‘‘தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முதல் முழக்கம் தந்தை பெரியாருடையது
‘‘குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள்!''
சென்னை, டிச.13 தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
1.11.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தத் தலைப்பைப் பொறுத்தவரையில், மிக முக்கியமாக பேசப்படவேண்டிய தலைப்பு. இதனை மய்யப்படுத்தி பல்வேறு தகவல்கள் மக்களுக்கு, குறிப் பாக இளைஞர்களுக்கு, புதிய தலைமுறையினருக்குப் போகவேண்டிய ஒரு அவசியம் கண்டிப்பாக இருக்கிறது. அதுவும் அண்மைக்காலமாக தமிழுக்கு திராவிட இயக்கம் என்ன செய்துவிட்டது? பெரியார் என்ன செய்துவிட்டார்? என்று கேட்கக்கூடிய ஒரு கூட்டமும் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான், இந்தத் தலைப்பின் அடிப்படையில் நாம் உரையாடவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இந்த சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இங்கே பேராசிரியர் காளிமுத்து அவர்கள், சில வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொன்னார்.
மதுவிலக்கைக் கொண்டுவந்ததால் பள்ளிக்கூடங்களை மூடுகிறாராம்!
ஆச்சாரியார் ராஜாஜி அவர்கள், இரண்டுமுறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக வந்திருக்கிறார். அவர் 1937 ஆம் ஆண்டு வந்தபொழுதும் சரி, 1952 ஆம் ஆண்டிலே வந்தபொழுதும் சரி, அவர் செய்த முதல் காரியம், பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுவதுதான். அதுவும் கிராமப் பள்ளிக்கூடங்களை. அந்தக் கால கட்டத்தில், 1937 ஆம் ஆண்டில் எவ்வளவு கல்விச் சாலைகள் இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதற்கு அவர் சொன்ன காரணம் இன்னும் வேடிக் கையானது. நான் மதுவிலக்கைக் கொண்டு வந்தேன். அதனால் அரசாங்கத்திற்குப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. அதனை ஈடு செய்வதற்காகப் பள்ளிக் கூடங்களை மூடுகின்றேன்.
இப்படி சொல்லுகின்றவர் யார் என்றால், உடம்பு முழுவதும் மூளை உள்ளவராம்.
தந்தை பெரியார் அழகாக சொன்னார், ‘‘மூளை இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் சரியாக இருக்கும்; உடம்பு பூராவும் இருந்தால், கோளாறு என்றுதான் அர்த்தம்'' என்று சொன்னார்.
அப்பொழுதுதான் முதன்முதலாக இந்தியையும் அவர் கொண்டு வந்து திணித்ததும் உங்களுக்குத் தெரியும்.
அப்பொழுது சென்னை மாநிலம் என்பது இப் பொழுது இருக்கின்ற தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா வில் சில பகுதிகள், ஒடிசா வரையில் செல்கிறது. கேரளா, கருநாடக மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக் கியதுதான் சென்னை மாநிலம்.
அப்பொழுது இருந்தவருக்கு முதலமைச்சர் என்று பெயரல்ல; பிரதமர் என்றுதான் பெயர். ராஜாஜிதான் முதன்முதலில் இந்தியைக் கொண்டு வந்தார்.
சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்காகத்தான் முதலில் இந்தியைக் கொண்டு வந்தேன்
லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது ஒரு உண்மையைச் சொன்னார்.
படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற் காகத்தான் நான் இந்தியை முதலாவதாகக் கொண்டு வந்தேன் என்று சொன்னார்.
‘‘கோணிப் பைக்குள் இருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது'' என்று விடுதலையில் அந்தக் காலத்தில் எழுதுவதைப்போல, உண்மையைச் சொன்னார்.
அப்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்கள் வீறுகொண்டு எழுந்தார்.
இந்தித் திணிப்பு என்ற பெயராலே ஒரு கலாச்சாரப் படையெடுப்பு.
மொழியைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் அவர்களுடைய பார்வை என்பது, எந்த மொழியையும் படிக்கலாம்; ஆனால், இந்தியோ, சமஸ்கிருதத்தையோ திணிப்பது என்பது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு. ஒரு பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற அடிப் படையில்தான் தந்தை பெரியார் அவர்கள் அப்பொழுது வீறுகொண்டு எழுந்தார்கள்.
