்டவர் போல் இருக்கிறது.

இந்த வேலையை கருப்புச் சட்டைக்காரனிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் - பழைய காக்கிச் சட்டையும், இன்றைய காவிச் சட்டையுமான அண்ணாமலைகாரு!

தந்தை பெரியாரின் அதே இறுதிப் பேச்சில், அக்கப்போர் அண்ணாமலைகாரு எடுத்துக்காட்டிய அதே நூல் 18 ஆம் பக்கத்தில் காணப்படுகிறதே!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழிந்தால் ஒழிச்சிட்டுப்போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக, மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான். பேசறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான்'' 

என்று பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அன்று அய்யா சொன்னது (1973 டிசம்பர் 19) 49 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பாருங்கள் - எவ்வளவு தொலைநோக்குப் பார்வை!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற  ஆட்சியை (தி.மு.க.) ஒழிக்கணும் என்கிறான். ஒழிச்சிட்டுப் போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுற பேச்சை நாளைக்கு வெளிப் படையாகப் பேசுவான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான்'' என்று பேசியதில், பேசுகிற ஆள் என்கிற இடத்தில் அண்ணாமலை களையும், பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான் என்ற இடத்தில் ‘தினமலரை'யும் பொருத்திப் பாருங்கள்.

உண்மை நிலை தெளிவாகிவிடும். தந்தை பெரியாரின் தொலைநோக்குப் புரிந்துவிடும்.

திருவாளர் எல்.முருகன் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக வந்தவுடன் ஒன்றைச் சொன்னார்.

‘யாரும் பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேச வேண்டாம்' என்று சொன்ன நிலையில், ‘துக்ளக்'கில் முதல் பக்கத்திலேயே ‘‘எச்சரிக்கை!'' என்ற தலைப்பில் பெரியாரை பா.ஜ.க. புகழக் கூடாது என்று திருவாளர் குருமூர்த்தி எழுதியதையும் அண்ணாமலைகள் நினைத்துப் பார்க்கட்டும் - இதற்குள்ளும் இனப் பிரச்சினை இருக்கிறது.

நாம் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற மனுதர்மம் (அத்தியாயம் 8; சுலோகம் 415, 417) கூறுவதைக் கண்டிக்கிறோம் என்றால், அண்ணா மலைகளின் சுயமரியாதைக்கும் சேர்த்துதான்.

‘தினமலர்' மனுவை தூக்கிப் பேசுகிறது என்றால், அதன் பார்ப்பன ஆதிக்கத் தன்மைதான். அண்ணாமலைகள் சுயமரியாதையோடு சிந்திக்கட்டும்!

‘‘பிராமண வேடத்தில்'' சிவனடியாராக வந்த சிவன் கேட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் சிவனடியார் (இயற்பகை நாயனார்) தன் மனைவியை அனுப்பி வைத்ததை எல்லாம் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வோர்  தேர்தலில் வாக்கு வங்கி முறையைக் கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் சொன்னதை முடிச்சுப் போட்டு வில்லங்கம் செய்வதுதான் வேடிக்கை!

தளபதி மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைக்குப் போனதுபற்றிக்கூட  தெரியாத பூஜ்ஜியங்கள், தந்தை பெரியார்பற்றியோ, தலைவர் வீரமணிபற்றியோ, ஆ.இராசாவைப்பற்றியோ எழுதுவதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

 

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

29.9.2022

Friday, 20 September 2024

லக்னோவில் பெரியார் மேளா [18.09.1995]



 

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் 1995 – செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் மிகப் பெரிய அளவில் “பெரியார் மேளா’’ நடத்தப்படுமென அம்மாநில பகுஜன் சமாஜ் அரசு அறிவித் தது. அதன்படி லக்னோவில் உள்ள சமூக மாற்றப் பூங்காவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ், ஜோதிபாபுலே ஆகியோரின் சிலைகள் திறப்பும் நடைபெற்றது.

