சென்னை உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன்கௌல்
நீதிபதி ஆர். மகாதேவன்
நீதிப் பேராணை மனு கீ.றி. 18488-2016
15.6.2016
ஜி.பாலகிருஷ்ணன் மனுதாரர்
தமிழ்நாடு அரசு அதன் சார்பாக
அரசுச் செயலாளர் உயர் கல்வித்துறை
தலைமைச் செயலகம் சென்னை - 600009 மற்றும் ஒருவர்
எதிர் மனுதாரர்கள்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: எஸ். சத்யசந்திரன்
எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்: டி.என்.ராஜகோபால் அரசு வழக்கறிஞர் (கல்வி)
நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப்பட்டது செலவுத் தொகை இல்லை.
கோரிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 226இன்படி செயலுறுத்தும் நீதிப் பேராணை தாக்கலாகி,
(அ) மேல் நிலைக் கல்வித் துறையோ, பள்ளிக் கல்வித் துறையோ, அரசாணை எண் நி.ளி. விஷி 205 நாள்: 31.7.2000 கல்வித்துறை (சி2) ஐ முழு அளவில் அமல் செய்து இத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்துப் பள்ளிகளும் பெற்றோரிடமிருந்தோ அவர்களது பிள்ளைகளிடமிருந்தோ கல்வி நிலையங்களில் சேரும்போது ஜாதி, மதத்தைக் கூறுமாறு வற்புறுத்தக் கூடாது என்று பணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஜாதி, மதம் எனும் இடத்தில் எந்த ஜாதியும், மதமும் கிடையாது என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
(ஆ) மேலே சொன்ன வகையில் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் எநதச் சாதியும் மதமும் இல்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இது மனுதாரர் கோரிய 5.5.2016 தேதி முதல் நீதிமன்றம் வரையறுத்துக் கூறும் நாளிலிருந்து பின்பற்றப்பட வேண்டும் என ஆணை வழங்கக் கோரப்பட்டிருக்கிறது.
தீர்ப்புரை
தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கௌல்
சாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைப்போம் எனும் உயரிய எண்ணத்துடன் தமிழ்நாடு மாநில அரசு பின்வரும் அரசாணையை 31.7.2000 அன்று பிறப்பித்திருக்கிறது. அது பின்வருமாறு:
தமிழ்நாடு அரசு சுருக்கக் குறிப்பு
ஆரம்பக் கல்வி - பள்ளிச் சான்றிதழில் ஜாதி,
மதத் தகவல்களைக் குறிப்பிடாமல்
தவிர்க்கும் உரிமையை வழங்குதல்
- ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை (சி2)
அரசாணை எண் 205 நாள்: 31.7.2000
படிக்க: அரசாணை எண் 120 கல்வித்துறை நாள் : 2.7.1973
ஆணை:
மேலே படிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் பணிக்கப்பட்டதாவது: இடைநிலைக் கல்விச் சான்றிதழிலும், பள்ளி மாற்றுச் சான்றிதழிலும் ஜாதி, மதம், பற்றிக்குறிப்பிட விரும்பாதோர் அவ்வாறு ஜாதி இல்லை. மதமும் இல்லை என்று குறித்துக் கொள்ளலாம் அல்லது அந்தப் பகுதியை நிரப்பாமல் விடலாம். பள்ளிக் கல்வி இயக்குனராலும், ஆரம்பக் கல்வி இயக்குனராலும் இது முழு அளவில் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்குத் தெரிய வந்தது. எதிர்வரும் நாட்களில் அரசாணைப்படி இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு சம்மந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போதோ வேறு சூழ்நிலைகளிலோ, மாணவர்களின் பெற்றோர் ஜாதி, மதம் பற்றித் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தால், அவர்களால் அதைக் கூற இயலாமல் போனால் அதுபற்றி அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை.
/ஆளுநரின் ஆணைப்படி/
(ஒப்பம்) எம்.ஏ. கௌரிசங்கர்
அரசுச் செயலாளர்
பெறுநர்:
இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்ககம்
சென்னை-6
இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை-6
2. இந்நிலையில் மனுதாரர் சமர்ப்பிப்பதாவது: அரசாணை சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.,
3. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நாங்கள் ஏற்கிறோம். எனவே எதிர் மனுதாரர் இந்த அரசாணையினை மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் விரிவான வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வகையில் பள்ளிச் சான்றிதழ் களில் ஜாதி, மதம் பற்றிப் பதிவு செய்ய விரும்பாதோர் அதைக் குறிப்பிடும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள்.
4. ஆனால் அதே சமயத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் இது கட்டாய நடைமுறையாகப் பின் பற்றப்பட வேண்டும் என்று ஆணையிட எங்களால் இயலாது; ஏனெனில் சிலர் அதைக் குறிப் பிட ஆர்வம் காட்டலாம். அரசாணையைக் கவனத்தில் கொண்டு பார்த்து ஒருவர் ஜாதி மதப் பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்களிக்கப்படலாம். அதே நேரத்தில் இதனைக் கட்டாயப் படுத்தமுடியாது.
5. இவ்வகையில் நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப் படுகிறது. செலவுத் தொகை இல்லை.
மொழியாக்கம்:
திருவேங்கடம் அரங்கநாதன்
நன்றி: சட்டக்கதிர், செப்டம்பர் 2017
- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17