Tuesday 15 February 2022

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் திருத்தி அமைப்பு 1 கோடி பேர் பலனடைவர்


புதுடில்லி, அக்.30 தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய அரசு திருத்தி அமைத்துள்ளது. இதனால் 1 கோடி பேர் பலனடைவார்கள்.

ஒன்றிய அரசு துறைகளில் கட்டுமான பணி, சாலை பராமரிப்பு பணி, விமான நிலைய ஓடுதள பராமரிப்பு போன்ற பட்டியலிடப்பட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் திருத்தி அமைத்து வருகிறது.ஏப்ரல் 1ஆம்தேதி, அக்டோபர் 1ஆம்தேதி என 2 தடவை மாற்றி அமைக்கப்படுகிறது. தொழிற்சாலை ஊழியர்களுக்கான சராசரி நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இது திருத்தப்படுகிறது.

இந்தநிலையில், அக்டோபர் 1ஆம் தேதிக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இம்மாதம் 1ஆம்தேதியில் இருந்து முன்தேதியிட்டு இது அமலுக்கு வருகிறது. பணித்திறன், பணியாற்றும் பகுதி ஆகியவை அடிப்படையில், 4 விதமான ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஒன்றிய அரசின் பட்டியலி டப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள 1 கோடி தொழிலாளர்கள் பலனடைவார்கள் என்றும், கரோனா காலத்தில் அவர்களுக்கு இது நிவாரணமாக அமையும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே நிர்வாகம், சுரங்கம், எண்ணெய் வயல்கள், பெரும் துறைமுகங்கள், ஒன்றிய அரசின் கார்ப்பரேஷன்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment