07.11.1966ல் காமராசர் டில்லியில் தங்கி இருந்தபோது ஆர் எஸ் எஸ், சங் பரிவார், சாமியார் கும்பல் அவர் வீட்டை தீயிட்டு கொளுத்தி கொலை செய்ய முயற்சி செய்தது. அது குறித்த செய்திகள் வருமாறு ...
கலவரம் நடந்த நாளில் காமராசருடன் இருந்தவர் தரும் தகவல்:
"பார்லிமெண்டிலிருந்து வழக்கம்போல் இடைவேளை யின்போது காமராஜ் அவர்களின் இல்லமான ஜந்தர் மந்தர் ரோடு நாலாம் எண் பங்களாவிற்கு வந்தேன். பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஒரு பர்லாங் தூரமே காமராஜ் இல்லம். மணி ஒன்றரை இருக்கும். இந்தச் சமயத்தில்தான் காமராஜ் அவர்களைச் சாவகாசமாகப் பார்க்கவும் பேசவும் முடியும்.
பார்லிமெண்டுக்கு முன்புறம் பெருத்த கூட்டம் கோஷங்கள் செய்து கொண்டிருந்தது. சமீப காலத்தில் இது சாதாரண நிகழ்ச்சியாகி விட்ட விஷயம். (சென்ற பார்லிமெண்ட் கூட்டத்தின்போது ஊர்வலம் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம்.)
"ஏக ரகளையாமே!"
காமராஜ் அவர்களுடன் பகலுணவு அருந்தி விட்டுச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓய்வெடுக்கச் சென்றதும், என் மனைவிக்குப் போன் செய்தேன். அவள்தான் எனக்கு முதலில் செய்தி தெரிவித்தாள். "பார்லிமெண்ட் வீதியில் ஏக ரகளையாமே. பி.டி.அய். ஆபீஸ், ஆகாஷ் வாணி பவன் எல்லாவற்றிலுமே நெருப்பு வைத்து விட்டார்களாம்," என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே வீட்டு வாசலில் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. உடனே என் மனைவியிடம், "ரகளை இங்கேயே ணவந்துவிட்டது போலிருக்கிறது," என்று போனில் கூறிவிட்டு வெளியே வந்தேன்.
ஓவென்று இரைச்சலுடன் கூட்டம் உள்ளேவர முயல, காமராஜரின் உதவியாள் நிரஞ்சன்லாலும், சேவகர் பகதூர்சிங்கும் அவர்களை எதிர்த்தனர். வெறிகொண்ட கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.கூட்டம் உள்ளே புகுந்துவிட்டது.
நான் போலீஸுக்குப் போன் செய்தேன். அதே சமயத்தில் பார்லிமெண்ட் வீதியில் துப்பாக்கிப் பிரயோகம். ஆகவே போலீஸ் போன் கிடைக்கவில்லை.
நிரஞ்சனின் எதிர்ப்பு
காம்பவுண்ட் கதவைத் தாண்டி வந்த கூட்டத்தைத் தனியாளாக நிரஞ்சன் எதிர்க்க, பகதூர்சிங் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் கற்களை வீச,பதிலுக்கு நிரஞ்சனும் கற்களை வீசினார். துப்பாக்கியில் ரவை தீர்ந்துவிட்டது. நிரஞ்சனுக்கும் நல்ல அடிப்பட்டுவிட்டது. பார்லிமெண்ட் வீதியிலிருந்து ஓடி வந்த கூட்டம் இங்கே சேர்ந்து கொண்டது.
பகதூர்சிங் வேறு வழியின்றி முன் அறையில் புகுந்து தாளிட்டுக் கொண்டார்.
காமராஜ் அவர்களுக்கு நான் விஷயத்தைச் சொல்லி நிரஞ்சனுடன் உள் அறை ஒன்றில் தாளிட்டுக்கொண்டோம்.
கூட்டம் வீட்டின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. கற்கள் சரமாரியாகப் பொழிந்தன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. உள்பக்கம் வலைக் கதவுகள் இருந்ததால் கற்கள் உள்ளே வரவில்லை.
இப்படி ஓர் ஆபத்தான நிலையில் இருப்பதை வெளியில் தெரிவித்து உதவிக்கு வழிதேடக்கூட முடியாத இக்கட்டான நிலை.
வெளியில் ஒரே கூச்சல், வாக்குவாதம் ஏதோ எரிவது போன்ற நாற்றம். அம்பியின் குரல் கேட்டது.
