Friday 4 August 2023

ஜாதி ஒழிப்புப் போராட்டம் கடந்து வந்த பாதை - 1795 முதல் 2019 வரை


மொழியாக்கம்: 
எம்.ஆர்.மனோகர் 

7

இந்திய வரலாற்றில், 225 ஆண்டுகளில் ஜாதிக்கு எதிரான சட்டங்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளும் கடந்து வந்த பாதைகளை மனோஜ் மித்தா (MANOJ MITTA) அவர்கள் 2023இல் எழுதி வெளியாயின.

“CASTE PRIDE” என்ற நூலிலிருந்து மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது.

மனோஜ் மித்தா புதுடி¬ல்லியில் பணிபுரிந்து வரும் இதழியலாளர். சட்டம், மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி சார்ந்த பிரச்சினைகள் மீது தீவிரமாக கவனம் செலுத்திவரும் எழுத்தாளர் இவர்.

1795 முதல் 2019 வரை. கடந்த 225 ஆண்டுகளில் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் பல சட்டச் சிக்கல்களையும், மாற்றங்களையும், தீர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளன. ஆண்டுவாரியாக பட்டியலிட்டால் நீதித்துறை எத்தனை விதமான வர்ணஜாலங்களை, சமூகநீதிக்கு அடிப்படையான ஜாதி ஒழிப்புப் போராட்டம் எத்தனை மைல் கற்களைக் கடந்து வந்துள்ளது என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. 

1795 உயர்ஜாதிக்காரர்களை திருப்திப்படுத்திக் கவரும் நோக்கத்தில் கிழக்கு இந்தியக் கம்பெனி பனாரஸ் வாழ் (இன்றைய வாரணாசி) பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்தது.

1816 தாழ்த்தப்பட்ட ஜாதி குற்றவாளிகளுக்கு, சிறு குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. கால்கள் மட்டும் நீட்டிக்கொள்ளும் வகையில் துளைகள் இடப்பட்ட ஒரு மரப்பலகையுடன் அவர்களைக் கட்டி வைக்கும் மிருகத்தனமான தண்டனை அது.

6

1817 வாரணாசி பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்று மறுபடியும் சட்டரீதியான மாற்றம்.

1829 உடன்கட்டை ஏறும் ‘சதி’ என்னும் மூடப்பழக்கம் வில்லியம் பென்டிங்கால் ஒழிப்பு. மீறி நடந்தால் தண்டனை அறிவிப்பு.

1850 குறிப்பிட்ட ஜாதி எதையும் சாராத ஹிந்துக்களுக்கு சொத்துரிமை தல்ஹவ்ஸி பிரபுவால் கிடைத்தது.

1855 லண்டனில் இயங்கிவந்த சட்ட வல்லுநர்கள் குழு ஒன்று ராஜபுதன வம்சாவளியினர் வர்ணப் பிரிவுப்படி சத்திரியர்கள்தான் என்று ஒப்புதல் வழங்கிற்று.  பரசுராமனால் அழிக்கப்பட்டவர்கள் சத்திரியர்களாக இருக்க முடியாது என்னும் பார்ப்பனர் வாதம் அந்தத் தீர்ப்பால் முறியடிக்கப்பட்டது.

1858 திருவிதாங்கூர் சமஸ்தான திவான் மாதவராவ் தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் தோள் சீலை அணிந்து பொது இடங்களுக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.

1859 எதிர்ப்புகள் வலுப் பெற்ற நிலையில் பின்வாங்கிய திவான், தோள் சீலை அணிந்து கொள்ள அனுமதி வழங்கி, உயர் ஜாதிப் பெண்களுக்கு நிகரான அலங்காரம் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார்.

1862 உயர்ஜாதியினரின் வாதங்களுக்குச் செவி சாய்த்து, பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஏறுதல் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகக் கருதப்படும் என்று அறிவித்தது.

1868 ஜமீன்தார்களின் குடும்பங்களில் நிகழும் சுவீகாரம் அங்கீகரிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு அதைச் சார்ந்து சில நிபந்தனைகள் சட்ட நிபுணர் குழுவால் விதிக்கப்பட்டன.

