மொழி இன அடையாளமும் மேன்மையும்!
• Viduthalaiஅனைத்து உயிரினங்களிலும் மனித உயிரே கருவியைப் பயன்படுத்துகிறது. கல்லும் கட்டையும், எலும்பும் இரும்பும், வேலும் வில்லும், சக்கரமும் வண்டியும், கத்தியும் சுத்தியும், கட்டு மரமும் கப்பலும் எனத் தொடங்கி இன்று ஏவுகணைகளையும் கணினியையும் பயன்படுத்தும் அளவிற்கு மாந்தர் வளர்ந்துள்ளனர்.
மொழிப் பற்று இல்லையேல் ஒரு தேசிய இனத்திற்கு உரிமை உணர்வே இருக்காது. அத்தகைய இனம் காலப்போக்கில், அறிவி யல், சமுதாயம், அரசியல், பொருளியல் ஆகிய துறைகளின் படிப்படியாக வீழ்ந்துபடு வதைத் தவிர்க்க முடியாது. மொழியைக் காத்து வளர்க்கும் விழிப்புணர்வு, உரிமை வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வித்தாகும்.
மொழியும் ஒரு கருவியே! ஆனால் மற்றவற்றிலிருந்து அஃது அடிப்படையில் வேறுபடுகிறது. அது மனத்தைச் சார்ந்தது. அது மூளையால் பெரும்பாலும் இயல்பாக வடிவம் பெறுவது. உடலின் புற உறுப்புக்கள் மொழியைக் கையாள்வதில்லை. மொழியின் மீது அறிவின் ஆட்சி இருக்கும் அளவிற்குப் பிற கருவிகளில் இல்லை. அத்துடன், மொழிக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது, மன எழுச்சிக்கு ஊற்றாக இருக்கவல்லது; பிற கருவிகளுக்கு அத்தகு ஆற்றல் இல்லை. இன உணர்வு மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு அடிப்படையாகவும் வலிமை சேர்ப்பதாகவும் இருப்பது மொழியே!
ஹிந்துத்துவத்தை முதன்மைப்படுத்தும் பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. அதனுடன் ஒட்டிய ஹிந்தி ஏற்றம் பெறுகிறது. தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படுகிறது. அத்துடன் தமிழ்ப் புழக்கத்தில் வடமொழி கலக்கிறது. அதாவது, தமிழ்ப் பண்பாட்டைச் சமஸ்கிருதப் பண்பாட்டிற்கு அடிமையாக்கும் வேலை மறைமுகமாகத் திட்டமிட்டபடி நடக்கிறது.
மய்ய அரசு நிறுவனங்களுக்குச் சமற் கிருதம் சார்ந்த ஹிந்தியில் அல்லது அதனு டன் ஆங்கிலத்தைக் கலந்து பெயர்களைச் சூட்டுகிறார்கள்; ராஷ்ட்ரீய கெமிகல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், பாரத சன்சா£ நிகாம், விதேஷ் சன்சா£ நிகாம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் எனும் வகையில் பலப்பல அறிவிப்பு கள் தமிழ்ச் செய்தித்தாள்களில் வருகின்றன. வடமொழியாளருக்கு மேல் நிலையும் மற்ற வருக்குத் தாழ் நிலையும் உள்ள இந்தியாவை உருவாக்குகிறார்கள்.
