இன்று (4.7.2017) சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் கூட்டத்தில், கூட்டத்தின் தலைவரும் அதன் ஒருங்கிணைப்பாளருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், கூட்டத்தின் தொடக்கத்தில் ‘நீட்’ குறித்து விளக்கியவை வருமாறு:
‘நீட்’ 2017 தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,859 மாணவர் களில் 32,570 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது, தேர்வு எழுதியவர் களில், 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில கல்வித் திட்டத்தின் கீழ் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட இதில் வெற்றி பெறவில்லை. அதிக வெற்றி மதிப்பெண்கள் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ் நாட்டில் யாரும் இல்லை.
நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு,வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. வினாக்கள் மொழி யாக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நடைமுறை பின்பற்றப்பட வில்லை. வினாத்தாள்களை மாற்றிய நடவடிக்கை மாணவர் சேர்க்கைக்கான கை யேட்டில் கூறப்பட்ட தகவல்களுக்கும், நீட் சட்டத்திற்கும் எதிரானது. வெவ்வேறு வினாக்களை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு, சமமான போட்டியை ஒழித்து விட்டு, நாடு முழுவதுக்கும் ஒரே தரப்பட்டியல் என்பது மோச டித்தனமாகும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்த பொழுது, பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு வினாக்களை மாற்றியது ஏன்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் அதிகம் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்? நாடு முழுவதும் வெவ்வேறு பாடத்திட்டமும், வெவ்வேறு கல்வித்தரமும் உள்ள நிலையில் மாணவர்கள் இத்தேர்வை எப்படி எதிர் கொள்ள முடியும் என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பியது. ஆனால், உச்சநீதிமன்றம் எந்த விசாரணையும் இன்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடையை நீக்கியது. ‘நீட்’ தொடர்பான எந்த வழக்கையும் எந்த உயர்நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சிக்குரியது.
கடந்த ஆண்டில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என நீட் தேர்விலிருந்து விலக்களித்தவர்கள், இந்த ஆண்டு கவலைப்படாதது ஏன்----? 2014ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட பேராசிரியர் ரஞ்சன் ராய் சவுத்ரி தலைமையிலான வல்லுநர் குழு, மாநில அரசுகள் விரும்பாதபட்சத்தில் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தது. இதே கருத்தை சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் சொன்னது. அப்படி இருந்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவுக்கு மத்திய அரசு ஏன் ஒப்புதலைப் பெற்றுத்தரவில்லை என்பது முக்கியமான கேள்வியாகும்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் உரிமையை காப்பதாகக் கூறி, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில உரிமையை பறிகொடுத்து விட்டு, தனது தோல்வியை மறைப்பதற்காக தமிழக அரசு இத்தகைய திசைதிருப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 15 விழுக்காடு இடங்கள் தவிர்த்து, மீதி உள்ள 85 விழுக்காடு இடங்களில் 15 விழுக்காடு இடங்களை மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும், 85 விழுக்காடு இடங்களை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கு வதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசியல் சட்ட ரீதியாக இவ்வொதுக்கீட்டை நடைமுறைப் படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே குஜராத் உயர் நீதிமன்றம் இத்தகையை ஒதுக்கீடுகள் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப் பங்களை அரசு வழங்கியும் வருகிறது. ஆனால், மாணவர் களின் மதிப்பெண் குறித்தோ, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் குறித்தோ, தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ. இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தனிப் பட்ட மாணவர்கள், இணையத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கிற நிலையில் முடிவுகள் அறி விக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா என்ற மோடியின் முழக்கம், பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத் திட்டத்திலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பிரிவில் எத் தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் இதுவரை தமிழக அரசு சொல்லவில்லை. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காட்டின்படி எத்தனை இடங்கள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. ஜூலை 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நீட்தேர்வில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணை தவிர எந்த விவரமும் தெரியாத நிலையில், நமது மாணவச் செல்வங்கள், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் அவலம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 விழுக்காடு இடங்கள், அனேக மாநிலங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்குக் கொடுக்கப்படுகிறது. இதன் படி, இந்த ஆண்டு 9,775 இடங்கள் மத்திய தொகுப் பிற்கு சென்றுள்ளது. இது சம்மந்தமாக, பத்திரிக்கையில் இன்னும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 9,775 இடங்களில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்க்கு 22.5% போக, மீதம்உள்ள 50.5% இடங்களும், பொதுப்போட்டி என்று இல்லாமல், முன்னேறிய வகுப் பினருக்கு தரப்படும் என்பதாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது. பொதுப் போட்டிக்கான இடங்களுக்கு விண் ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, இந்தஆண்டு, பொதுப் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பு மறுக்கப்படும் என்பதுதான் இதன் பொருள். இதனை உறுதி செய்யும் விதமாக, இட ஒதுக்கீடு பிரிவினருக்கும், ஏனையோருக்கும் தனித்தனியே மாண வர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுப்போட்டி யில் உள்ள 9,975 இடங்களில், 5,037 இடங்கள் முன்னேறிய சமூகத்தினர்க்கும், ஏனைய 4,938 இடங்கள் மட்டுமே, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர் களுக்கும் கிடைக்கும். இதன்மூலம், எந்த அடிப்படையும் இல்லாமல், முன்னேறிய சமூகத்தினர் 50.5% இடங்களை அனுபவிக்க முடியும். தந்தைபெரியாரும், அம்பேத்கரும் போராடித் தந்த உரிமையில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் 49.5% இடங்களில் மட்டுமே பெற முடியும்.
இது அரசமைப்புச்சட்டத்திற்கும், மத்திய அரசின் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள ஆணைக்கும் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் விரோதமான செயலாகும். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பொதுப் போட்டியில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, அனைத்து பிரிவினருக்கும் இதுவரை வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, இது மறுக்கப்பட்டு, முழுவதும் இடஒதுக்கீடு இல்லாத, முன்னேறிய பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என மத்திய பி.ஜே.பி. அரசு கூறுவது, சமூகஅநீதி மட்டுமல்ல; அரசின் ஆணைக்கு முரணாகும்.
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை, இடஒதுக்கீடு தொடர்பான ஆணைகளை வெளியிடுகின்றது. இத்துறை வெளியிடும் ஆணைகள், அனைத்து மத்திய அரசின் துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கட்டுப்படுத்தும். பிரதமர் மோடியின் தலைமையில் தான் இந்த பணியாளர்துறை, இயங்குகிறது.
1. மத்திய பணியாளர் நலத்துறையின் 8.9.1993 தேதி யிட்ட ஆணை எண்: 36012/22/93-.-ன் படி, பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. இந்த ஆணையின் பாரா 2 பிரிவு பி யின்படி, பொதுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் பிற்படுத்தப் பட்டோர், பொதுப் போட்டியில் உள்ள இடங்களில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 27 விழுக்காடு இடங்களில் இவர்கள் சேர்க்கப்படக் கூடாது என்று தெளிவாக இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக் கும், பழங்குடியினர்க்கும் இதே போன்று ஆணை உள்ளது. அரசு ஆணை எண்கள், 36012/13/88-ணிst. (ஷிசிஜி), 22.5.1989, 36011/1/98-ணிst. (ஷிசிஜி), 1.7.1998 இவையும், இதனை உறுதிப்படுத்துகின்றன.
2. இதே போன்ற ஒரு முறையை, 1993-ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு இட ஒதுக்கீடு தரப்பட்டதற்குப் பின்னர், 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற அய்.ஏ.எஸ். தேர்வில், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கடைப் பிடித்தது. அதாவது, பொதுப் போட்டி இடங்கள் என்பதை, இடஒதுக்கீடு பெறாத பிற பிரிவினர், (முன்னேறிய வகுப்பினர்) என்பதாக நடைமுறைப்படுத்தியது. இதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தில் (சிகிஜி,சிபிணிழிழிகிமி) வழக்கு தொடர்ந்தனர். இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி பத்மினி ஜேசுதுரை, அப்போது தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார். யு.பி.எஸ்.சி.யின் நடைமுறை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்து, யு.பி.எஸ்.சி.யின் தேர்வை ரத்து செய்தார்.