கட்சி, மதம் இவற்றையெல்லாம் மறந்து, மறைமலை யடிகள் போன்ற சைவ சித்தாந்தத்தில் ஊறியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தலைமையை ஏற்று, மிகப்பெரிய அளவிலே தமிழ்நாட்டில் ஒரு மொழிப் போரைத் தொடங்கினார்கள்.
தமிழர் பெரும்படை
ஆகஸ்ட் 1, 1938 ஆம் ஆண்டு திருச்சி உறையூரி லிருந்து தமிழர் பெரும்படை புறப்பட்டது. அந்தப் பெரும்படைக்கு தஞ்சை அய்.குமாரசாமி பிள்ளை அவர்கள் தலைமையேற்றார். பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் தளபதியாக இருந்து நடத்தினார்.
அந்தப் படை வழிநெடுக இந்தியை எதிர்த்துப் பிரச் சாரம் செய்துகொண்டே வந்தது. பல இடங்களில் அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரர்கள்தான் நமக்கு முதல் எதிரி.
அஞ்சாநெஞ்சன் அழகிரி
அழகிரியினுடைய கூட்டங்களில் எல்லாம் கழுதை யின் வாலில் வெடியைக் கட்டிக் கொளுத்தி விடுவார்கள். கல்லால் அடிப்பார்கள். ஒருமுறை அப்படி கல்லால் அடிக்கும்பொழுது, பட்டுக்கோட்டை அழகிரி என்ன செய்தார் என்றால், மேடையை விட்டு கீழே இறங்கி, கொஞ்சம் கற்களை எடுத்து மேடையில் வைத்துக் கொண்டு, ‘‘நான் பல ஊர்களில் பேசியிருக்கிறேன். ஆனால், இந்த ஊரில் இருக்கும் பழக்கம் எனக்குத் தெரியாது. இன்றைக்குத்தான் எனக்குத் தெரிகிறது. பேசுகிறவர்களைக் கல்லால் அடிப்பார்கள்; கேட்கிறவர் களை கல்லால் அடிப்பார்கள் போலிருக்கிறது'' என்று சொல்லி, இவரும் கல்லை எடுத்து வீசிக்கொண்டே இருந்தாராம்.
‘‘கேளு கழுதை கேளு!''
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப்படிப்பட்ட விசயங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. கூட்டத்தில் விரட்டி விடப்பட்ட கழுதையை மேடைக்குப் பக்கத்தில் கட்டி வைத்துவிட்டு, ‘‘கேளு கழுதை கேளு'' என்று இடையிடையே சொல்லிக்கொண்டு கருத்துகளைச் சொல்வாராம்.
அந்தப் பெரும்படை சென்னைக்கு வரும்பொழுது, ஒரு பெரிய வரவேற்புக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெற்றது.
அந்தக் கடற்கரைக் கூட்டத்தில்தான் தந்தை பெரியார் அவர்கள், ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற ஒரு உரத்த குரலை வரலாற்று ரீதியாக எழுப்பிய இடம் - அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே, சென்னை கடற்கரையிலே என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
ஆனால், தமிழ்நாடு என்று நாம் சொன்னாலும்கூட, தமிழ்நாடு எப்படி இருந்தது என்றால், ‘‘சென்னை மாநிலம்'' என்றுதான். அப்படித்தான் அறியப்பட்டதே தவிர, ‘‘தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற் கான தகுதி, யோக்கியதை நமக்கு இல்லாமல் இருந்த காலகட்டத்தில்தான், நாடு சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டதற்குப் பின்னாலே, மொழி வழி மாநிலங் கள் உருவாகவேண்டும் என்று ஒரு கருத்து வெளியிலே வந்தது.