இந்திய நாட்டின் மூலக் குடிகளுக்குத் தொடர்பற்ற சமஸ்கிருதம், பார்ப்பன மேலாதிக்கத்திற்கெனவே உருவாக்கப்பட்ட தாகும். சமற்கிருதம் என்பதற்கு “நன்கு செய்யப்பட்டது” எனப் பொருள். அதன் மந்திரங்களை வேதியரைத் தவிர பிறர் படிக்கக் கூடாதெனக் கடுமையான தண்ட னைகள் மூலம் தடுத்தனர். பொது மக்களின் நலன் நாடிய பெரியவர்கள் அம்மொழியைப் புறக்கணித்தனர். யாகத்தையும் வேதத்தை யும் நால்வருணத்தையும் எதிர்த்துப் புதிய அறிவார்ந்த மனித நேயப் பாதையைக் காட்டிய புத்தர் செல்வாக்குப் பெறத் தொடங் கியபொழுது பார்ப்பனரில் சிலர் அவருக்குச் சீடராயினர். இருப்பினும் சமற்கிருதத்தைப் போற்றாமல் அவர்களால் இருக்க முடிய வில்லை. தொடர்ந்து என்ன நடந்தது என் பதை விவேகானந்தர் கூறுகிறார்: “புத்தர் தமது நெறியைப் பரப்பிய காலத்தில், இந்தியா வில் சமற்கிருத வழக்கொழிந்த மொழியாக இருந்தது. கற்றவரின் புத்தக மொழியாக மட்டுமே இருந்தது. புத்தரின் பார்ப்பனச் சீடரில் சிலர் அவருடைய கருத்துக்களை சமற்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பி னர். ஆனால் புத்தர் தெளிவாக இவ்வாறு அவர்களுக்கு கூறிவிட்டார்: ‘ஏழையரு டைய, பொது மக்களுடைய நலனை நான் நாடுகிறேன். அவர்களுடைய மொழியைப் பயன்படுத்தவே விரும்புகிறேன்.’ இவ்வாறு அவர் கூறிவிட்டதால் அவருடைய போத னைகளில் பெரும்பாலானவை அவர் காலத்து மக்கள் பேசிய மொழியிலேயே இருக்கின்றன” (The Complete Works of Swami Vivekananda, Vol I; 15th Edition, Page-22)
கனிஷ்கருக்குப் பின்பு:
நமது எண்ணங்கள் பொது மக்கள் புழங்கும் மொழியில் இருக்க வேண்டும் எனப் புத்தர் விரும்பியும், கனிஷ்கருயை (கி.பி. 78-101) காலத்தில் இருந்து பவுத்தக் கொள்கைக்கான விளக்கங்கள் சமற்கிருத மொழியிலேயே எழுதப்பட்டன. அவர் காலத்தில் நான்காவது பவுத்த மாநாடு நடந்தது. அதனுடைய துணைத் தலைவராக இருந்த அசுவகோசர், சாகோத என அக்காலத்தில் அழைக்கப்பட்ட அயோத்தி யைச் சேர்ந்தவர். தாயின் பெயரை முன் வைத்துத் தம்மை “ஆர்ய சுவர்ணாக்ஷிய புத்திரன்” என அழைத்துக்கொண்டார். இவர் வால்மீகியை ஆதிகவி எனப் பாராட்டியவர். புத்த சரிதம், சவுந்தரானந்தம், சாரிபுத்ர பிரகரணம் ஆகிய பவுத்த நூல்களைச் சமற்கிருதத்தில் எழுதினார். அதைத் தொடர்ந்து, பக்தியின் சாயலை உள்ளடக்கிய, புதிய கொள்கையைக் கொண்ட, மகாயானம் எனும் பிரிவு பவுத்தத்தில் தோன்றியது.
சாதவாகன மன்னன் யஜ்ஞசிறீவுதமீ புத்ரன் (கி.பி. 166-196) காலத்தில் வாழ்ந்த நாகார்ஜுனர் தென்னிந்தியப் பார்ப்பனர். மாத்யமிகம் எனப்படும் சூன்யவாதத்திற்கு ஆதாரமான மாத்யமிக சாத்திரத்தை இவர் வடமொழியில் வடித்தார். இவருக்குப் பின்பு, குப்தர் காலத்தில் பிராமண இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. கவுசிக கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பன ரான வசுபந்து, அமிர்தகோச எனும் நூலைச் சமற்கிருதத்தில் எழுதி இரண்டாவது புத்தர் எனும் பாராட்டை அவர் காலத்தவரிடம் பெற்றார். பொது மக்களிடமிருந்து இவ்வாறு விலகிப் பண்டிதர் மொழியான சமற்கிருத்தத் திற்குள் அடங்கிய பவுத்தம், மாயாவாதக் கொள்கையை ஏற்று, தாந்திரிக நடை முறையை மேற்கொண்டு சீரழிந்தது.
