நூல்: விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?
ஆசிரியர்: கி.தளபதிராஜ்
வெளியீடு: திராவிடன் குரல்,
48, சாய்வேல் அடுக்ககம், பலராமன் நகர்,
பூவிருந்தவல்லி, சென்னை - 56.
தொலைபேசி: 99404 89230
விலை: ரூ.300 பக்கங்கள்: 338
திராவிட இயக்கம் தமிழின உணர்வை மழுங்கடித்ததா?
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18.5.2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டது. பெரியாரைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் பண்ணப் புறப்பட்டிருக்கும் இந்த கொள்கைச் சீமான்கள் திராவிட இயக்கத்தையும், பெரியாரையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.
திராவிடர் என்னும் ஓர் இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் எந்த இனத்திலும், இல்லாத அளவில் மொழியுணர்ச்சியும், தனி ஈழம், தமிழ்நாடு கோரிக்கைகளும் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தமிழர் உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதாகக் கூறுவது உண்மையா?
பெரியார் மொழியிலேயே அவர்களுக்கு விடை காண்போம்.
தமிழர்களின் அறிவையும், தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக்கொண்டு தமிழ் அறிவியலற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர் என்கிறது ஆவணம்.
தமிழைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று ‘குடிஅரசு’ ஏட்டில் 4.9.1938 லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.
“ஏ! சட்டசபை தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் தறுதலையும் அல்ல! தாய் மொழியை கட்டாயமாக்கக் கூடாது என்று கருதித் திரியும் சண்டாளனுமல்ல! நீ தமிழன்; உன் தந்தை தமிழன்; உன் தாய் தமிழ் மகள்; உற்றார் தமிழர்; உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத் தமிழர் குருதி.
கட்டாய இந்தியால் உன் தமிழ் நாலாவகையிலும் நசுக்கப்படுகிறது. மொழிப் பாடங்களை மட்டும் தமிழில் கற்றால் தமிழ் விருத்தியாகிவிடும் என்று கருதி மயங்காதே! உன் தாயை உன் தமிழை இம்சிக்காமல் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தீர்மானிப்பாயாக! இல்லையானால், தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்று முயலாமல் இருந்தாயானால், உன் நாட்டு மொழிக்குத் துரோகியாவாய். உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய்.
நீ மானமுள்ள தமிழனானால், உன் பெற்றோரின் தமிழ் இரத்தம் உன் உடலில் நரம்பில் தோய்ந்திருக்குமானால் இன்றே ஏன் இப்பொழுதே எங்கள் நாட்டில் எங்கள் தாய் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. உங்கள் தமிழைக் கட்டாயமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சி இல்லாத விலங்குகளா? தாய் மொழியில் அபிமானம் இல்லாத தசைப்பிண்டங்களா?
தேசத்தின் பெயரையோ, சமுகத்தின் பெயரையோ சொல்லி சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் மொழி குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு. தன் மொழிக்காக சிறை புகுந்தான்! புகுகிறான்! புகுவான்! தடியடிபட்டான்! படுகிறான்! படுவான்! சகல துன்பங்களையும் அனுபவிப்பான். பேசும் தமிழை தாய் மொழியாக உடைய நீ, தாய்மொழியை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா? போவாயானால், ஏ! துரோகி, உன் சட்டசபை வாழ்விற்கு சாவு மணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்’’
என்று எழுதியது பெரியாரின் ‘குடிஅரசு’. அப்படிப்பட்ட பெரியார், ‘தமிழை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை’ என்று பகுத்தறிவுப் பரப்புரை செய்ததாகக் கூறுகின்றனர்.
தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் திராவிடநாடு முழக்கத்தை திராவிட இயக்கம் முன்னெடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஆவணம் கூறுகிறது.
“எனக்கு ஏன் திராவிடநாடு வேண்டாம்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் தனது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.
“1938ஆம் ஆண்டு நான், ராஜாஜி ஆட்சிக் கொடுமையைக் கண்டு சென்னை ராஜதானி என்று பெயர் கொண்டிருந்த திராவிடநாடு தனி நாடாக ஆக வேண்டும் என்று கேட்டுத் திட்டம்போட்டு கிளர்ச்சி செய்து வந்தேன். அன்று பார்ப்பனர் தவிர்த்து யாரும் அதை எதிர்க்கவில்லை. அப்போது திராவிட நாடு என்பது ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு சிறு பாகமே தமிழ்நாட்டுடன் சேர்ந்து திராவிட நாடாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் தொகை இரண்டு கோடியே எண்பத்தைந்து இலட்சம்; மற்ற மூன்றும் சேர்ந்து இரண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் தொகை மேற்கண்ட மூன்று நாடுகளை விட அதிகமாக இருந்தது. அரசியல் சமுதாய பொருளாதார நிலையில் இந்த நாடுகள் தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதோடு நம் கை வலுத்ததாகவும் இருந்தது.