தலைநகர் லக்னோவில் கன்சிராம் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்ற கழகத் தோழர்களை அன்புடன் வரவேற் றார். ‘அய்யா’ படத்திற்கு மாலை அணிவித் தும் மரியாதை செலுத்தினார். நமது பெரியார் சமூகக் காப்பு அணியினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனர். மக்கள் பிற பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக வந்தனர். பேரணி ‘பேகம் அஸ்ரத்’ மகால் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திடலை சென்றடைந்தது. பிற்பகல் 2:45 மணியளவில் ‘பெரியார் மேளா’ துவங்கியது. விழாவைத் தொடங்கி வைத்த ஆசிரியர் ஆங்கிலத்தில் உரை யாற்றுகையில், “தந்தை பெரியார் ஒரு பிறவிப் போராட்ட வீரர். தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரின் விழாவை இங்கு கொண்டாடுவதன் மூலம் ‘உண்மையான சமுதாய ஒருமைப்பாடு’ ஏற்பட்டிருக்கிறது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிறவி ஏற்றத் தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார். காசியில் சம்பூர்ணானந்த் சிலையை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்தபோது, தீட்டாகிவிட்டது என உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கங்கை நீரை ஊற்றிக் கழுவினர். அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். வட நாடு அயோத்தி ராமனை மட்டுமே அறிந்திருந்தது. இப்போது ஈரோட்டு ராமசாமியையும், கன்சிராமையும் அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினார். அந்த ஆங்கில உரையை ‘டாக்டர் பிரிஜ்லால் வர்மா’ ஹிந்தியில் மொழிபெயர்த்துக் கூறியதை மக்கள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினர்.

மாநில முதலமைச்சர் மாண்புமிகு மாயாவதி உரையாற்றுகையில், “எதிர்ப் புகளைக் கண்டு எங்கள் அரசாங்கம் அஞ்சாது, பெரியாருக்குச் சிலை வைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட் டோம். காந்திக்கும், நேருவுக்கும் விழா எடுக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது? எங்கள் அரசாங்கம் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்கள், “தந்தை பெரியார் சிலையை நிறுவுவதில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க மாட்டோம். பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள்தான் வெகுமக்களின் உரிமை களை ஈட்டித் தரமுடியும். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை தேசத் துரோகி என்றவர்கள் இப்போது, “பாரத ரத்னா’’ என்று போற்றுகிறார்கள். அதேபோல், இப்போது ‘பெரியார் மேளா’வைத் தூற்றுபவர்கள் நாளை வேறு மாதிரி பேசுவார்கள். இது அவர்கள் வழக்கம். நான் சாவதற்குள் பெரியார் சிலையை அமைத்துவிட்டுத்தான் சாவேன்!’’ என்றார்.


Monday, 2 September 2024

‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

 

கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877)

‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!

கைவல்யம் (1877-1953) பகுத்தறிவு எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்தார். இந்துமதத்தில் நிலவும் மூட நம் பிக்கைகளையும் இந்துமதத் தொன்மக் கதைகளின் பொய் களையும் ஆராய்ந்து நூற்றுக்கணக் கில் கட்டுரைகளை எழுதினார்.
கைவல்யசாமி கேரளத்தில் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பொன்னுச்சாமி ஆகும். திருச்சிராப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கரூரில் மவுனசாமி மடத்தில் சேர்ந்து சமய இலக்கியங்களைக் கற்றார். “கைவல்ய நவநீதம்” என்னும் சைவ சமய நூலை நன்றாகக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். எனவே “கைவல்யசாமி” என்று மக்கள் இவரை அழைக்கலாயினர்.

கைவல்யசாமி 1903 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருச்செங்கோடு அருகில் இளம்பிள்ளை என்னும் ஓர் ஊரில் ஒரு நிலக்கிழார் இல்லத்தில் தந்தை பெரியாரும் கைவல்யசாமியும் அருகருகே அமர்ந்து விருந்து உண்டனர். அப்போது பெரியார் குடிநீர் தீர்ந்துவிட, குவளையில் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அங்கிருந்த உணவுப் பரிமாறிய பார்ப்பனர் அக்குவளையைக் கையிலெடுத்து குடிநீரை ஊற்றினார். அதைப் பார்த்த தலைமைச் சமையல்காரர், “சூத்திரன் தொட்ட பாத்திரத்தை ஏன் தொட்டாய்?” என்று கூறிக் கண்டித்தார்.

அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யசாமி ஆத்திரம் அடைந்து சோற்றுக் கையுடன் சமையல்காரப் பார்ப்பனர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். “சூத்திரன்’’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி ! என்னும் சொலவடை சொற்றொடர் இவ்வாறு தோன்றியதே ஆகும்.
குடிஅரசு (இதழ்), திராவிடநாடு (இதழ்) போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். அவை பெரும்பாலும் இந்து சமயப் புராணப் புரட்டுகளையும், இதிகாசங்கள், இந்துமத விழாக்கள் ஆகியவற்றின் பொருந்தாத மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதாக இருந்தன. 1929 ஆண்டு முதல் பல மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பேசினார்.
கைவல்யசாமி கோபிச் செட்டிப்பாளையத்துக்கு அருகில் பங்களாபுதூரில் 1953 ஆம் ஆண்டில் காலமானார்.