ஆந்திராதான் முதலில் அந்த வேலையைத் தொடங்கினார்கள். பொட்டி சிறீராமுலு என்பவர் கடும் உண்ணாவிரதம் இருந்தார். அதற்குப் பின்னால்தான், ஆந்திரா முதன்முதலாகப் பிரிக்கப்பட்டது. அதற்குப் பின்னாலே, மற்ற மாநிலங்களும் மொழி வாரி அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
தட்சணப்பிரதேசம் தொடர்பாக
பெங்களூருவில் ஒரு ஆலோசனை கூட்டம்
ஆனால், இந்தக் கருத்துக்கு விரோதமாக இருந்த வர்கள் யார் என்று கேட்டால், பார்ப்பனர்கள். அதற்கு ஒரு காரணம் இருந்தது. விரிந்த இடத்தில் இருந்தால், அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்; ஒரு குறைந்த இடத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆபத்துதான். ஆகையால்தான் திடீரென்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மொழிவாரி மாநிலங்கள் வேண்டாம்; இந்தியாவை அய்ந்து பிரிவாகப் பிரித்து ஆட்சி அமைக்கலாம் என்ற ஒரு கருத்தை அவர்கள் உருவாக்கி, தட்சணப்பிரதேசம் தொடர்பாக பெங்களூருவில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் ஜவகர்லால் நேரு, காமராசர், சி.சுப்பிரமணியம் போன்ற அகில இந்திய தலைவர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அந்தக் கூட்டத்திற்குத் தந்தை பெரியார் ஒரு தந்தி செய்தியை அனுப்பினார்.
தந்தை பெரியாரின் தந்தி செய்தி!
எப்படி காமராசர் அவர்கள், தமிழ்நாட்டின் முதல மைச்சராக இருந்து, அந்தப் பதவியைவிட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சென்ற பொழுது, தந்தை பெரியார் அவர்கள் தந்தி கொடுத்தார்,
‘‘நீங்களாகவோ அல்லது மற்றவர்களுடைய ஆலோ சனையின் பேரிலோ, தமிழகத்தினுடைய முதலமைச்சர் பதவியை நீங்கள் துறப்பது, உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் தற்கொலை ஒப்பந்தம்.''
பெரியார் சொன்னது, காமராசர் வாழ்க்கையில் அப்படியே நடந்தது.
தேர்தல் முடிந்த பிறகு, குடந்தையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காமராசர் பேசினார், நானும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.
பெரியார்கூட சொன்னார், அதேபோல நடந்து போச்சு என்றார்.
அதேபோல, பெங்களூருவில் தட்சணப்பிரதேசம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பெரியார் அவர்கள் ஒரு தந்தி கொடுத்தார்.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமானது; தற் கொலைக்கு ஒப்பந்தம் என்றார் பெரியார்.
காமராசரின் மறுப்பும் -
சி.சுப்பிரமணியத்தின் அதிர்ச்சியும்!
நேருவிற்கும் அந்தத் தந்தி செய்தி போயிற்று. அதைப் பார்த்ததும், காமராசர் அவர்கள், தட்சணப் பிரதேச திட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
சி.சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. இராஜாஜியின் சீடர் அவர். இராஜாஜியும், தட்சணப் பிரதேசம் வரவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர்.
காமராசர் இப்படி சொன்னவுடன், சி.சுப்பிரமணியம், காமராசர் அவர்களை சந்தித்து, ‘‘தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்தீர்கள்; இப்பொழுது மாற்றி பேசுகிறீர்களே'' என்று கேட்ட நேரத்தில்,
காமராசர், ‘‘அன்றைக்கு சரி என்று பட்டது; இன் றைக்கு சரி என்று படவில்லை'' என்று சொன்னார்.
அதோடு அந்தப் பிரச்சினை கைவிடப்பட்டது.
ம.பொ.சிவஞானம்
தட்சணப்பிரதேசம் சம்பந்தமாக ம.பொ.சி. ஒரு கூட்டம் கூட்டினார். தந்தை பெரியாரையும் அழைத்தார்.
அப்பொழுது தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால், ‘‘வெறும் தட்சணப்பிரதேசத்தோடு முடிக் காதீர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்; இந்தியை எதிர்க்கவேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள் ளுங்கள்'' என்றவுடன், அவர் சென்றுவிட்டார்.
தந்தை பெரியார் இல்லாமல், ஒரு கூட்டம் நடத்தப் பட்டது. அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தக் கூட் டத்தில், பெரியார் சொன்ன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது.
இந்த முறையில், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து பல வடிவங்களில் நடை பெற்றுக் கொண்டிருந்தது.
12 கோரிக்கைகளை முன்வைத்து சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம்!
