2011 உண்மை இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31
குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
பெரிய மேளத்தார் மேடையில் உட்கார்ந்து கச்சேரி வாசிப்பது வழக்கமில்லை
(1914 ஆம் ஆண்டு நடந்த தியாகராஜ அய்யரின் குரு பூசை விழாவில் நடந்த சங்கீத கச்சேரிகளில் ஒன்றில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நாதஸ்வர வித்வான் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் வாசிக்க அனுமதிக்கப்பட்டார். அவர் வாசிக்கச் சென்றபோது, சங்கீத மேடை எடுக்கப்பட்டு, அவரைக் கீழே அமர்ந்து வாசிக்குமாறு பார்ப்பனர்கள் கூறினர். இங்ஙனம் அவமதிக்கப்பட்ட நமது பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பூர்வீக சங்கீத உண்மை என்ற அரிய நூல் மாட்சிமைமிக்க மைசூர் மன்னரால் பாராட்டப்பட்டுள்ளது. அப்பெருமை மிக்க பிள்ளை அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்காது பாட மறுத்து தஞ்சாவூருக்குப் போய்விட்டார். ஜாதித் திமிர்பிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத வித்வான்களை அவமானப்படுத்தியதற்கு இது மற்றுமொரு உதாரணமாகும்.)
1914 _ ஆம் வருடம் திருவையாற்றில் நடந்த உற்சவத்தில், வீணை, வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், முதலிய கச்சேரிகள் நடப்பதுபோல் நாதஸ்வரக் கச்சேரியும் நடத்த வேண்டுமென்று மதுரை (காலஞ்சென்ற) நாதஸ்வரவித்வான், பொன்னுசாமி பிள்ளையவர்கள் பெரிதும் போராடியதால், அடுத்தநாள் மாலை பொன்னுசாமி பிள்ளையவர்களின் நாதஸ்வரக் கச்சேரிக்கு இடம் தருவதாகப் பார்ப்பனப் பாகவதர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அடுத்தநாள் மாலை மேளம் வாசிக்க வேண்டிய மண்டபத்திற்கு வாத்தியக் கருவிகளுடன் வந்து பார்க்க, கச்சேரிகள் நடைபெறுமிடத்தில் பல வகைகளால் போடப்பட்டிருந்த (ஸ்டேஜ்) மேடையை எடுத்துவிட்டுத் தரையில் ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதைக்கண்ட பிள்ளையவர்கள் பெரிதும் மனம் நொந்து, சங்கீதத்திலும் ஜாதிபேதமா, ஏன் மேடையை எடுத்து விட்டீர்கள்? என்று கேட்க, பெரிய மேளத்தார் மேடையில் உட்கார்ந்து கச்சேரி வாசிப்பது நாளிதுவரை வழக்கமில்லையென்றும் மேடைபோட முடியாதென்றும் சுயநல நயவஞ்சகப் பார்ப்பனப் பாதகர்கள் சொல்லிவிட்டார்கள். பிள்ளையவர்களும் மேடையில்லாமல் கண்டிப்பாய் மேளம் வாசிக்க முடியாதெனச் சொல்லிவிட்டுத் தஞ்சாவூருக்குப் போய்விட்டார்கள்.
இங்ஙனம், பார்ப்பனர்களால் அவமதிக்கப்பட்ட நமது பிள்ளையவர்கள், சங்கீத உலகத்திற்கே புத்துயிர் அளித்த பெரியார் என்பதை, அவரால் எழுதப்பட்டதும், மாட்சிமிக்க மைசூர் மன்னர் பெருமானால் நேரில் ஆராய்ந்து பார்த்து மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்ளப்பட்டதும், குறிப்பிடத்தக்க ஒவ்வொரு பார்ப்பன வித்வான்களாலும் முகவுரை தந்து ஆதரிக்கப்பட்டதுமான பூர்வீக சங்கீத உண்மை என்ற அரிய நூலைப் படித்துப் பார்ப்பவர்கட்கு உண்மை விளங்காமற் போகாது. அத்தகைய பெரிய வித்வானையே அவமதித்து பார்ப்பனர்கள் கோடரிக்காம்பாய் மற்றொரு நரதஸ்வரக்காரரைப் பிடித்து கீழேயே உட்கார்ந்து கச்சேரி மேளம் வாசிக்கும்படி செய்துவிட்டார்கள்.
குடிஅரசு - 01.02.1931 - பக்கம்:13
- தகவல் : மு.நீ.சிவராசன்
No comments:
Post a Comment