ஆனால், இன்று தமிழ்நாடு மக்கள்தொகை மூன்று கோடிக்கு கீழ்ப்பட்டதாகவும் அவை மூன்றும் சேர்ந்து சற்றேறக்குறைய எட்டுக்கோடி மக்களாகவும் இருக்கிறார்கள். நாம் அதில் பகுதிக்குக் கூட அருகதையற்றவர்களாக இருக்கிறோம். உலகில் பிரிவினைக்காரன் எவனும் பிரிந்த பின் விருப்பப்படி ஆட்சி அமைக்க, பதவி பெற வசதியாக யாருக்கும் மைனாரிட்டியாக இல்லாமல் சுய பலத்தோடு இருக்க எண்ணுவானா _ மைனாரிட்டியாக இருக்க எண்ணுவானா? எனவேதான் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லுகிறோம்.
சட்டசபையில் நாம் 206 பேர் அவர்கள் 429 பேர். கூடுதலாக 635 பேர் இருக்கிறார்கள். பார்லிமென்ட்டில் நாம் 41 பேர் அவர்கள் 46 பேர் அதிகப்படியாக 87 பேர் இருக்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் நமது குறைகளை பங்குகளை யாரிடம் கேட்பது? எதற்கு பிரிவினை கேட்கிறோம்? இன்று நாம் மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் மெஜாரிட்டி ஆட்சிப்படி நடக்க வேண்டி இருக்கிறது. பிரிந்தால் நமக்கு நாமே எஜமான். வேறு யாரும் கூடாது. நாம் யாருக்கும் அடிமையல்ல என்கிற நிலை பெறவே பிரிவினை கேட்கிறோம். பிரிவினையால் பலன் அனுபவிக்க வேண்டுமானால் திராவிட நாடு கேட்பது புத்திசாலித்தனமா? தமிழ்நாடு கேட்பது புத்திசாலித்தனமா? என்பதை பற்றி இப்போது யோசித்துப் பாருங்கள்’’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இந்த வகையில் பெரியாரைப்பற்றி விமர்சிக்க இந்தக் காளான்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நாம் தமிழர் கட்சி தனது கொள்கை ஆவணத்தில் கலைச்சொல் விளக்கம் என்கிற பெயரில் பார்ப்பான் என்றால் “ஆய்வாளன், இளைஞன்”. என்றும் ஆரியர் என்றால் “சீரியன், உயர்ந்தவன்” என்றும் பிராமணன் என்றால் “பேரமணன்” என்றும் கூறி பார்ப்பனர்களை மகிழ்விக்கத் துடிக்கிறது. ஆரியர் வருகை மனுநெறியர் போன்ற மரியாதைக்குரிய சொல்லாடல்களையே பார்ப்பனர்களைக் குறிக்கும் இடத்திலெல்லாம் கையாண்டு இருக்கும் இந்தக் கூட்டம் பார்ப்பனர்களின் கைக்கூலிகளே என்பது தமிழர்களுக்கு விளங்காமல் போகாது.
***
திராவிட இயக்கம் எதையும் சாதிக்கவில்லையா?
திராவிட முன்னேற்றக் கழகம்! “முன்னேற்றம்’’ என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே, அது என்ன திராவிடக் கொள்கை? ‘நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்தி வச்சோம்’ன்றாங்க. போங்கடா வெட்டிப் பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா, அண்ணன் செத்துப் போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக் குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக் கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்து கிட்டிருக்கு. ‘சீர்திருத்தத் திருமணம் நடத்தி வச்சுட்டோம்’ன்றாங்க. எங்க ஊர்ல அய்யர் கிய்யரெல்லாம் கிடையாது. சும்மா வருவாய்ங்க மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு போயிருவான்க. நாங்கதான் ஜில்லாவ மாவட்டம் ஆக்கினோம். திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாது’ங்குறான்.’’
இது இணையதளத்தில் உலவவிடப்பட்ட சீமானின் பேச்சு. சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டிற்கு வீடு பெண்கள் பூவிழந்து பொட்டிழந்து வெள்ளை உடையில் நடைப்பிணமாக வாழ்ந்து வந்த காட்சிகளை இப்போது பார்க்க முடிகிறதா? மொட்டையடித்து காவித் துணியில் முக்காடிட்டு “மொட்டைப் பாப்பாத்தி” என்று அழைக்கப்பட்ட பார்ப்பன வீட்டுப் பெண்களை இப்போது பார்க்க அரிதாகிப்போனது எப்படி? சீமான் சொல்வது போன்று ஒன்றிரண்டு ஜாதிகளில் அண்ணன் இறந்துவிட்டால் அவருடைய மனைவியை தம்பி திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது உண்மைதான். அது ‘அறுத்துக் கட்டுதல்’ எனச் சொல்லப்பட்டது.
