Sunday, 14 June 2020

திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? (தாழ்த்தப்பட்டடோருக்கு)

பார்ப்பனர் அல்லாதார் படும் துன்பங்களைக் களையவே நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிடர் இயக்கங்கள் இங்கே தோன்றின. 

தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் இங்குள்ள மக்களை அடிமைகளாக மாற்றி விட்டனர்.

சொந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே பல்லாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடுபவர்கள் தான் திராவிடர் இயக்கத்தினர்!   

திராவிடர் என்பதும், தமிழர் என்பதும் ஒன்று தான்! அதிலும் தமிழர்கள் என்றால் முற்பட்ட, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்டியல் இன மக்கள் அனைவருமே தமிழர்கள் தான்! 

இப்படி இருக்க நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிடர் இயக்கங்கள் பட்டியல் இன மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்கிற தங்களின் வழக்கமான நயவஞ்சகக் கருத்தைப் பார்ப்பனர்கள் பரப்பி வருகின்றனர்.
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 1

 1) “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பொதுப் பெயர் சூட்டியது நீதிக்கட்சி. எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922

2) ஆதி திராவிடர் பிள்ளைகளைப் பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை. (G.O.No.87 நாள் 6.1.1923)

3) அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் ரத்து செய்யப்படும். (அரசு ஆணை G.O.No.88. நாள் 16.1.1923)

4) திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதி திராவிடர் பிள்ளைகளைத் தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற ஜாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத் தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை. (G.O.No.2015 dated 11.2.1924)

5) இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. (G.O.No.2563 dated 24.10.1923)

6) 1931 இல் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

7) ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (G.O. 1243.நாள்  5.7.1922)

8) ஆதி திராவிட மாணவர்கள் தேர்வு எழுதத் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

9) ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (G.O. 1568 சட்டம், நாள் 06.11.1923)

10) ஆதி திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசுக் கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது.  (G.O.205 நாள் 11.02.1924)
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 2

11) மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 866 (பொது) (சுகாதாரம், நாள் 17.06.1922)

12) இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளி விவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4,40,000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

13) கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதி திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக் கழகங்கள் (District Boards) 17,  வட்டக் கழகங்கள் (Taluk Boards) 66, நகராட்சிகள் (Municipalities) 46.

14) ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் அவர்கள் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலமும் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

15) 1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும் வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928 இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால் தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடிந்தது.
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 3

16) 1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், பார்ப்பனர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறை படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர். அதுதான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

17) பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் 1927-1926 க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935 இல் துணைக் கண்காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (Staff Selection Board அறிக்கை பக் 120) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல்துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42)

திராவிடர் இயக்கங்களை நம்ப மறுத்து, பார்ப்பனீயச் சூழலுக்குப் பலியாகிறார்கள் நம் தமிழர்கள்!

No comments:

Post a Comment