பெயருக்குப்பின் ஜாதி மறைய காரணம் ஈ.வெ.ரா. இல்லையாம். நாகரிகம் வளர்ந்ததால் ஏற்பட்டதாம்.
1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் ஜாதி பட்டத்தைத் துறப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன், விருதுநகர் வி.வி. இராமசாமி ஆகியோர் நாடார் பட்டத்தை இன்று முதல் துறக்கிறோம் என்றதும், சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரனார் சேர்வை பட்டத்தைத் துறக்கிறேன் என்று அறிவித்ததும், 1927ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் நாயக்கர் பட்டத்தைத் துறந்ததும், அதன் காரணமாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும் 'தினமலர்' கும்பலுக்குத் தெரியாதா? இந்த அடிப்படை வரலாறு கூடத் தெரியாமல் பத்திரிகை நடத்துவதும் ஒரு கேடா!
தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களின் நிலை என்ன? அங்கெல்லாம் ஜாதி பட்டம் ஒழிந்ததா? அங்கெல்லாம் நாகரிகம் வளரவில்லையா? தானாக ஏன் நடக்கவில்லை? பெரும்பாலோர் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்கின்றனர் என்கிறது 'தினமலர்'.
இதே 'தினமலர்' குடும்பத்தால் நடத்தப்படும் 'காலைக்கதிர்' (29.9.2015 பக்கம் 3) வெளியிட்ட செய்தி என்ன?
"2013-2014-இல் சிறப்புத் திருமணங்கள் சட்டப்படி 7235 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2014-2015ல் 19 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் மதங்கள், சமுதாயப் பிரிவுகளைக் கடந்து செய்யப்படும் திருமணப் பதிவுகள் மூன்று மடங்காக அதிகரித்து உள்ளன" என்று வெளியிட்டது 'தினமலர்' குடும்பத்து நாளேடான காலைக் கதிர் தானே.
பதிவு செய்யப்பட்ட வகையில் மூன்று மடங்கு அதிகம் என்றால், பதிவு செய்யப்படாத ஜாதிமறுப்பு, மத மறுப்புத் திருமணங்கள் எத்தனை மடங்கு இருக்கும்?
சென்னை - பெரியார் திடலில் இயங்கும் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் இம்மாதத்தில் இரு பார்ப்பனர்களே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்பதைத் 'தினமலர்' வகையறாக்களுக்குத் தெரியுமா?
கல்வி, வேலைவாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடுபற்றியும் ஏகடியம் செய்கிறது 'தினமலர்' உங்கள் ஆட்சிதானே மத்தியில் நடக்கிறது. ஜாதியை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. அதற்குப் பின் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினை வராது அல்லவா? முதலில் தினமலர் கும்பல் தோளில் தொங்கும் பூணூலை அறுத்து எறியட்டுமே பார்க்கலாம்....
- விடுதலை நாளேடு, 25.11.19
No comments:
Post a Comment