1887 சமூகச் சீர்திருத்தக் குழுவான அய்.என்.எஸ்.ஸி. அமைப்பின் தலைவராக திவான் மாதவராவ் நியமனம்.

1890 ஜோதிபா பூலே அறிமுகப்படுத்திய சத்திய ஷோகக் திருமண முறையை அங்கீகரித்த மும்பை உயர்நீதி மன்றம், சடங்குகள் மறுக்கப்பட்ட அத்தகைய திருமணங்களுக்கு நட்ட ஈடாக பார்ப்பனப் புரோகிதர் களுக்கு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று அறிவித்தது.

1898 வைசியர்கள் பூண்டோடு அழிந்து விட்டார்கள் என்னும் பார்ப்பனர் கருத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.ரானடே நிராகரித்து தீர்ப்பளித்தார்.

1908 தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ஆலய விதிகளை மீறி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டால் ஆலய அறங்காவலர் குழுவே பொறுப்பேற்க நேரிடும் என்று சட்ட நிபுணர் குழு அறிவித்தது.

1913 நெருப்பில் ஒரு பெண் தவறி விழுந்தாள்; உடன்கட்டை ஏற்றப்படவில்லை என்று ஒரு குற்றவாளி கூறியதை அலகாபாத் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்து அந்த நபருக்கு தண்டனை வழங்கிற்று.

1916 தீண்டாமை ஒழிப்புக்காக போராடி வந்த சமூக ஆர்வலர் மானக்ஜி தாதாபாய் என்பவர் பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை எடுக்க ஒரு சட்ட நிபுணர் குழுவை வற்புறுத்தினார்.

1918 விட்டல்பாய் பட்டேல் ஹிந்துக்களுக்கு ஜாதி மறுப்பு திருமண உரிமை வழங்கும் மசோதாவை நிறைவேற்றி வைத்தார்.

1919 சில உயர்ஜாதி வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட ஜாதி குற்றவாளிக்கு அளிக்கப்பட்டு வந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனையை ஒழித்தது.

1919 வங்க தேசத்தில் வாழும் காயஸ்தர் இன மக்கள் சூத்திரர்களாக கருதப்பட்டாலும், ஹிந்தி மொழி புழங்கும் மற்ற பகுதிகளில் அவர்கள் க்ஷத்திரியர்கள் என்ற வினோத அறிவிப்பை அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்டது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.சி.ராஜா முதல் சட்டமன்ற உறுப்பினரானார். தாழ்த்தப்பட்ட தன் வகுப்பினர் முன்னேற வழிவகுக்க வேண்டும் என்று கவர்னருடன் வாதாடினார்.

1920 நாக்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தீர்மானம் நிறைவேற்றியது. தீண்டாமைக் குற்றம் ஹிந்துக்கள் மீதே சுமத்தப்படுவது சரியல்ல என்றும் அந்தக் கூட்டம் வலியுறுத்தியது.

1921 தீண்டத்தகாதவர்கள் உட்பட பார்ப்பனர் அல்லாதார் அனைவருக்கும் ஒதுக்கீடுகள் வழங்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் அளித்தது.

1922 காங்கிரஸின் நிதி உதவியுடன் தீண்டத்தகாதவர் களுக்கென தனியாக கிணறுகள் வெட்டப்பட்டு பராமரிக்கப்படவும் வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

1923 தீண்டத்தகாதவர்கள், குடிநீர் வசதிகள் உள்ள இடங்கள் உட்பட, சில குறிப்பிட்ட பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடலாம் என்று  மும்பை மாநில சட்டமன்றக் குழு அறிவித்தது.

1924 மலபார் கல்பத்தி பகுதியில் நடந்த ஒரு விழாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கலந்து கொண்டதை எதிர்த்து பாலக்காட்டுப் பார்ப்பனர்கள் சென்னை சட்டமன்ற குழுவைக் கண்டித்து போராடினார்.