அம்பி (எனும் வரதராஜன்) காமராஜரின் உதவியாள். சமையல் முதல் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளும் இளைஞர். மெட்ரிக்குலேஷன் பாஸ் செய்துள்ள அம்பி கூறுவதைக் கேளுங்கள்
"என்ன விஷயம்" என்று பார்க்கச் சமையலறையிலிருந்து வந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. வரவேற்பு அறையில் ஒரே அமர்க்களம். " காமராஜ் எங்கே?" என்று என்னைக் கேட்டார்கள். "வீட்டில் இல்லை” என்றேன். "சுடும்படி நீதானே சொன்னாய்? என்று கூறி என்னை அடித்தார்கள். நானோ நோஞ்சான். ஆனால் இந்தச் சமயத்தில் அடிக்குப் பயந்தால் பிரயோஜனம் இல்லை என்று நானும் பதிலுக்குக் கொடுத்தேன். ரௌடிகள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள். தலை, முகம், மூக்கு, தோள் என்று பார்க்காமல் ‘பொட்' ‘பொட்' டென்று அடிகள் போட்டனர். ரத்தம் வழிந்தது.
"கொன்றுவிடுங்கள்!"
ஒரு வெறியன் பெட்ரோல் தோய்த்த துணியை என் மேல் போட்டான். யாரோ நெருப்பு வைக்க வந்தார்கள். சடசடவென்று சட்டை, பனியனைக் கழற்றி எறிந்தேன்.
நான் வயிற்று வலிக்காகப் பல ஆபரேஷன்கள் செய்து கொண்டிருக் கிறேன். அந்த ஆபரேஷன் தழும்புகளைக் காட்டி, "ஏற்கனவே நான் அரை உயிர் ஆசாமி, என்னைக் கொல்வதானால் முழுதாகக் கொன்றுவிடுங்கள். தலைவர் வீட்டில் இல்லை. தயவு செய்து நம்புங்கள்!" என்று கத்தினேன்.
பேட்ரோல் டின்னுடன் ஒருவன் வந்தான். ஆனால் வேறு ஒருத்தன் அவனைத் தடுத்தான். விழுந்த அடிகளும் கிலியும் என்னை மயக்கமடையச் செய்தன."
ரங்கராஜன் மேலே கூறுகிறார்
உள்ளே நுழைந்த வெறியர்கள், கொளுத்தல் படலத்தைத் துவங்கினார்கள். ஏர்கண்டிஷன் கருவி உடைபடுவதையும் பல பொருள்கள் எரிவதையும் அறிந்தேன்.
காமராசர் என்னிடம், "வெளியே போய் அவர்களுக்குச் சமாதானம் கூறுகிறேன்!" என்றார். நான் "கூடவே கூடாது. வெறி பிடித்த நேரத்தில் நிதானத்துடன் கேட்க மாட்டார்கள்," என்று தடுத்தேன்.
வீட்டிலிருந்து எழுந்த புகை, பின்னால் இருந்த அய்ந்து அடுக்கு வித்தல்பாய் ஹவுஸில் இருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. அவர்கள் போலீஸுக்கு விஷயம் தெரிவிக்க, ஒரு பெரிய படை வந்தது. போராட்டக் காரர்களை விரட்டி அடித்தது.
வெளியே வந்த காமராசர் சரசரவென்று காரியத்தில் இறங்கினார். எரியும் பொருள்களின் மீது மணலை அள்ளி வீசினார். அந்த நேரத்திலும் அவரது கடமையுணர்வு என்னைச் சிலிர்க்கச் செய்தது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பின் பங்களாவுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டார்.
எத்தனையோ பெரிய கலவரங்களை நான் பார்த்துள்ளேன். எத்தனையோ கலகங்களுக்கு மத்தியிலே அகப்பட்டுக் கொண்டிருக் கிறேன். அப்போதெல்லாம் கலவரமடையாத நான் அன்று அந்த அறையில் காமராசர் அவர்களுடன் இருந்தபோது கலங்கிப் போனேன்.
ஒரு பெரும் தலைவரின் உயிர் அல்லவா அப்போது ஆபத்தில் இருந்தது.
''குமுதம்' 1-12-66 இதழில் புதுடில்லியில் உள்ள 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் திரு. ரெங்கராஜன் எழுதியது)
-திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment