அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில் வெற்றி!
இந்து அறநிலையத் துறை விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது
சென்னை, மார்ச் 12 கோவில்களில் சமையல் பணி மற்றும் நைவேத்தியப் பணிகளுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் விளம்பரம் - அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத சங்கத்தினரின் வழக்குக் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
இதுகுறித்து சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளதாவது:
‘‘திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானாசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நைவேத்தியம் பணி யிடங்களுக்கு ‘‘பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்'' என்ற அறிவிப் பாணை, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தொடர்ந்த வழக்கால் திரும்பப் பெறப்பட்டுள்ளது!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்திருந்தும் கடந்த 14 வருடமாக 203 பார்ப்பனரல்லாத மாணவர்கள் நாங்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம். எமது பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமின்றி திருக்கோயில் பணி நியமனங்களில் பார்ப்பனரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானாசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் (பரிச்சாகரர்) மற்றும் நைவேத்தியம் ஆகிய பணியிடங்களுக்கு ‘பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம். 12 ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். மார்ச் 4 ஆம் தேதி அன்று வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எமது சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ஆஜரானார். திருக்கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அந்த அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் வழக்கானது முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கெனவே இதேபோன்று திருவண்ணா மலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மற்றும் சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ‘பிராம ணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண் டும்' என சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிப்பாணைகள் வெளிவந்த போதும் உயர்நீதிமன்றத்தினை நாடி இடைக்கால உத்தரவுகளைப் பெற்றோம். பின் எங்களது வழக்குகளின் காரணமாக அவை திரும்பப் பெறப்பட்டன. திருக்கோயில் நிர்வாக அதி காரிகள் இவ்வாறு சட்டவிரோத பணிநியமன அறிவிப்பாணைகள் வெளியிடுவதும், நாங்கள் வழக்கு போட்டவுடன் திரும்பப் பெறப்படுவதும் தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமிழக அரசும், இந்து அற நிலையத் துறையும் அரசமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ‘பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப் பிக்கவேண்டும்' என ஜாதி அடிப்படையில் திருக்கோயில் பணிநியமனங்கள் செய்யப் படுவதை தடுத்திட வேண்டும். அவ்வாறு அறிவிப்பாணைகள் வெளியிடும் அற நிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற ஒவ்வொரு அறிவிப்பாணையும் பார்ப்பனரல்லாத மக்களின் மீதான ஜாதிய இழிவை நிலைநிறுத்தும் செயல் என்பதால் தமிழகமும் விழிப்பாக இருந்து தடுத்திட வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம்.
தமிழக அரசே! இந்து அறநிலையத்துறையே!
அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ‘பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்' என ஜாதி அடிப்படையில் திருக்கோயில் பணி நிய மனங்களை அனுமதிக்காதே!
‘பிராமணர்கள் மட்டுமே திருக்கோயில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என அறிவிப்பாணைகள் வெளியிடும் அற நிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்!
தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு நியமனத்திற்காக காத்தி ருக்கும் பார்ப்பனரல்லாத 203 அர்ச்சக மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி நிய மனங்களை உடனே வழங்கு!
அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டு சட்டவிதிகளை பின்பற்று!''
இவ்வாறு அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
கோவில்கள் என்றாலே அர்ச்சனை செய்வதாக இருந்தாலும் சரி, சமையல் செய்வதாக இருந்தாலும் சரி பார்ப் பனர்களே பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதே - சட்டத்தின் முன் அனைவரும் சமமே - இந்த நிலையில் வழக்கின் காரணமாக இந்து அறநிலையத் துறை அரசு விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது.
பயிற்சி பெற்ற 203 பார்ப்பனர் அல்லாத அர்ச்சர்களுக்கு அர்ச்சகர் களாக நியமனம் செய்யப்படவேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பு!