1926 தீண்டாமைக் குற்றத்தை எதிர்த்து சென்னை சட்டமன்றக் குழு மசோதா ஒன்றை நிறைவேற்றியது. வீரய்யன் என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.சி. இதை நிறைவேற்ற வற்புறுத்தி வந்தார்.

1926 புரோகிதச் சடங்குகளின்றி திருமணங்கள் நடந்தாலும் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு கட்டணம் அளிக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத விதியை மும்பை சட்டமன்றக் குழு ரத்து செய்தது. அதற்குத் தடை விதித்தது.

1927 வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ள மகத் குளம் சத்தியாகிரகம் அம்பேத்கர் தலைமையில் நடந்தது. பொதுவான ஒரு குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தீண்டத்தகாதவர் களுக்கு இதன் மூலம் உரிமை கிடைத்தது.

1928 மேட்டுக் குடியினராக வாழும் மராட்டியர்களை சத்திரியர்களாகவோ சூத்திரர்களாகவோ ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1929 தீண்டாமைக்கு எதிரான முதல் தேசிய மசோதா அம்பேத்கரால் உருவாயிற்று. தீண்டத்தகாதவர்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று 1908இல் சட்ட நிபுணர் குழு ஒப்புக்கொண்டதை அம்பேத்கரின் இந்த மசோதா கண்டித்தது. ஆலயப் பிரவேச உரிமை தீண்டத்தகாதவர்களுக்கும் உண்டு என்பதை அது வலியுறுத்தியது.

1930 அம்பேத்கரின் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் ஆர்.கே.சண்முகம் செட்டி என்னும் உறுப்பினர் அதனை வலியுறுத்தினார்.

1932 தீண்டத்தகாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை காந்தியார் சமர்ப்பித்த தீர்மானத்தால் கிடைத்தது. எனினும் ஆலயப் பிரவேச உரிமை வழங்கப்படவில்லை.

1933 உயர் ஜாதிக்காரர்களின் ஆட்சேபனைக்கு உட்படாத சில ஆலயங்களில் தீண்டத்தகாதவர்கள் பிரவேசித்து வழிபடலாம் என்ற மசோதா சி.எஸ்.ரங்கா அய்யர் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

1936 பிறப்பு அல்லது மதம் சார்ந்து எந்த ஒரு ஹிந்துவுக்கும் ஆலயப் பிரவேச உரிமை மறுக்கப்படக் கூடாது என்று திருவிதாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் அறிவித்தார்.

1937 ஆரிய சமாஜ் விதிகளுக்கு உட்பட்டு ஹிந்துக்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு மசோதா சட்ட வடிவம் பெற்றது.

1938 உயர் ஜாதியினர் ஆட்சேபிக்காவிட்டால் சில ஆலயங்களுக்குள் தீண்டத்தகாதவர்கள் பிரவேசிக்கலாம் என்று காந்தியார் கூறியதை ஏற்க மறுத்து, எல்லோரும் ஆட்சேபனைகளை மீறி பிரவேசிக்கலாம் என்று மும்பையில் பிரிட்டிஷ் அரசு உறுதிப்படுத்தியது.

1938 மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்படும் நாட்டில் தீண்டாமையும் நிலவக் கூடாது என்பதை வலியுறுத்தி எம்.சி.ராஜா ஒரு மசோதா தாக்கல் செய்தார்.

1939 தீண்டாமைச் சார்ந்த குற்றங்களைத் தடுக்கத் தவறிய காவல் துறையையும் காங்கிரஸ் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து அம்பேத்கர் போராடினார்.

1939 தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த தொண்டர்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தடையை மீறி பிரவேசிக்க வைத்தார் ராஜாஜி. தண்டனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு கிடைக்கவும் வழிவகுத்தார்.

1946 தீண்டாமையை குற்றமாகக் கருதி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1946 ஹிந்து மதச் சட்டப்படி கோத்திரங்கள் மாறி திருமணம் செய்து கொள்வது தவறல்ல என்று கோபால்ராவ் தேஷ்முக் தாக்கல் செய்த மசோதாவை பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது.

1947 தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆலயங்களுக்குள் செல்லவிடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது. தண்டனை கடுமையாக இருக்கும் என்று மும்பை உயர்நீதிமன்றமும் அறிவித்தது.