3. சென்னை நிர்வாகத் தீர்ப்பாயத்தின் ஆணையை எதிர்த்து, யு.பி.எஸ்.சி. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தடையையும் ரத்து செய்தது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு 9.8.2001 அன்று நீதியரசர்கள் ராஜேந்திர பாபு, துரைசாமி ராஜூ ஆகியார் கொண்ட அமர்வில் வழங்கப்பட்டது. தங்களது தீர்ப்பில், சென்னை நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை சரி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின்படி, பொதுப்போட்டி இடங்களுக்கு, அனைத்துப் பிரிவு மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அளித்து விட்டு, பின்னர் இட ஒதுக்கீட்டின் படி அந்தந்த பிரிவில் உள்ள மாணவர்களுக்கு இடங்கள் அளிக்கப்பட வேண்டும். ஆனால், யு.பி.எஸ்.சி. இதனை தலைகீழாக செய்துள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது என தங்கள் தீர்ப்பில் கூறினர். (சிவில் அப்பீல் 9007-9008/1996).
4. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த நிலையிலும், யு.பி.எஸ்.சி. தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல், பொதுப் போட்டி இடங்களை, முன்னேறிய பிரிவினருக்கு வாய்ப்பை அளித்து வந்தது. இதனை எதிர்த்து, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி, பிரதமர் வாஜ்பாய்க்கு 29.4.2002-ல் கடிதம் எழுதினார். இதற்கு பணியாளர் நலத்துறையின் இணை அமைச்சர் வசுந்தராராஜே (தற்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர்), 5.11.2002-இல் அனுப்பிய பதிலில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி (9.8.2001 தீர்ப்பு), அதன்படி, பொதுப் போட்டியில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட் டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என கூறினார்.
5. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பான இந்திரா சஹானி - யூனியன் ஆப் இந்தியா வழக்கு 1992, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இந்த தீர்ப்பில், பொதுப் போட்டி இடங்களுக் குரிய தகுதி மதிப்பெண்கள் பெறும் இடஒதுக்கீட்டு பிரிவினர், பொதுப்போட்டி இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர்.
6. இதே போன்று, உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், ஆர்.கே. சபர்வால் ஸ்டேட் ஆப் பஞ்சாப் (1995), யூனியன் ஆப் இந்தியா வீர்பால்சிங் சவுகான் (1995), ரிடேஷ் ஆர்.ஷா டாக்டர் ஒய்.எல்.யாமுல் (1996), சத்யபிரகாஷ் யூனியன் ஆப் இந்தியா (2003), உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் நிதின்குமார் (2015) ஆகிய வழக்குகளிலும், பொதுப் போட்டி குறித்து தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7. இந்த ஆண்டு தீபா - யூனியன் ஆப் இந்தியா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்மினி ஜேசுதுரை, ஏ.எம்.கன்வில்கர் ஏப்ரல் 6-ஆம் தேதி அளித்த தீர்ப்பை சிலர் தவறாக சுட்டிக் காட்டி, இந்த தீர்ப்பின்படி, இட ஒதுக்கீடு பிரிவினர், பொதுப் போட்டி இடங்களுக்கு, போட்டி போட முடியாது என வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. இது வேலை வாய்ப்புக்கு சம்பந்தமான வழக்கு; கல்வி சம்பந்தமான வழக்கு அல்ல.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு, வயது உச்சவரம்பில் சலுகை, தேர்வு எழுதும் எண்ணிக்கையில் சலுகை ஆகிய சலுகைகளைப் பயன்படுத்தும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு, பொதுப் போட்டி இடங்களில் வாய்ப்பு கிடையாது என்ற மத்திய அரசின் ஆணையின்படி அளிக்கப்பட்ட தீர்ப் பாகும். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்று விட்டு, பொதுப் போட்டி இடங்களில் தனக்கு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும் என்பதான வழக்கு. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. அவ்வளவே.