விருதுநகர் சங்கரலிங்க நாடார், காங்கிரசுக்காரர். 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். வெறும் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக மட்டுமல்ல; கவர்னர் பதவி கூடாது; ஜனாதிபதி பதவி கூடாது என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா அவர்கள், உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரை போய் சந்தித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால், அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆன பிறகுதான், சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கடைசி நேரத்தில், சங்கரலிங்கனார் சொன்னார், ‘‘நான் இறந்தால் என்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்'' என்றார்.
கே.டி.கே.தங்கமணி அவர்களும், ஜானகி அம்மையார் அவர்களும் முன்னிருந்து சங்கரலிங்கனா ரின் உடலை அடக்கம் செய்தார்கள் என்ற வரலாறு உண்டு.
நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த பூபேஷ் குப்தா
அதேபோல, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்ற ஒரு கருத்தொலி கிளம்பியது. தமிழ்நாட்டில் இருந்த ஒருவர்தான் முன் மொழிவதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அவர் செல்ல இயலாத நிலையில், அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர், பொதுவுடைமைக் கட்சியினுடைய மூத்த தலைவர் பூபேஷ் குப்தா.
அண்ணா அவர்கள் அப்போது மாநிலங்களவை உறுப்பினர். பூபேஷ் குப்தா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று தீர்மானத்தை முன் மொழிந்தவர். பூபேஷ்குப்தா அவர்கள் சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் பெற்றவர். அவர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், ஆனால், ஆதரவு பெரிய அளவிற்கு இல்லை. அண்ணா அவர்கள், ஆதரித்துப் பேசினார்.
அப்பொழுது காங்கிரஸ்காரர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால், என்னவாகிவிடப் போகிறது என்று அவர்களுக்கே உரித்தான முறையில் பேசினார்கள்.
உடனே அண்ணா அவர்கள், பார்லிமெண்ட் என்று இருந்ததை லோக் சபா என்று மாற்றினீர்கள்; ஸ்டேட் ஆஃப் கவுன்சில் என்று இருந்ததை ராஜ்ய சபா என்று மாற்றினீர்கள்; அதனால் உங்களுக்கு என்ன வந்தது? என்று கேட்டார்.
காங்கிரஸ்காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி பல கட்டங்கள் தாண்டித்தாண்டி, தி.மு.க. 1967 ஆம் ஆண்டிலே ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகுகூட, ஒருமுறை அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபொழுது, ஒரு தீர்மானத்தைக் கொண்டு சென்றார்கள், அது தோற்கடிக்கப்பட்டது. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழர், இன்னொரு காலகட்டத்தில், இந்தத் தீர்மா னத்தை முன்மொழிந்தபோது, அந்தத் தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக
பதவியேற்ற பின்....
இப்படியெல்லாம் இருந்துவிட்டு, 1968 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகுதான், அது நடந்தது. முதன்முதலாக சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயரை சூட்டியவர் அண்ணா - சூட்டிய ஆளுங்கட்சி தி.மு.க. என்ன வேடிக்கை என்றால், அனைவரும் ஒருமனதாக ஆதரித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் உள்பட.
அப்பொழுது அண்ணா அவர்கள், ‘‘தமிழ்நாடு'' என்று மூன்று முறை ஒலித்து, உறுப்பினர்கள் எல்லாம் ‘‘வாழ்க, வாழ்க'' என்று குரல் கொடுத்த ஒரு அதிசயம் நடந்தது.
அண்ணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான ஒரு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர்கள் செல்லவேண்டாம் என்று அண்ணாவை தடுத்தார்கள். அதையும் மீறி, அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு செய்தியை சொன்னார்.
‘‘என்னுடைய தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகின்ற விழாவில் கலந்துகொள்ளாமல், இந்த உடல் இருந்து என்ன பயன்?'' என்று உருக்கமாக அண்ணா அவர்கள் அந்தக் கூட்டத்தில் பேசினார்.
இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டுகொண்டிருக்கிறார்!
அப்பொழுது மூன்று செய்திகளை சொன்னார்,
‘‘இன்றைக்கு என்னை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் விரும்பு கிறார்கள். அவர்கள் நினைத்தால் முடியும், அவர் களிடத்தில் அதிகாரம் இருக்கிறது.
ஆனால், ஒன்று. இந்த அண்ணாதுரை காலத்தில் குறுகிய காலத்தில் மூன்று காரியங்கள் நடைபெற்று இருக்கின்றன.