ராஜா ராம்மோகன் ராய்:
பொதுமக்களின் பார்வைக்கும் சிந்த னைக்கும் வராமல், சுயநலக் கூட்டத்தின் வாழ்வுக்கு மட்டுமே உதவும் தனித்த ஓர் உடைமையாகத் திகழ்ந்த ஒரு மொழியில் செய்யும் வழுவும் புனைந்துரையும் மூடநம் பிக்கையும் கேடான கோட்பாடுகளும் குடிபுகுந்தன. ஆகையாற்றான் 1823 இல் கல்கத்தாவில் சமற்கிருதக் கல்லூரியை ஏற்படுத்த முயற்சி நடந்தபொழுது அதை எதிர்த்து, ஒரு விண்ணப்பத்தை அப்பொழு திருந்த ஆளுநர் ஆமர்ஸ்டு பிரபுவுக்கு ராம்மோகன் எழுதினார்: “ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பு தெரியப்பட்டதையும், அத்துடன் வீணான மற்றும் வெறுமையான நுண்வாதங்களையும் இங்கு மாணவர் கற்பர்... அறியாமை இருட்டில் இந்த நாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பிரிட்டிசு சட்டசபையின் கொள்கைத் திட்டமாக இருந்தால் அதற்குச் சமற்கிருதக் கல்வி மிகமிகப் பொருத்தமானதாகும்”(Page 817. Advanced History of India R.C. Majumdar and two others).
சாசனங்கள்:
அசோகன் வழிவந்த மவுரிய மன்னன் பிருகத்ரதன் என்பவனை, அவனுடைய பார்ப்பனத் தளபதி புஷ்யமித்திரசுங்கள் கொன்று விட்டுச்சுங்க வம்சத்தை நிறுவி னான். சுமார் 112 ஆண்டுகள் (கி.மு. 185-73) நீடித்த அந்த மரபினர் காலத்தில் வேதியச் சடங்குகள், யாகங்கள் முதலியவற்றுடன் நால்வருண ஏற்றத் - தாழ்வுகளும் உறுதிப் படுத்தப்பட்டன. அதற்குத் தகவேத, புராண, இதிகாச, தர்ம சாத்திர நூல்களுக்கு வடிவம் தரப்பட்டன. பவுத்த சமயம் ஒடுக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இஃது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதற்குப் பின்பு மன்னர்கள் பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆயினார். அந்த ஆதிக்கத்திற்கு ஏந்தாகச் சமஸ்கிருதம் அரசு நிறுவனத்தில் ஏற்றம் பெற்றது. அதன்பின்பு, ஆட்சியால் பொது மக்கள் நலன் பெறுவதை விடப் பார்ப்பனர் உயர்வு பெறுவதே முதன்மையிடம் பெற்றது.
சமய, மெய்யறிவுத் துறைகளில் சமற்கிரு தத்தின் மூலம சமுதாயப் பண்பாட்டு மேலாதிக்கம் பெற்ற பார்ப்பனர்கள், அரசுக் காரியங்களில் தலையிட்டுப் பாமரர்களின் மொழிகள் சரியான வகையில் வளருவதைத் தடுத்தனர். அரசாங்கச் சாசனங்கள், கல் வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் சமற்கிருத மொழியில் எழுதப் பெற்றன. கி.பி.150 இல் பாறையில் செதுக்கப்பட்ட கிர்னார் (ஜுனகாத்) சாசனம், உஜ்ஜயினிலிருந்து ஆண்ட முதலாம் ருத்ரதாமன் என்பவன் சுதர்சன ஏரியைப் புதுப்பித்ததையும் போர் களில் வெற்றி பெற்றதையும் கூறுகிறது. அலங்காரமான சமற்கிருதததில் வழக்கப்பட் டிருக்கிறது; மிக நீண்டு இருக்கிறது. அவ்வகையான சாசனங்களில் அதுவே தொன்மையானது எனக் கருதப்படுகிறது.