1948 அரசமைப்புச் சட்டக் குழுவினர் தீண்டாமைக்கு எதிராக உள்ள பிரிவை ஆதரித்து “மகாத்மா காந்தி வாழ்க” என்று குரலெழுப்பினர். அந்தக் குழுவில் இருந்த ஒரே தாழ்த்தப்பட்ட பெண்மணி தாட்சாயணி வேலாயுதன் மட்டும் எதிர்த்தது வியப்பளித்தது.

1948 பூரி ஜகந்நாதர் ஆலய அறங்காவலர் குழு எல்லோருக்கும் ஆலயப் பிரவேச உரிமை உண்டு என்றும் எவ்விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது என்றும் சட்டமாக்க ஒடிசா அரசை வற்புறுத்தியது.

1948 மும்பையில் சுவாமி நாராயண் குழு என்னும் அமைப்பு ஹிந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அவர்களின் ஆலயங்களில் பிரவேசிக்கலாம் என்று விதி அமைத்திருந்தது. ஒடிசாவில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் அந்த விதிக்குத் தடை விதித்தது.

1949 ஹிந்து மதச் சட்டத்தின் கீழ் கலப்புத் திருமணங்களுக்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைத்தது.

1950 தீண்டாமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைச் சார்ந்த குற்றங்களுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.

1953 பார்ப்பனர் அல்லாதாரின் திருமண முறைகள் சார்ந்து பெரியார் உருவாக்கிய விதிகளை மதராஸ் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

1954 தாழ்த்தப்பட்டோரை பிரதான வாசல் வழியாக வர அனுமதிக்கலாமா, கடவுள் சிலைகளைத் தொட அனுமதிக்கலாமா போன்ற கேள்விகள் எழுந்து வாரணாசி, காசி விஸ்வநாதர் ஆலயமே போர்க் களமாயிற்று. மோதல்கள், விவாதங்கள், கூச்சல்கள் விண்ணைப் பிளந்தன.

1955 தீண்டாமை ஒழிப்பு மசோதாவில் அம்பேத்கர் அவர்களுக்கு உடன்பாடில்லாத சில அம்சங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நீக்காமலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது.

1956 ஆலயப் பிரவேச உரிமை அனைவருக்கும் வழங்க மாட்டோம் என்று சுவாமி நாராயண் அமைப்பு முரண்டு பிடித்தது. மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1959 ஜாதி அடையாளம் என்பது பிறப்பு என்ற விபத்தைச் சார்ந்தது அல்ல என்று வி.வி.கிரி வாதிட்டார். அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

1966 சுவாமி நாராயண் குழுவினர் தாங்கள் ஹிந்துக்களே அல்ல என்றும், அதனால் ஆலயப் பிரவேச மறுப்புக்கு தங்களுக்கு உரிமை உண்டு என்றனர். உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது.

1967 அறிஞர் அண்ணாவின் அரசு சுயமரியாதைத் திருமணங்களுக்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கிற்று.

1968 கீழ்வெண்மணி ஜாதிக் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 42 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

1969 அம்பேத்கர் உருவாக்கித் தந்த சீர்திருத்த முறைகளை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்றம் அவற்றின்படி தீண்டாமை ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.

1973 செல்வந்தர்கள் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் கீழ்வெண்மணி கலவரக் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்து விட்டது.

1976 1954இல் அம்பேத்கர் செய்த சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கேற்ப தீண்டாமைச் சட்டத்தில் இந்திரா காந்தி அரசு சில திருத்தங்களைச் செய்தது. 

1977 குஜராத்தில் பெல்ச்சி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர். மொரார்ஜி தேசாய் அரசு அது ஜாதிக் கலவரம் அல்ல என்று மூடி மறைத்தது. தாழ்த்தப்பட்ட சமூக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துப் போராடினர்.

1982 பெல்ச்சி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 

1983 தாழ்த்தப்பட்ட மக்கள் இருவரைக் கொன்ற மஹாவீர் மஹதோ தூக்கிலிடப்பட்டான் - பெல்ச்சி வழக்கின் முடிவில்.