ஒன்று, என்னுடைய தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்.
இரண்டு, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி யாகும்.
மூன்று, இந்திக்கு இடமில்லை; இருமொழிக் கொள் கைதான்.
இந்த மூன்றிலும் கைவைக்கக்கூடிய துணிவு உங்களுக்கு இருந்தால், செய்து பாருங்கள்; கைவைக்க முடியாதவரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டுகொண்டிருக்கிறான்'' என்று அவருக்கே உரித் தான முறையிலே அண்ணா அவர்கள் பேசிய வரலாறும் இருக்கிறது.
பொதுவாக, இன்றைக்கு இருக்கின்ற பாரதீய ஜனதா ஆட்சியைப் பொறுத்தவரையில், மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களுடைய அடிப்படைக் கொள்கை.
கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை!''
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை'' என்ற நூலில் அவர் சொல்கின்ற கருத்து,
மாநிலங்கள் இல்லாத ஓர் ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை என் பதை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கை யில்,
ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி, கூட்டாட்சி முறையை ஒழித்து, இந்திய நாடு ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்.
அன்றைக்கு ஜனசங்கம்; இன்றைக்குப் பாரதீய ஜனதா.
இன்றைக்கு ஒரே நாடு என்று சொல்வதன் காரணம் இதுதான். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்று அவர்கள் சொல்வதெல்லாம் இந்த அடிப்படையில்தான் சொல்கிறார்கள் என்பதை நாம் இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கவேண்டும்.
1960 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப் படத்தை எரித்த ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
ஆக, தமிழ்நாடு என்ற சொல், அந்தக் குரல், திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமைக் கட்சிக்கும் மிகுந்த ஈடுபாடுடைய ஒரு பெரிய கொள்கையே!
தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள், தமிழைப் பற்றி சொல்லுகின்றபொழுது, ‘‘உன்னுடைய தமிழ் கோவிலில் இடம்பெற்று இருக்கிறதா? நீங்கள் பேசுகின்ற தமிழ் ஏன் கோவிலில் வழிபாட்டு மொழியாக இருக்க வில்லை? தமிழன் கட்டிய கோவிலில், ஏன் தமிழன் ஒரு வன் அர்ச்சகனாக இருக்க முடியாது? இவையெல்லாம் இல்லாமல் வெறும் ‘‘தமிழ்நாடு என்று பெயர் வந்து விட்டால் மட்டும் போதுமா?'' என்று தந்தை பெரியார் அவர்கள் கேள்வி எழுப்பினார்.
'தீக்கதிர்' நாளிதழில்
வெளிவந்துள்ள கட்டுரை!
இன்றைக்குத் ‘தீக்கதிர்' நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அந்தக் கட்டுரையை தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள்தான் எழுதியிருக்கிறார்.
சென்னை ஆங்கிலத்தில் இருந்தால் என்ன?
தமிழ்நாடு என்று இருந்தால் என்ன? திராவிடத்தில் தான் இருக்கப் போகிறது என்று பெரியார் பேசினார் என அந்தக் கட்டுரையில் உள்ளது.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எந்த அடிப்படையில் இவர் எழுதுகிறார்? தந்தை பெரியார் இதற்காக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருக் கிறார்கள். கட்சிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு இருக்கின்றன.
ஜனாதிபதியாக இருந்த இராஜேந்திரபிரசாத் தமிழ் நாட்டிற்கு வந்தபொழுது, இந்த அடிப்படையில், அவ ருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டு இருக்கிறது. தமிழ் நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், அவர் தமிழ்மீது அக்கறை இல்லாமல் இருந்தது கிடையாது. அவர் எண்ணமெல்லாம், இன்னும் நீங்கள் புராணத் தையும், இதிகாசத்தையும் கட்டிக்கிட்டு, எப்படி தமிழை வளர்க்கப் போகிறீர்கள்? என்பதுதான் அவருடைய கவலை. மொழியை விஞ்ஞான மொழியாக்கவேண்டும். இன்னும் பெரியபுராணத்தையும், திருவிளையாடல் புரா ணத்தையும், ஸ்தல புராணங்களையும் நாம் சொல்லிக் கொண்டிருந்தால், தமிழ் எங்கே போய் முடியும்?
