Tuesday, 24 September 2019

உருவப்படத் திறப்பின் நோக்கம்

உருவப்படத் திறப்பின் நோக்கம்


நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும்பிட்டு பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரி பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கருதிக் கூட நாம் எந்தப்பட திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கு பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ, தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகியவை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித் தனம் செய்வதற்கு ஆகவும் அல்ல. ஆனால் மற்றெதற்கு என்றால் மனித சமூகநலனுக்கு சுயநல மில்லாமலும், மற்றவர் களிடமும் எவ்வித கூலியோ புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும் தன் முயற்சியால் தன் பொருளால் தன் பொறுப் பென்று கருதி தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதி சயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா? என்பதற்கு ஆகவே தான் - மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாக வேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.-

- விடுதலை, 19.3.1938

விடுதலை 13 9 19

No comments:

Post a Comment