பெரும்பான்மை சமூகத்தில் விதவைப் பெண்களின் நிலை என்ன? 1870களில் வெள்ளைக்கார ஆட்சி நடந்த பொழுது அரசுப் பணிகளில் ஜாதி வாரியாக பணிநியமனம் நடத்தப் போவதாக பரவலாக பேச்சு எழுந்தது. அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி ஜாதிச் சங்கங்களை கட்டமைத்தனர். பின்னாளில் அவர்கள் கடவுள் மற்றும் மன்னர்களின் பெயரைச் சொல்லி அவர்களின் வாரிசாக தம்மை அடையாளப்படுத்தி பெருமையடித்தனர். சில ஜாதிகள் தாங்கள் பார்ப்பனர்களுக்கு இணையான சத்திரியர்கள் என்று சொல்லிக் கொண்டன. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை உள்வாங்க ஆரம்பித்தன. விதவைத் திருமணங்கள் அந்த ஜாதிகளிலும் பெரும்பாலும் நின்று போனது. உயர்ஜாதி வகுப்பினர் விதவைகளுக்கு வெள்ளைச்சீலை அணியும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்தனர். ஆனால், திராவிட இயக்கத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் அந்த நிலை நீடிக்கவில்லை. 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட விதவைப் பெண்கள் 26 லட்சத்து 32 ஆயிரம் பேர் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி மானமிகு வீரமணி அவர்களைப் பேட்டியெடுக்க, பெரியார் திடலுக்கு வந்தார். அவர் கணவரை இழந்தவர் என்ற போதிலும் நெற்றியில் பொட்டுடன் வந்திருந்தார். அப்போது வீரமணி அவர்களைப் பார்த்து, “அய்யா பெரியார் என்ற ஒருவர் பிறந்திருக்காவிட்டால் இன்றைக்கு ஒரு சக மனுஷியாக என்னால் நடமாட முடியாமல் போயிருக்கும்” என்று நன்றி உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். அந்தப் பார்ப்பன அம்மையாருக்கு இருந்த நன்றியுணர்ச்சிகூட சீமான்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
திராவிடர் இயக்கம்தான், ஜில்லாவை மாவட்டம் ஆக்கியது என்றால் அதற்கொரு கிண்டலா? வந்தனோபச்சாரம், நமஸ்காரம், அக்கிராசனர், காரியதரிசி போன்ற சமஸ்கிருத உரையாடல்கள் தானாக ஒழிந்து விட்டதா? சென்னை ராஜதானி, தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது திராவிட இயக்கத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் சாதனையல்லவா? காளிமுத்து உயிரோடிருந்திருந்தால் காயடித்திருப்பார் சீமானை!
“சீர்திருத்தத் திருமணம் நடத்தி வச்சுட்டோம்ன்றாங்க. எங்க ஊர்ல அய்யர் கிய்யரெல்லாம் கிடையாது. சும்மா வருவாய்ங்க மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு போயிருவான்க’’ என்கிறார் சீமான்!
தாழ்த்தப்பட்ட மற்றும் நாடார் சமூகம் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக நிகழ்ச்சிகளில் தீண்டாமை கருதி பார்ப்பனர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. பிற்காலத்தில் வாய்ப்பு வசதிகள் பெருகியதும் அந்த சமூகத்தினர் பார்ப்பனர்களைக் கலந்து கொள்ளுமாறு வேண்டினர். பார்ப்பனர்களும் பொருளீட்டும் ஆசையில் அவர்கள் வீட்டுத் திருமணங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தனர். அப்படி நடைபெறும் புரோகிதத் திருமணங்களில் திருமணம் முடியும்வரை மணமகனின் தீட்டு தங்களை தீண்டாமல் இருக்க எச்சரிக்கையாக மணமகனுக்கு ஒரு தற்காலிக பூணூலை மாட்டிவிட்டு புரோகிதர் திருமணத்தை முடிப்பார்.
1934இல் தந்தை பெரியார் அவர்களால் திருச்சியிலே நடத்தி வைக்கப்பட்ட சிதம்பரம் --_ ரங்கம்மாள் திருமணம்.