அசோகன் (கி.மு. 273-232) தனது அரசுக் காரியங்களில் சமற்கிருதத்தையும் பயன் படுத்தவில்லை என்பதும், அவனுடைய கல் வெட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருந்த மொழிகளிலேயே இருந்தன என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கனவாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கனிஷ்கர் காலச் சாசனங்களில் நுழைந்து, முதலாம் ருத்தர தாமன் காலத்தில் முத்திரை பதித்த வடமொழி, குப்தர்கள் காலத்தில் (கி.பி. 320 - 647) அனைத்துத் துறைகளிலும் அரசு ஆதரவு பெற்று வளரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பல்லவர்கள் தொடக்கத்தில் பிராகிருத மொழி யைப் பயன்படுத்தினராயினும், காலப்போக் கில், சமற்கிருதத்தைப் போற்றவும் அசுவமேத யாகம் செய்யவும் தலைப்பட்டனர். பிற்காலப் பாண்டிய, சோழப் பெருமன்னர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்க அரசர்களும் வடமொழிக்கே, ஏற்றம் தந்தனர். கோயில் களில் வடமொழி மந்திரங்களில் நுழைந்தன. பார்ப்பனர்களுக்கென வேதங்கள், வேதாக மங்கள், சாத்திரங்கள் கற்றுத்தர இலவயக் கல்விக் கூடங்கள் தொடங்கப் பெற்றன. பிரம்ம தேயங்கள், தேவதானங்கள், அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் எனும் வகையில் வேதியருக்குச் சலுகைகள் குவிந்தன. படிப்பும் அறிவும் இழந்து குடிமக்கள் தரித்திரர் ஆயினர்.
தமிழ் மன்னர்கள் பார்ப்பனர் தந்த வடமொழிப் பட்டங்களை ஏற்றுப் பூரித்துப் போனார்கள். எடுத்துக்காட்டாகப் பாண்டி யன் மாறவர்மன் அரிகேசரியைக் கூறலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் களப்பிரரை வீழ்த்திய கடுங்கோன் வழியில் நான்காவதாக ஆட்சிக்கு வந்த இவனைப் பெரிய புராணம் நின்றசீர் நெடுமாற நாயனார் என்கிறது; திருவிளையாடல் புராணத்தில் கூன்பாண்டி யன் என்றும், சுந்தரபாண்டியன் என்றும் அழைக்கப்படுகிறான். இவனுக்குப் பார்ப் பனர் தந்த பட்டங்கள் அரிகேசரி, பராங்குசன், விகாரி, அதிசயன், ரணோதயன், ரணாந்தகன் என்பன!
மன்னர்கள் தங்களுடைய செப்பேடுகளில் வடமொழிக்கே முதன்மையளித்தனர். எடுத் துக்காட்டாக, ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டன் நகரப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழர் செப்பேடுகளைச் சொல்லலாம். பெரிய லெய்டன் செப்பேடு, வடமொழி, தமிழ் என இரு பகுதிகளைக் கொண்டது. முதல் அய்ந்து ஏடுகள் வட மொழிப் பாடல்களை உடையவை. ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இப்பகுதி யைக் கொட்டையூர் அனந்த நாராயணன் இயற்றியுள்ளான். தமிழ்ப் பகுதியும் அவ் வாறே தொடங்கி, பிள்ளையார் சுழியுடன் முடிகிறது! இச்செப்பேட்டைச் செய்வித்த வன் முதலாம் இராசேந்திரன் (1012-44). இவ்வழிகளில் கி.பி. அயந்த்£ம் நூற்றாண்டு முதல் வடமொழியும் வேதியரும் உயரவும், தமிழும் தமிழரும் தாழ்வடையவும் தொடர்ந்து இடம் ஏற்பட்டுவிட்டது.
