‘அக்கப்போர் அண்ணாமலை' என்று நாம் எழுதியதை அன்றாடம் அவரே முன்வந்து ‘ஆமாம், ஆமாம்' என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.
அத்தகைய அக்கப்போர்களை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் கழிவுக் குப்பைத் தொட்டியாக ‘இன மலரான' ‘தினமலர்' என்ற ஒன்று இருக்கிறது.
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் திருவாளர் அண்ணாமலை கரூரில் பேசியதாக ‘தினமலர்' (28.9.2022, பக்கம் 5) ஒரு பெட்டிச் செய்தியைப் போட்டுள்ளது.
‘‘ஆ.ராஜா கூறிய அதே ஈ.வெ.ரா. இறுதி பேருரை புத்தகத்தின் 21 வது பக்கத்தில் நாதி இல்லையே... சொல்வதற்கு நாதி இல்லையே....! சிந்திக்க நாதி இல்லையே....! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான், பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான், ஓட்டு வாங்குவதற்கு; இதற்கு கவலையே பட மாட்டேன் என்கிறானே, யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக்காரன்தான்'' என்று ஈ.வெ.ரா. பேசியதாக உள்ளது.''
‘‘ஹிந்து மதம் பற்றி ஈ.வெ.ரா. பேசியதை கூறும் ஆ.ராஜா தி.மு.க.பற்றி ஈ.வெ.ரா. பேசியதையும் கூறத் தயாரா?'' இவ்வாறு அண்ணாமலை பேசியதாக ‘தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உண்மையில் என்ன இருக்கிறது?
‘‘நாதி இல்லையே, சொல்றதுக்கு ஆள் இல்லையே, சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே, ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேங்கிறானே, முன்னேற்றக் கழகத்துக்காரன். மற்றவன் எல்லாம் என்னை வைவான். ‘இவனுக்கு ஏன் இது எல்லாம் என்ன கேடு இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்'' என்று.
- இதுதான் அக்கப் போர் அண்ணாமலை எடுத்துக்காட்டிய தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உள்ளது.
இதில் எந்த இடத்தில் யாரது? என்ற சொல் இருக்கிறது? இந்தச் சொல்லை ‘அரோகரா' அண்ணா மலை இடைச்செருகல் செய்வானேன்? இது கடைந்தெடுத்த மோசடி அல்லவா?
‘‘ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண் டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறான்'' என்று ஓட்டு வாங்கும் எல்லோரையும்தான் பொது வாகக் குறிப்பிடுகிறார். அப்படித்தான் அந்த நூலிலும் இருக்கிறது.
நாட்டின் அரசியல், தேர்தல் தரம் எவ்வளவுக் கீழிறக்கத்துக்குப் போய்விட்டது என்ற கவலையோடு பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.
அந்தப் பொதுவாகச் சொன்ன வார்த்தைகளின் இடையில் எதோ தி.மு.க.வைப்பற்றி மட்டும் பெரியார் குறிப்பிட்டுப் பேசினார் என்பதுபோல் ‘‘யாரது'' என்ற சொல்லை இடையில் திணிப்பானேன்? யாரது - அந்த அக்கப் போர் அண்ணாமலைதான் இந்த மோசடியைச் செய்திருக்கிறார்.
தேர்தல் பொதுக்கூட்டங்களில் கூடி இருக்கிற மக்களைப் பார்த்துக்கூட தந்தை பெரியார் கேட்டிருக் கிறார். ‘நீ என்ன யோக்கியன்? நீ பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போடுகிறாய்?' என்று வாக்காளர்களைப் பார்த்தே நேரடியாகக் குற்றம் சாட்டியதுண்டே!
பெரியார் சொல்லுவது நியாயம்தானே என்று பொதுமக்கள் கைதட்டி வரவேற்கத்தான் செய்தார்கள்.
தந்தை பெரியார் சொல்லாத வார்த்தையை இடையில் சொருகுவது ஏன்?
போலீஸ்காரர் அல்லவா, வழக்கை ஜோடிக்க இதுபோல் இடைச்செருகல் செய்து பழக்கப்பட்டவர் போல் இருக்கிறது.
இந்த வேலையை கருப்புச் சட்டைக்காரனிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் - பழைய காக்கிச் சட்டையும், இன்றைய காவிச் சட்டையுமான அண்ணாமலைகாரு!
தந்தை பெரியாரின் அதே இறுதிப் பேச்சில், அக்கப்போர் அண்ணாமலைகாரு எடுத்துக்காட்டிய அதே நூல் 18 ஆம் பக்கத்தில் காணப்படுகிறதே!
‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழிந்தால் ஒழிச்சிட்டுப்போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக, மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான். பேசறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான்''
என்று பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.
அன்று அய்யா சொன்னது (1973 டிசம்பர் 19) 49 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பாருங்கள் - எவ்வளவு தொலைநோக்குப் பார்வை!
‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை (தி.மு.க.) ஒழிக்கணும் என்கிறான். ஒழிச்சிட்டுப் போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுற பேச்சை நாளைக்கு வெளிப் படையாகப் பேசுவான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான்'' என்று பேசியதில், பேசுகிற ஆள் என்கிற இடத்தில் அண்ணாமலை களையும், பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான் என்ற இடத்தில் ‘தினமலரை'யும் பொருத்திப் பாருங்கள்.
உண்மை நிலை தெளிவாகிவிடும். தந்தை பெரியாரின் தொலைநோக்குப் புரிந்துவிடும்.
திருவாளர் எல்.முருகன் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக வந்தவுடன் ஒன்றைச் சொன்னார்.
‘யாரும் பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேச வேண்டாம்' என்று சொன்ன நிலையில், ‘துக்ளக்'கில் முதல் பக்கத்திலேயே ‘‘எச்சரிக்கை!'' என்ற தலைப்பில் பெரியாரை பா.ஜ.க. புகழக் கூடாது என்று திருவாளர் குருமூர்த்தி எழுதியதையும் அண்ணாமலைகள் நினைத்துப் பார்க்கட்டும் - இதற்குள்ளும் இனப் பிரச்சினை இருக்கிறது.
நாம் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற மனுதர்மம் (அத்தியாயம் 8; சுலோகம் 415, 417) கூறுவதைக் கண்டிக்கிறோம் என்றால், அண்ணா மலைகளின் சுயமரியாதைக்கும் சேர்த்துதான்.
‘தினமலர்' மனுவை தூக்கிப் பேசுகிறது என்றால், அதன் பார்ப்பன ஆதிக்கத் தன்மைதான். அண்ணாமலைகள் சுயமரியாதையோடு சிந்திக்கட்டும்!
‘‘பிராமண வேடத்தில்'' சிவனடியாராக வந்த சிவன் கேட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் சிவனடியார் (இயற்பகை நாயனார்) தன் மனைவியை அனுப்பி வைத்ததை எல்லாம் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வோர் தேர்தலில் வாக்கு வங்கி முறையைக் கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் சொன்னதை முடிச்சுப் போட்டு வில்லங்கம் செய்வதுதான் வேடிக்கை!
தளபதி மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைக்குப் போனதுபற்றிக்கூட தெரியாத பூஜ்ஜியங்கள், தந்தை பெரியார்பற்றியோ, தலைவர் வீரமணிபற்றியோ, ஆ.இராசாவைப்பற்றியோ எழுதுவதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.9.2022
No comments:
Post a Comment