1987 உடன்கட்டை ஏறும் கொடுமை எங்கேனும் நிகழ்ந்தால் அது கொலைக் குற்றமாகவே கருதப்படும் என்று ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு அறிவித்தது.

1989 தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்பட்டால் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.

1990 கீழ்வெண்மணிக் கலவரக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

1991 ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

1992 தீண்டாமை சார்ந்த குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்திற்று.

1996 தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இருபது பேர் பீகாரில் படுகொலை செய்யப்பட்டனர். ரண்வீர் சேனா என்ற அமைப்பினர் செய்த இந்தப் பாதகச் செயலை அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் “நாட்டுக்கே மிகப் பெரிய தலைகுனிவு” என்று வர்ணித்தார்.

1997 ரண்வீர் சேனாவைச் சேர்ந்த வெறியர்கள் பீகாரில் 58 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்று குவித்தனர். இது “தேசிய அவமானம்” என்றார் குடியரசுத் தலைவர்.

1997 மும்பை ரமாபாய் நகரில் சில விஷமிகள் அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியதைக் கண்டித்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராடினர். அவர்களுள் பத்துப் பேரை மும்பை காவல் துறையினர் சுட்டு வீழ்த்திய கொடுமை நிகழ்ந்தது.

1998 ரமாபாய் நகரில் பத்து தாழ்த்தப்பட்ட சமூகத் தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின் நீதி விசாரணை நடந்தது. உதவி ஆய்வாளர் மனோகர் சுட உத்தரவளித்தது மிகப் பெரிய தவறு என்று விசாரணைக் குழு அறிவித்தது.

1999 மீண்டும் ரண்வீர் சேனா ரவுடிகள் பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 23 பேரைக் கொன்றுக் குவித்தனர். 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2002 அரியானாவில் காவல் நிலையம் ஒன்றின் அருகிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அய்ந்து பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கயவர்கள் சுமத்திய ஆதாரமற்றப் பழி - பசுவதை. காவல்துறை வேடிக்கைப் பார்த்தது.

2006 மகாராட்டிராவில் கைர்லஞ்சி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்பட்டனர். 17 வயது இளம் பெண் ப்ரியங்காவின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. குற்றத்தை மூடி மறைக்கும் முயற்சி நடைபெற்றது.

2009 ரமாபாய் நகர் துப்பாக்கிச் சூடு வழக்கைச் சார்ந்து காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகருக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிற்று. மும்பை உயர்நீதிமன்றம் உடனே அவருக்கு பிணையில் விடுதலை வழங்கி விட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சமூக அநீதி!

2010 அரியானாவில் ஏழு பேரைக் கொன்றவர்களுக்கு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதே தெரியாதாம் என்று வாதிட்டனர் வழக்குரைஞர்கள். எனினும் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

2012 பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்த 23 பேருக்கு பாட்னா கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது.

2013 லஷ்மண்பூர் என்னும் பீகார் சிற்றூரில் தாழ்த்தப் பட்ட மக்கள் பலரை படுகொலை செய்த 26 குற்றவாளிகளையும் பாட்னா உயர்நீதிமன்றம் விடுவித்து விட்டது.

2014 ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரைக் கொன்று குவித்த 53 குற்றவாளிகளை உயர்நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

2015 பீகாரில் 1999இல் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்த 24 குற்றவாளிகளை போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி கீழ் நீதிமன்றமே விடுவித்துவிட்டது.

2018 1850ஆம் ஆண்டின் ‘ஜாதி தகவின்மை’ (சிணீstமீ பீவீsணீதீவீறீவீtவீமீs) சட்டத்தை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது.

2019 மகாராட்டிராவில் 2006இல் நடந்த படுகொலை குற்றவாளிகள் எட்டு பேருக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் அது ஜாதிப் பாகுபாட்டால் நடந்தது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜாதிகள் அழியாத வரை தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற கசப்பான உண்மை தெளிவாகிறது.

நன்றி: மனோஜ் மித்தாவின் நூல் ‘CASTE PRIDE’

No comments:

Post a Comment