மறுமலர்ச்சி:
ஆங்கிலேயர் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு விழிப்பால், மறுமலர்ச்சி ஒன்றை இந்தியத் துணைக் கண்டம் கண்டது. ராஜா ராம்மோகன் ராய் (1772-1833) எனும் சீர்திருத்தக்காரரும், “மேகநாதவதம்” காவியம் இயற்றி, ராமலட்சுமணர்களை ஆக்கிரமிப்பாளர் கள் எனப் படம் பிடித்த மாகவிஞர் மைகேல் மதுசூதன தத்தரும் (1824-73) வங்கத்தில் மறுமலர்ச்சி எண்ணங்களைத் தூவினர். மராத்தியத்தில் மகாத்மா ஜோதிபா ஃபுலே, புரட்சிகரச் சிந்தனைகளையும் செயல்களை யும் தொடங்கினார். நீதிபதி வேத நாயகர், இராமலிங்க வள்ளலார், பேராசிரியர் சுந்தரனார் ஆகியோர் 19-ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் தமிழில் மறுமலர்ச்சி எண்ணங்களைப் பரப்பினர். மூவருமே வேத ஆகம புராணப் பண்பாட்டைப் போக்க வேண்டினர். தமிழைப் புறக் கணித்து வடமொழி பயில்வோரை அனாம தேயத் தீவுக்கு அனுப்ப வேண்டுமென வேத நாயகர் எழுதினார். தொடர்ந்து மறைமலையடிகளார், அயோத்திதாச பண் டிதர், தேவநேயப் பாவாணர் முதலியவர் களும் திராவிடர் இயக்கத்தாரும் தமது எழுத்தாலும் செயலாலும் தமிழரின் உரிமைக்கும் தமிழின் மேன்மைக்கும் உழைத்தனர். வடமொழி ஆசிரியருக்கு ஊதியம் அதிகம், தென்மொழி ஆசிரியருக் குக் குறைவு என இருந்ததைப் பெரியார் சுட்டிக்காட்டினார்; இருவருக்கும் நிகரான சம்பளம் வந்தது. மருத்துவக் கல்லூரியில் சேரச் சமற்கிருதம் செய்ய வேண்டியிருந் தது; நீதிக்கட்சி ஆட்சியின்போது அம் முறைகேடு மறைந்தது. ஹிந்தியின் வழியே சமஸ்கிருத ஆதிக்கம் நுழைவது, தற்போ தைக்கு ஓர் அளவிற்குத் தடுக்கப்பட்டுள்ளது.
வடமொழிப் பரவல்:
ஒரு காலத்தில் சமற்கிருதப் படிப்பைச் சூத்திரருக்கு மறுத்தனர். மலையாள மறு மலர்ச்சிக்கு கவிஞர் குமாரன் ஆசான், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருக்கு அம்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது என்பது நவீன வரலாற்றுச் செய்தியாகும். உரிமை, சமனியம் எனும் விழுமிய வேட்கைகள் பொது மக்களிடையே வேர் விட்டுள்ள நிலையில், வடமொழியைத் தமது முற்றுரிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முடியாது எனப் பார்ப்பனர் கண்டு கொண்டனர். எனினும், பிற மொழிகள் வளர்வதற்கு அம்மொழி உதவுமென்றும், பண்பாட்டு ஒற்றுமைக்கு அது தேவையென்றும் காட்டி, வழக்கொழிந்த அதற்கு வாழ்வளித்துப் பரப்பும் வேலையில் இறங்கியுள்ளனர். சமற்கிருதத்திற்கு எந்த அளவு ஏற்றமோ, அந்த அளவிற்கு, மதத்தின் அடிப் படையில் அமைந்த தங்கள் தனிச் சலுகைகளை யும் உயர்வையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என அவர்களுக்குத் தெரியும். ஆனால், சமற் கிருதத்தை ஏதோ ஒரு செம்மொழி என மயங்கி யும், தேவபாஷை என நம்பியும் அடிமையாகும் தமிழருக்கு, அம்மொழியால் அறிவு முன் னேற்றம் ஏற்படாது எனும் தெளிவு உண்டா?
விவேகானந்தர்:
கற்பதும் கருதுவதும் கருத்துக்களைத் தெரிவித் தலும் தமது மொழியிலேயே இருக்க வேண்டும் எனும் உண்மையையும், அது இயற்கையாக வளர வேண்டிய தேவையையும், சமற்கிருதத் தைப் பின்பற்றிச் செயற்கையாக வளரக்கூடாது என்பதையும் விவேகானந்தர் உறுதிபட அறிவித்தார்: “புத்தர் முதல் சைதனியர், ராம கிருஷ்ணர்வரை, உலக நன்மைக்குத் தோன்றி யவர்கள் அனைவரும் பொது மக்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே கருத்தறிவித் தனர். நிறைபடிப்பு மிகச் சிறந்ததுதான். ஆனால், நெளிவில்லாத, புரியாத இயற்கையற்ற, செயற் கையான ஒரு மொழியின் மூலம் தான் அந்த நிறைபடிப்பை வெளிப்படுத்த முடியுமா? வேறு ஒன்றின் மூலமாகச் செய்ய முடியாதா?... எந்த மொழியில் இயல்பாக நாம் நம்மை வெளிப் படுத்திக் கொள்கிறோமோ, நமது சினம், துயரம், அன்பு முதலிய வற்றை எதன் வழியே தெரிவிக் கிறோமோ, அதை விடப் பொருத் தமான ஒன்று, மெய்யறிவையும் அறிவியலையும் பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் நமக்கு அமைய முடியாது... சமற்கிருதம் மெதுவாகவும் சொல் மலிந்து ஊதிப்போயும் நடையிடுகிறது. அதைப்போல ஆகும் முயற்சியில் நமது மொழி செயற்கையானதாகிறது. ஒரு நாட்டின் முன் னேற்றத்திற்கான முகாமையான கருவியாக வும், அம் முன்னேற்றத்தைச் சுட்டுவதாகவும் மொழி இருக்கிறது.” (Volume VI, Complete Works, Pages 187-88).
கோசாம்பி:
விவேகா னந்தரைப் போன்றே நன்கு சமற்கிருதம் அறிந்தவர், வரலாற்றறிஞர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. அவருடைய கூற்றையும் கவனிப்போம்: “மிகைப்பட்ட அலங்கார நடை சமற்கிருதத்தின் அதிகரித்து வரும் ஒரு தன்மையாயிற்று. திரிபான வாக்கிய அமைப்பு, சிக்கலான கூட்டுச் சொற்கள், ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள், அளவுக்கு மீறி மிகைப் படுத்தல் ஆகிய தன்மைகளின் காரணமாக, சமற்கிருத ஆவணத்திலிருந்து துல்லியமான பொருளை (கருத்தை)ப் பெறுவது வரவரக் கடினமாயிற்று... வடிவம் அதன் உள்ளடக் கத்தை (கருத்தை) மிஞ்சியிருப்பதால் தொழில் நுட்ப நூல்கள் தெளிவாக இல்லை... சமஸ்கிருதச் சொற்கள் துல்லியமான பொருளைத் தருவன வாகவேயில்லை. முடிவற்ற எனும் பொருளு டைய “அனந்த” என்ற சமற்கிருதச் சொல், அம்மொழியில் ஒரு செடியின் பெயரும் ஆகும். மருத்துவ நூல்களில் 14 வெவ்வேறு வகைச் செடிகளைக் குறிப்பதற்கு “அனந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆயுர் வேத மருத்துவரும் தான் பயன்படுத்துவது தான் உண்மையான அனந்த எனும் செடி எனவும், அதே நோய்க்கு வேறு ஓர் அனந்தச் செடியைப் பயன்படுத்துபவர் அறியாமை நிறைந்த போலி மருத்துவர் எனவும் வாதிடு கிறார். ஒரு சிக்கலான வடிவமைப்பின் அழக வைத்து நேர்த்தியோடு சமற்கிருத இலக்கியம் இருக்கிறது. பாலிமொழியில் உள்ள (புத்தரின் நெறியைக் கூறும்) “தம்ம பத”த்தில் காணப் படும் ஆழம், எளிமையான வெளிப்பாடு, பெருமித உணர்வு, மனித நேயத்தின் உண்மை உயர்வு ஆகியவற்றை, மிக மிகச் சிறந்த சமற்கிருத இலக்கியத்தில் கூடக் காண இயலாது. அஃது ஒரு வகுப்பாரின் இலக்கியம், ஒரு மக்களுக்கான இலக்கியம் அன்று.” (An Introduction to the study of Indian History)
விளம்பரம்:
பொது மக்களிடையே புழக்கத்தில் இல்லா ததும், பன்னூறு ஆண்டுகளாக அவர்களைத் தாழ்த்துவதற்கான பண்பாட்டுக் கருவியாகப் பயன்படுவதும், மனித நேயப் படைப்பில் வறுமையானதும் ஆன சமற்கிருதத்திற்கு ஆதிக்கவாதிகளின் ஆதரவு இருப்பதால், அதன் போலிப் பெருமை மிகுந்த விளம்பரத் தைத் தொடர்ந்து பெற்று வருகிறது. கடவுள், மதம், சடங்கு ஆகிய காரியங்களில் அதற்குப் புனிதத் தன்மை இருப்பதாக நம்பும் பாமரரின் மூடநம்பிக்கையின் காரணமாக, அதைத் தாய் மொழியாக அல்லது தெய்வீக மொழி யாகக் கொண்டாடும் பார்ப்பனர்கள், தங்க ளுடைய சலுகைகளையும் சமுதாயப் பண் பாட்டு ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. ஆயை£ற்றான் வேதியர் பொது மக்களின் மொழிகளை நீஷபாஷை அல்லது பைசாச பாஷை என எள்ளி நகையாடுவதை வாடிக்கையாகக் கொண் டுள்ளனர். பேராசிரியர் முனைவர் என். சுப்பிரமணியம் இவ்வாறு எழுதுகிறார்: “அவனுடைய தாய் மொழி தமிழாக நேர்ந்து விட்டதால், அவன் தமிழ்ப் பார்ப்பனன் என அழைக்கப்படுகிறான்; தெலுங்கு, மராத்தியம் முதலிய