கிராமங்களைப் பற்றி தோழர் பெரியார் பேசுவதைப் பாருங்கள்.
“கிராமங்கள் பலவற்றால் ஆகிய ஒரு நாட்டை ஒருவன் கைப்பற்றி ஆட்சி செய்யும்போது, அவன் இந்தக் கிராம வாழ்க்கையின் அமைப்பைச் சீர்குலைக்காமல், மேலும் பலமாக்கி வைத்துத் தன் ஆட்சியை நிலை பெறுத்துவதற்குச் சாதகம் செய்து கொண்டான்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை ஏற்படுத்தி அவன் மூலம் தனக்குத் தேவையான கப்பத்தை வாங்கிக் கொண்டு தன் கட்டளைப்படி நடந்து தனக்குதவிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் வரி நீக்கப்பட்ட விளைநிலங்களை ஊழிய இனாமென்றும், தேவதாயம், பிரம்மதாயம் என்றும் சாமிக்கும், பூசாரிக்கும், பிராமணருக்கும் கொடுத்து இவர்களைத் தன் ஆட்சிக்கு அரண்களாக்கிக் கொண்டான்.
கிராம அமைப்பு முடி ஆட்சிக்கும், கொடுங்கோன்மைக்கும் சாதகமான அமைப்பு என்பதைக் கண்டதினால், பழைய இந்து அரசர்கள் காலத்தில் இருந்த இவ்வமைப்புப் பின்னால் முகமதிய அரசர்களாலும், அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்) அரசாங்கத்தாலும், அப்படியே காப்பாற்றப்பட்டு வருகிறது. (பகுத்தறிவு இதழ். மே 1936)
இந்து மதம் திணித்த ஜாதிஅமைப்பை அப்படியே நிலை நிறுத்தவும், வலிமைப்படுத்தவும் இந்த கிராம அமைப்பு பயன்பட்டது என்றார் பெரியார்.
இப்படிப்பட்ட கிராமங்களுக்குத் தலைவர்களையும், நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றை இராஜராஜசோழன் தொடங்கி வைத்தார். அது தான் “குடவோலை முறை”. குடவோலை முறைப்படி, ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது நடக்கும் பஞ்சாயத்து போர்டு தேர்தலைப் போன்றது அது.
ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், குடவோலை முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக மன்னர்களே அறிவித்தார்கள். பார்ப்பனர்கள் மட்டுமே கிராமங்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
ஆங்கிலேய அரசாங்கம் வந்த பிறகு, குடவோலை முறை மறைந்தது. 1802, 1895- களில் கிராம அதிகாரிகள் சட்டம் இயற்றப் பட்டது. அந்தச் சட்டத்தின்படியும் பரம்பரை பரம்பரையாக கிராமங்களை நிர்வகித்தவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களே கிராம அதிகாரிகளாக நீடித்து வந்தனர். பார்ப்பனர்கள் வசிக்காத பல கிராமங் களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த, பார்ப்பனரல்லாத உயர்ஜாதியினர் கிராம அதிகாரிகளாக வரத் தொடங்கினர்.
தற்காலத்திலுள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு இணையான பதவி அது. கிராம முன்சீஃப், கர்ணம், மணியம் என பல பெயர்களில் இந்தப் பரம்பரைப் பதவிகள் இருந்தன. இந்தப் பரம்பரைக் கிராம அதிகாரி களிடம் தான் நமது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில உரிமைப் பதிவுக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள், நிலங்களின் எல்லைகள் குறித்த தகவல்கள் போன்ற பல அடிப்படையான சான்றிதழ்களைப் பெறவேண்டும்.
திராவிடர் அரசுகள் எத்தனையோ வகுப்புரிமைச் சட்டங்களை இயற்றினாலும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாய, நில உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவற்றைப் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்தச் சான்றுகளை வழங்கும் உரிமை பார்ப்பனர் களிடமும், அந்தந்தக் கிராமங்களிலிருந்து ஆதிக்க ஜாதியினரிடமும் இருந்தது.
ஒரு பட்டியலின மாணவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத் திலேயே எளிய ஜாதி மாணவரோ, அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை யாக இல்லாத ஜாதி மாணவரோ அல்லது விவசாய, நில உரிமைகளைப் பெற விரும்பும் மக்களோ மேற்கண்ட ஆதிக்கவாதிகளிடம் சான்றிதழ் களைப் பெறுவதென்பது கனவிலும் நடக்காததாக இருந்தது.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக நமது உரிமைகள், ஏட்டில் இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பெரும் தடை இருந்தது. மக்கள் விடுதலையில் அக்கறையுள்ள - சமுதாயத்தை நன்கு அறிந்து வைத்துள்ள ஒரு அரசு மட்டுமே இதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியும்.