8. இந்த தீர்ப்பிற்கும், தற்போது, அகில இந்திய தொகுப்பில், பொதுப் போட்டியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு, வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும் தொடர்பு கிடையாது. இதில் மாணவர்கள், வேறு எந்த சலுகையும் பெற்று, அனுமதி கோரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாநிலங்களிலிருந்து இளங்கலை மருத்துவக் கல்விக் கான 15 விழுக்காடு இடங்களில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 50 விழுக்காடு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் அளிக்கப்படாதது சட்டவிரோதமானதும், பிற்படுத்தப்பட்டவர்களை வஞ்சிக்கும் செயலுமாகும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள,உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் (ஞிவி, விசிலீ) அனைத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சேர்ந்துவந்தனர். இந்நிலையில், நமது மாநில ஞிவி, விசிலீ இடங்களை, அகில இந்திய அளவில் பொதுப்போட்டிக்கு, ஏனைய மாநிலங்களைப் போல் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2015 ஆண்டு உத்தரவிட்டது. இதனால் தமிழக உரிமை பாதிக்கப் பட்டுள்ளது. பத்து மாநிலங்களில் ஞிவி, விசிலீ படிப்புகளுக்கான இடங்கள் ஒன்று கூட இல்லை.மேலும் பத்து மாநிலங்களில் ஒற்றைப் படையில் மட்டும் தான் இடங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 192 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தையும் கடந்த ஆண்டு முதல் பொதுப்போட்டிக்கு, அகில இந்திய அளவில் விட்டதால் தமிழகம் பல இடங்களை வேறு மாநிலத்தவர்க்கு வழங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் இளநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் ,நிறுவன ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.அதை உச்ச நீதிமன்றமும் ஆதரிக்கிறது. ஆனால், தமிழக அரசின் உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பறிக்கிறது.இது நியாயமற்ற செயல். எனவே, உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத் தும் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
ஞிவி, விசிலீ போன்ற உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கும் ,நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு சட்டமன்றத்தில் தனி மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும் வகையில் , ஆந்திராவைப் போல் தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்.
முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் தகுதி போய்விடும் என இந்திய மருத்துவக்கழகம் கூறியது. ஆனால் , தகுதியைப் பற்றி கவலைப்படாமல் பட்டயப் படிப்புகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கலாம் என்றது. தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர் களுக்கு 10 முதல் 30 விழுக்காடு மதிப்பெண்ணை கூடுதலாக வழங்கலாம் என மருத்துவக் கழகத்தின் மாணவர் சேர்க்கை விதிமுறையில் திருத்தம் செய்தது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் அரசு மருத்து வர்களுக்கு முதுநிலை மருத்துவக்கல்வியில் வழங்கப்பட்ட 50 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்துசெய்தது.
இதனால், அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து, அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவைத்தரத்தையும், பொதுமக்களையும் பாதிக்கும்.எனவே, இந்த கூடுதல் மதிப்பெண் 10, 20, 30 என்பதை நீக்கிவிட்டு, மாநில அரசுகள் அந்த அந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப 50 விழுக்காட்டிற்கு குறைவில்லாமல் அரசு மருத்துவர்களுக்கு டிப்ளமா,முதுநிலை மருத்துவம், உயர்சிறப்பு மருத்துவம் ஆகிய படிப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கிக் கொள் ளலாம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் வகுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் அவசரச்சட்டம் மூலம் திருத்தம் கொண்டுவரவேண்டும்.
தீர்வு
நீட் 2017 முடிவுகள் வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும். அகில இந்திய தொகுப்புக்கான இடங்களை, தமிழகத்தில் இதுவரை மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக கடைப்பிடிக்கப்படும் ஒற்றை சாளர முறையில் (Single Window System ) நடத்த வேண்டும். இது தொடர்பாக சட்ட
ரீதியான வாய்ப்பை அனைவரும் பரிசீலிக்க வேண்டும்.
ரீதியான வாய்ப்பை அனைவரும் பரிசீலிக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தொடர்பான சட்டத்திற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற வேண்டும். பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப் படுதலே சரியானது. இதற்கான அழுத்தத்தை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரை சந்திக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான இரு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்குபெற நிபந்தனையாக வைக்க வேண்டும்.
-விடுதலை,4.7.17
No comments:
Post a Comment