Tuesday, 29 August 2023

குலக்கல்வியை எதிர்த்து உயிர் விட்ட நுங்கம்பாக்கம் பழனி

“உழைப்பவனைத் தேடிப் பிடித்துச் சேர்த்தால் ஒரு கட்சிக்கு உன்னதமான கட்டுக்கோப்பு உண்டு. கிடைப்பவனைக் கொண்டு நடத்திச் செல்லும் போக்கு சிறந்த கட்டுக்கோப்பை யளிக்காது.’’ நம் அறிஞர் அண்ணா அவர்களின் இந்த மணி வரிகளுக்கு ஏற்ப _ கட்சியின் கட்டுக்கோப்பை வளர்க்கும் தொண்டர் பணியின் முன்அணியில் நின்றவர் _ முகப்பில் நிற்பவர், நுங்கை வட்டத்து செயல்வீரர். பூக்காடாம் திராவிடத்திற்கு தன் கடமை செய்து சாக்காட்டில் புகுந்துவிட்ட வீரன். மாநில மாநாட்டின்போது கடமை உணர்ச்சிக்காக அண்ணாவால் பாராட்டப் பட்ட நெஞ்சுரம் கொண்டோன். நல்இளைஞன். நம் பழம் நீ!

இந்த இளம் விளக்கு _ கொலைகாரர் ஆச்சாரியார் கொண்டுவந்த கல்வி திட்டத்தின் போது களம் கண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்து அறப்போரில் ஈடுபட்டார். பாண்டிபசாரில் ஊர்வலம் செல்கிறது. கலையச் சொன்னார்கள் போலீஸ் காரர்கள். கலையவில்லை; தாக்கினார்கள் தாக்கினார்கள், மண்டை பிளந்து மார்பகம் எல்லாம் ரத்தம் வழிய மலபார் போலீசார் தாக்கினார்கள். அப்பொழுதும் ‘புதிய கல்வித் திட்டம் ஒழிக! ஒழிக!’ என்று கூறியபடியே சாய்ந்தார்! சிறைப்பட்டார். சரியான உணவின்றி சிலநாள் வாடினார். கடும்சுரம் அவரை அணைத்துக் கொண்டது. 29.8.1954இல் மாண்டு போனார். ஒரு கொள்கை வீரன் மறைந்து போனான்.

பழம் நீ! தாயகத்திற்கு உழைத்தார்; தொண்டாற்றினார்; கைத்தறித் துணிகளைத் தலையில் சுமந்து விற்றார். இப்படி அவர் நாட்டிற்குத் தந்த உழைப்பு பெரிது. நுங்கை வட்டத்திற்கோ அதனினும் பெரிது. இன்று கல்லறையில் இருந்தபடியே கலங்கரையாக விளங்குகிறார் தொண்டர்களுக்கு. தொண்டர் களுக்கு மதிப்பளிக்கிற இயக்கம் தி.மு.க என்பதால், அந்தக் கடமை வீரருக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவர் கல்லறைக்கு மரியாதை செய்கிறோம்.

“நானேறுகிறேன் நலிவின்றி நீ இருப்பாய், ஊனெடுத்தோம் என்ன பயன் ஊருக்கு உழைப்போம்!’’ ஆம்! இதைத்தான் அவர் கல்லறை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது!

(தரவு: ‘தென்றல்’ - 04.12.1954)
-உண்மை இதழ்,1-15.8.16

No comments:

Post a Comment