தோழர் பெரியார் நீண்ட காலமாகவும், அந்த நேரத்திலும்,
கிராமங்களில் ஜாதி ஒழிய வேண்டுமென்றால், கணக்குப்பிள்ளை வேலையைப் பறையருக்குக் கொடுக்க வேண்டும். மணியம் வேலையை பள்ளர், சக்கிலியர், குறவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும், மணியமாக பிள்ளையும், கவுண்டரும் இருப்பதால்தான் அங்கே ஜாதி உரிமை தோன்றுகிறது. ஆகவே ஜாதி ஒழிப்புக்கு நாம் தூண்ட வேண்டும். பரிகாரம் தேட வேண்டும்” என்று அறிவிப்பு செய்தார். (விடுதலை 12.04.1964 & 16.04.1964)
என்றார். பெரியாரின் கனவை அண்ணா நனவாக்கினார். கிராம நிர்வாகம் என்பதில் இருந்த பார்ப்பன, ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
Tamil Nadu Proprietary Estates Village Service and the Tamil Nadu Hereditary Village-Offices (Repeal) Act, 1968 எனும் சட்டத்தை 1968 அக்டோபர் 16 அன்று பிறப்பித்தார்.
அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தியதில் எழுந்த சில சட்டச் சிக்கல்களை - அடுத்து வந்த கலைஞர் ஆட்சி Tamil Nadu Village Officers Service Rules, 1970 எனும் சட்டத்தால் சரி செய்தது.
எதிர்பார்த்தபடியே இச்சட்டங்களை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அந்தச் சட்டச் சிக்கல்களைச் சரி செய்வதற்காக கலைஞரின் தி.மு.க. அரசு புதிய புதிய அரசாணைகளைப் பிறப்பித்தது.
கிராம அதிகாரி, கர்ணம்போன்ற எந்தப் பதவியாக இருந்தாலும் அவற்றுக்கு அரசு சார்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் எந்தக் கிராமத்திற்கு வேண்டுமானாலும் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.
பஞ்சமிநிலக் கொள்ளைக்கு உடந்தையான பார்ப்பனர் மற்றும் கர்ணங்கள், மிராசுதார்கள்
ஆங்கிலேயர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக இருந்த புறம் போக்கு நிலங்களில் விவசாயம் செய்து கொள்ள யார் வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு நிலம் கிடைக்க வேண்டுமானால், அந்தப் புறம்போக்கு நிலங்கள் இருக்கும் கிராமங்களில் உள்ள ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த இந்தக் கர்ணம், மணியம், முன்ஃப்புகளின் ஒப்புதல் வேண்டும். அவர்கள் மறுத்தால் யாருக்கும் நிலம் கிடைக்காது.
பார்ப்பனர்களோ, பெரும் நில உடமையாளர்களோ, நிலமே இல்லாத ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரோ யாராக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கோ, அந்தந்தக் கிராமங்களில் எண்ணிக்கை குறைவாக வாழும் ஜாதியினருக்கோ நில உரிமை கிடைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
அதனால் தான், ஆங்கிலேயர் காலம் முதல் நீதிக்கட்சி காலம் வரை பட்டியலின மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப் பட்டன. (Depressed Classes Land Act G.O. No 1010/10-A (Revenue) 1892) அப்படி வழங்கப்பட்ட நிலங்களில் இன்று சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைப் பட்டியலின மக்களிடமிருந்து இடைநிலை ஜாதியினர் பறித்துக் கொண்டனர்.
இந்து மதத்தின் ஜாதிமுறை என்பது சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கத்தைச் செலுத்துவதை நாம் அறிவோம். பஞ்சமி நில அபகரிப்புக்குப் பின்னாலும் இந்து பார்ப்பன, ஜாதித்தத்துவங்களே இருக்கின்றன. அவை கிராம முன்ஃப், கர்ணம், மணியம் போன்றவர் களின் வழியாக பஞ்சமி நிலக் கொள்ளையை நடத்தின.
அப்படிப்பட்ட இந்து மத, ஜாதிமுறைப் பாதுகாப்புப் பதவி களைத்தான் அண்ணாவும், கலைஞரும் அதிரடியாகக் கலைத்தனர். ஒருவேளை இத்தகைய சட்டங்கள் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட காலத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இத்தனை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பட்டியலின மக்களிடமிருந்து பறிபோயிருக்காது.
ஜாதியச் சமுதாயம் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்
பரம்பரைப் பதவிகளுக்கு எதிராக பொதுத்தேர்வுகள் வழியாக கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் முறை உருவாக்கப் பட்ட, அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு சதவீதமும் 49 ஆக உயர்த்தப்பட்டது.
இதுபோன்ற தொடர்ச்சியான சட்டரீதியான கூட்டு நடவடிக்கை களும், இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பெரியார் திரட்டிக்கொடுத்த சமுதாய ஆதரவும் தமிழ்நாட்டு கிராமங்களில் நிலவிய கடுமையான பார்ப்பன, பார்ப்பனிய, இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கங்களின் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தின.
– அதிஅசுரன், வேண்டும் மீண்டும் திராவிடர் ஆட்சி நூல்
-காட்டாறு இணைய பக்கத்தில் இருந்து
No comments:
Post a Comment