மொழிகளின் பார்ப்பனரிடமிருந்து வேறாக அறியப்படுகிறான். அவனுடைய தாய் மொழி தமிழ். மற்ற தமிழர்களைப் போன்றே பிறப்பில் இருந்து இறப்புவரை அதைப்பேசுகிறான். ஆனால் அவனுடைய வருணப் பற்று (வசுவாசம்) தேவ பாஷையான சமற்கிருதத்தின்பால் இருக்கிறது; அவனு டைய புனித நூல்கள் அனைத்தும் அதில்தான் எழுதப்பட்டுள்ளன; அவனுடைய சடங்கு மந்திரங்கள் அனைத்தும் அதில் முணு முணுக்கப்படுகின்றன... பார்ப்பனரில் மிகப் பெரும்பாலோர் தமது தாய்மொழியின்மீது ஒளிவு மறைவான வெறுப்பைப் பெற்றிருந் தமை ஓர் அரிய உளவியல் திகழ்வாகும். கிறித்துவனாயிருக்கும் ஆங்கிலேயன் தனது மொழியைவிட எபிரேய (ஹீப்ரு) மொழி முக்கியமானது எனக் கருதுவது இல்லை. பவுத்தனாக இருக்கும் சீனாக்காரன் சீன மொழியைப் பாலி மொழியைவிடத் தாழ்ந்த தாகக் கொள்வதில்லை. ஆனால், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்வரை, தனது தாயின் மடியில் கற்றுக்கொண்ட மொழியின் மீது ஒரு பார்ப்பானுடைய, இப்பொழுதெல் லாம் வெளியில் தெரிவிக்கப்படாமலிருக்கும், வெறுப்பு ஒளிவு மறைவற்றிருந்தது.” ” (P.93; The Brahmin in the Tamil counry; Frst Edition - 1989)
பெரியார்
பார்ப்பனருக்குச் சமற்கிருதத்தினரிடம் உள்ள பற்றிற்கும், தமிழின் பாற்பட்ட வெறுப் பிற்கும் காரணம், அவ்வழியில் அவர்கள் தமது வருண ஒற்றுமையையும், அதன் சமூக உயர்வையும் நிலைப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே! தமிழர்கள் அம்மொழி யைத் தேவபாஷை என ஏற்றுப் புனிதத் தன்மை உடையதாய் மதித்துத் தமது தாய் மொழியை மனதளவில் மதியாததால், பிற துறைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு அவர்களின் மனம் ஒப்புகிறது! இவற்றை மனதிற்கொண்டு பெரியார் எழுதுகிறார்: “இன்று பார்ப்பனர்களுக்கு, அவர்கள் எந்த வகுப்பார்கள். ஆனாலும், சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்கள் ஆனாலும், சமஸ்கிருதம் (வடமொழி) என்கின்ற ஒரு மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத, கட்டுப்பாடான, இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார் கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை.”
மேலும் இது தொடர்பாக அவர். தமிழ் இனத்திற்குக் கூறியுள்ள அறிவுரை மனங்கொள்ளத்தக்கது: “மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால் தானே முடியும் அன்றியும் சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால் தானே முடியும்?”
(‘விடுதலை’ - 25.7.1972)
இன ஒற்றுமைக்கும் காப்பிற்கும் மொழிப்பற்றும் உரிமையும் அடிப்படை யாவது போன்றே, இனத்தின் முன்னேற்றத் திற்கு அதனுடைய மொழியின் வளர்ச்சி இன்றியமையாததாகும். ஆகையாற்றான், “ஒண்டமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற் றம் ஒவ்வொன்றும் உந்தன் முன்னேற்றம்” என்றார் புரட்சிப் பாவேந்தர்!!