தமிழிலிருந்து புராண, இதிகாசங்களை நீக்கிவிட்டால், மீதி இருப்பது பூஜ்ஜியமாகத்தான் இருக்கிறது என்ற அடிப்படையில்தான் தந்தை பெரியார் அவர்கள் தமிழைப்பற்றி சொன்னார்.
சங்கராச்சாரியார் மாதிரி தமிழை நீஷ பாஷை என்று சொல்லவில்லை. பூஜை வேளையில் தமிழ் மொழி பேசி விட்டால், சங்கராச்சாரியார் ஸ்நானம் பண்ணிவிட்டுத் தான் மறுபடியும் பூஜை செய்வார் என்று சொல்லு கிறார்கள். அதுபோன்று தந்தை பெரியார் நினைக்க வில்லை.
‘துக்ளக்' சோ. ராமசாமியின் பதில்!
கோவில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் ஏன் இல்லை? என்ற ஒரு கேள்விக்கு, ‘துக்ளக்' சோ.இராமசாமி என்ன சொன்னார் தெரியுமா?
தமிழில் வழிபாடு செய்யலாம்; அப்படி வழிபாடு செய்தால், அதில் பொருள் இருக்கும். ஆனால், சமஸ் கிருதத்தில் சொல்கிறமாதிரி அருள் இருக்காது என்றார். காரணம், சமஸ்கிருதத்தினுடைய ஒலி அப்படிப்பட்டதாம்.
இவ்வளவுக்கும் கடவுள் ஆசாபாசம் அற்றவர் என்கிறார். அவர் ஒலிக்கு மயங்குகிறாராம்!
தமிழ், செம்மொழியாக வந்தால் என்னாகும்? என்று தினமலர், வாரமலரில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
உணவே இல்லாத வீடுகளுக்கு பிரியாணி பொட் டலம் வரும். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்று பதில் வெளியிடுகிறது.
‘‘மொழி நக்சலிசம்''
என்று எழுதியது ‘துக்ளக்'
ஒரு காலத்தில் சென்னை மேயராக இருந்த மா.சுப்பிர மணியம் அவர்கள், கடை விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழி முதலில் இருக்கவேண்டும் என்று சொன் னார்.
அதற்கு துக்ளக்கில், ‘‘மொழி நக்சலிசம்'' என்று எழுதியது.
இப்படி ஒரு பக்கம் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழைப் படித்தால், சட்டி சோறுதான் மிச்சம் என்று துக்ளக்கில் எழுதுகிறார்கள்.
இப்படி ஒரு பக்கம் தமிழைப்பற்றி கொச்சைப்படுத்து கின்ற, கேவலப்படுத்துகின்ற போக்கும் நடந்து கொண் டிருக்கின்றது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைக்கு ஒரு அவல நிலை என்னவென்றால், தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்கள் இல்லை.
நாங்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத் தும்பொழுது, அதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பெயர்களைக் கேட்போம். கடைசியில், அவர்களுடைய பெயரில் ‘ஷ்' என்று முடியும்.
அதற்கு என்ன பொருள் என்று அவர்களுக்குத் தெரியாது. தமிழ்மீது நமக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்கள் இல்லை.
இந்தப் பார்ப்பன கலாச்சாரம், சமஸ்கிருத கலாச்சாரம் எந்த அளவிற்கு இந்த சமுதாயத்திலே ஊடுருவி இருக்கிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு
ஒரு மாற்றம்
1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு மாற்றம் வந்தது.
முன்பெல்லாம் அக்கராசனபதி அவர்களே என்று தான் சொல்வார்கள். பிறகுதான் தலைவர் அவர்களே என்று மாறிற்று.
உபந்நியாசம் என்பது சொற்பொழிவு என்று மாறிற்று.
நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.
வந்தனோபச்சாரம் என்பது நன்றி அறிவிப்பு என்று மாறியது.
அதன் காரணமாக, வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கக்கூடிய ஒரு உணர்வு ஏற்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த நாராயணசாமி, நெடுஞ்செழியனாக மாறினார்.
இராமய்யா என்பது அன்பழனாக மாறியது.
சோமசுந்தரம்தான் மதியழகனாக மாறினார்.