20 ஆண்டுகள் கழித்து அவர்கள் இரண்டு ஆண், இரண்டு பெண் மக்களைப் பெற்ற நிலையில் “இத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகிறது. இது சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்கிற ஏழு அடி எடுத்து வைத்தல், ஓமம் வளர்த்தல் போன்ற எந்தச் சடங்கும் நடத்தப் பெறாமல் நடைபெற்றுள்ளது. எனவே, இது இந்து சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளையாகவே கருத முடியாது. இவர்கள் சட்டவிரோத வைப்பாட்டியாள் பிள்ளையாகவே கருதப்படுவார்கள்!” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 26.8.1953 அன்று ஜஸ்டிஸ் ராஜகோபாலன், ஜஸ்டிஸ் சத்திய நாராயணராவ் ஆகிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. (ஆதாரம்: திராவிடர் கழக தலைவர் வீரமணி எழுதிய “சுயமரியாதைத் திருமணம்’’ தத்துவமும் _ வரலாறும்) என்கிற வரலாறெல்லாம் இந்தக் கத்துக்குட்டிகளுக்கு தெரியுமா?
பின்னர் தந்தை பெரியார் அவர்களும், திராவிட இயக்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவு 1967இல் அண்ணா ஆட்சிக்கட்டிலில் ஏறியதும், அவ்வாண்டிலேயே சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி சட்டத்தை நிறைவேற்றியது திராவிட இயக்கத்தின் சாதனையல்லவா?
“திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாது அப்படியா?’’ என்கிறார் சீமான்.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட இந்திய சென்சஸ் சென்னை தொகுப்பில் சமூகத் தகுதி வரிசையில், பார்ப்பனர், சத்திரியர், வைசியர், வரிசைகளுக்கு கீழே சற் சூத்திரர்கள் _ நல்ல சூத்திரர்கள் 31 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும், 1935இல் தமிழ்நாட்டில் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதியதோடு பயணச் சீட்டுகளிலும் அப்படியே அச்சிட்டிருந்தார்கள் என்பதும், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சிக்குழுத் தலைவராக அப்போது இருந்த சவுந்தர பாண்டியனார்தான் அதை ஒழித்தார் என்ற வரலாறும் தெரியுமா?
1935இல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு கக்கூஸ் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது. அதற்குப்பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மலம் எடுப்பதற்குக் கூட தீண்டத்தகாதவர்கள் அக்கிரஹாரத்துக்குள் நுழையக்கூடாது என தீர்மானம் போட்ட கொடுமையை சீமான் அறிவாரா?
1927இல் மன்னார்குடி தேசிய உயர் நிலைப்பள்ளிக்கு வந்த காந்தியாரிடம் அப்பள்ளித் தலைமையாசிரியர் “ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனைக்கூட இந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை’’ என்று இறுமாப்போடு கூறியதையும், 1930 வரை கோவை சிங்காநல்லூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிகளிலே சேர்க்க மறுத்தார்கள் என்பதையும், பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் மருத்துவப் படிப்பு படிக்கக் கூடாது என்பதற்காக மருத்துவம் பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று வைத்திருந்ததையும், வரலாறு நமக்குப் பாடமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. திருத்தங்கல் பகுதி நாடார் சமூகத்தினர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப்பே தீர்ப்பு வழங்கியதும், 1895ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போகத் தடைபோடப்பட்டது என்பதையும், அதை எதிர்த்து அந்தப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து விட்டார்கள் என்கிற செய்திகளையும் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு சொல்லித் தரவில்லையா?
1952இல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர், அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும், படிக்கக்கூடாது என்று பகிரங்கமாகவே பேசிய கால கட்டங்களையாவது சீமான் அறிவாரா?
இவற்றையெல்லாம் முறியடித்து தமிழகத்தில் சமூகநீதிக்கு வழிவகுத்தது திராவிடர் இயக்கத்தின் சாதனையல்லவா? திராவிட இயக்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டு மாளாது. வரலாறு தெரியாமல் சீமான்கள் ‘வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ’ என்று உளறிக்கொட்டுவதை இத்தோடு நிறுத்த வேண்டும்!
அது சரி... சில ஆண்டுகளுக்கு முன் வரை தந்தை பெரியார் அவர்களையும் அவர்கள் கண்ட இயக்கத்தின் சாதனைகளையும் மேடைதோறும் முழங்கி விளம்பரம் பெற்று விட்டு, இப்பொழுது எதிரிகளின் காலடிக்குள் பதுங்குவதன் கூலி நிர்ணயம் என்ன?
- ‘விடுதலை’ 16.11.2013
- உண்மை இதழ், 1-15.10.19