அரங்கசாமிதான், அரங்கண்ணலாக மாறினார். இப்படி பெரிய பட்டியல் இருக்கிறது. அதற்குப் பின்னால் தான், தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
குடந்தையில் எஸ்.கே.சாமி என்ற ஒரு கழகப் பேச்சாளர் மிகவும் தாமாஷாக பேசுவார். பெயர் வைத் திருக்கிறீர்களே, ஏதாவது பொருள் புரிகிறதா? கேசவன் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, அதனுடைய பொருள் என்னவென்று தெரியுமா? என்று கேட்பார் கூட்டத்தில். யாராவது கேசவன் என்று இருந்தால் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்.
கேசவன் என்றால், மயிரான் என்று பொருள்.
ஆதிகேசவன் என்றால், பழைய மயிரான் என்று பொருள் என்றெல்லாம் பேசுவார்.
பொருள் என்னவென்று தெரியாமலேயே நம்மு டைய மக்கள் தமிழ் மக்கள், தாய்மொழியை தமிழ் என்று சொல்லுகின்றவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறார்கள். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதி லேயே ஒரு பார்ப்பன பண்பாட்டு கலாச்சாரப் படை யெடுப்பு நடந்திருக்கிறது.
நம்முடைய வீட்டுப் பிள்ளைகளுக்குத்
தமிழில் பெயர் வையுங்கள்!
இன்றைக்கும் அந்த நிலைமை இருக்கிறது. அதை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும் என்கிற ஒரு அவசியம் இருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள், அவருக்கே உரித்தான முறையில்,
அறிவுக்கொடி என்று பெயர் வைத்தார். இது எந்த இலக்கியத்தில் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப் போம். அவரே உருவாக்கிய பெயர்.
அறிவுக்கொடி, அன்புமதி என்று தந்தை பெரியார் அவர்கள் பெயர் வைப்பார். பின்னாளில், ஒரு கொள் கைக்காக, ஸ்டாலின் என்றும், லெனின் என்றும், மாஸ்கோ என்றெல்லாம் பெயர் வைத்தார்.
தமிழ் உணர்வு வந்தால்தான்
இன உணர்வு வரும்!
அப்பொழுது பெரியாரிடம் கேட்டார்கள், ‘‘மாஸ்கோ'' என்று ஊர் பெயராயிற்றே, அந்தப் பெயரை வைக்கிறீர் களே? என்று.
சிதம்பரம் என்றும், பழனி என்றும் நீங்கள் பெயர் வைக்கிறீர்களே, நான் மாஸ்கோ என்று பெயர் வைப்ப தில் என்ன தவறு என்று கேட்டவுடன், அடங்கினார்கள்.
தமிழ் உணர்வு என்பது, அந்தத் தமிழ் உணர்வு வருகின்றபொழுதுதான், இன உணர்வும் வருகிறது. அந்தத் தமிழ் உணர்வும், இன உணர்வும் தேவைப்படு கின்ற ஒரு காலகட்டத்தில்தான் இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக இன்றைக்கு இருக்கின்ற புதிய தலை முறையினருக்கு இந்த உணர்வுகள் இருக்கிறதா? என் பது ஒரு கேள்விக்குறி. என்றாலும்கூட, நாம் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரங்களை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
நான் ஒரு வீட்டிற்குச் சென்றால், குழந்தைக்கு என்ன பெயர் என்று கேட்பேன்; நீங்களே ஒரு பெயர் வையுங் கள் என்பார்கள், நானும் பெயர் வைத்துவிடுவேன்.
எந்த ஒரு பார்ப்பனருக்காவது
தமிழில் பெயர் இருக்கிறதா?
இதை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும். எந்த ஒரு பார்ப்பனராவது, பரிதிமாற்கலைஞரை தவிர, தமிழில் பெயர் வைத்திருக்கிறார்களா?
அவர்கள் தெளிவாக, உறுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலமாக இந்த வரலாற்றினை சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.
அந்த முறையில், இந்த நிகழ்ச்சி நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள், நம்முடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். ஆசிரியர் சொன்னவுடன், இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஏனென் றால், அவர்களுக்கு இதில் முக்கியமான பங்கு இருக்கிறது என்று சொன்னார்கள், அந்த அடிப்படையில்தான் அவரை அழைத்திருக்கின்றோம்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு 13 12 19