Monday, 10 October 2016

பாரதிப் பாடல் புரட்டு


10.02.1929 - குடிஅரசிலிருந்து...
பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணம்
பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரசு பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண்ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி  ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொரு வரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.
அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்ம வர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியை காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத் தின் பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.
அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில்  உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது.
இது யாவ ருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்தி பதிக்கப்பட்டிருக் கின்றதாம். இம்மாதிரி யாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டி யதாகவே இருக்கின்றன.
இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப் படுகின்றது.
நிற்க; இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப் பட்ட பொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர் களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக் கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரிய மல்ல என்றாலும் நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக் கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.
-விடுதலை,30.7.16

‘‘முற்றிலும் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமம்’’

திராவிடர் கழகக் கொள்கையை ஏற்ற பெரியார் கிராமமான திருவிளையாட்டத்திற்கு
‘‘முற்றிலும் தீண்டாமை  ஒழிக்கப்பட்ட கிராமம்’’ என்ற அரசு விருது!

சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆ.சவுரி ராசனை நினைவு கூர்வோம்!
நாகை, ஜூலை 27 “தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராம மாக”திருவிளையாட்டம்,தமி ழக அரசால் அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அதன்படி 2013-2014 ஆம் ஆண்டிற்கான விருதையும், பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கி பாராட்டியுள்ளார்.

இது தந்தைபெரியார் கொள்கையை வரித்துக் கொண்ட பெரியார் கிராமம் என்று பெயர் பெற்ற, புகழ் பெற்ற கிராமம் ஆகும்.

எந்த வித ஜாதி சச்சரவு களுக்கும் இடம் தராமல் அனைத்து தரப்பினரும் சகோ தரத்துவத்துடன் பழகும் கிரா மமாக, பொதுச் சுடுகாடு, பொதுக் கிணறு, கோயில் என எந்தப் பாகுபாடுமின்றி எல்லோரும் புழங்கும் கிராம மாக திருவிளையாட்டம் இருந்து வருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண் டுக்கும் மேலாக, தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக விளங்கும் இந்த ஊர், நாகை மாவட்டத்தில் (பழைய தஞ்சை மாவட்டம்) தந்தை பெரியார் அவர்களின் பாடிவீடான மயிலாடுதுறைக்கு அருகிலே உள்ளது.

இதற்குமுன் 1996-1997 ஆம் ஆண்டிலும் தீண் டாமை கடைப்பிடிக்காதகிரா மமாக இந்தக் கிராமம் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தக் கிராமம் இப்படிச் சிறப்பாக காட்சி தருவதற்கு  மூலகாரணமாக இருந்தவர்  தந்தை பெரியாரின் தொண்ட ராக, அணுக்க சீடராக விளங் கிய திருவிளையாட்டம் ஆ.சவுரிராஜன் (பிள்ளை) அவர்கள்.  திராவிடர் கழகத்தின் தீவிர  உறுப்பினராக, மயிலாடு துறை வட்ட திராவிடர்கழக தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அந்த சீலரின் சிறப்பான தொண்டு.
திருவிளையாட்டம் ஊராட் சித் தலைவராக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றிய திரு.ஆ.சவுரிராஜன் அவர் கள். சுமார் அறுபதுஆண்டு களுக்கு முன்னரே திருவிளை யாட்டத்தில் மய்யப்பகுதியில், ஜாதி இந்துக்கள் என்று சொல் லப்பட்டவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்த, பெரும் வருமானம் ஈட்டித்தந்த, தனக் குச் சொந்தமான பழத்தோப்பை அழித்து அங்கே  வீடுகள் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை குடியமர்த்தியவர் .

ஜாதிக்கு ஒரு சுடுகாடு எனும் நிலை இன்றைக் கும் முழுமையாக நீங்கிய பாடில்லை. ஆனால்அனைத்து ஜாதி மக்களும் ஒரே சுடு காட்டைப் பயன்படுத்தும் வழக்கத்தை அந்தக்காலத் திலேயே துணிந்து செயல் படுத்தி சாதித்துக் காட்டியவர். ஜாதிப்பாகுபாடு இல்லாமல் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது வீட்டை ஆரம்பப் பாடசாலையாகமாற் றினார். பின்னாளில்தனக்கு சொந்தமான மற்றொரு இடத் தில் புதிய உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார். தற்போது அப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் அவரது கல்விப் பணியைப் பாராட்டி அவரிடம் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வும் உண்டு.
1940 ஆம் ஆண்டின் பிற் பகுதியில் மயிலாடுதுறையில் சில ஆண்டுகள் வசித்தார். அவரோடு பழகிய பெரியார் தொண்டர்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் மறந்தும் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளுக்கு செல்ல மாட்டார் என்றும் தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணமே செய்து வைத்தார் என்றும் கூறுவர்.

ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர்
1957 இல் ஜாதி ஒழிப்பிற் காக தந்தை பெரியார்அவர் கள் நடத்திய சட்ட எரிப் புப்போராட்டத்தில்திரு விளையாட்டத்தை உள்ளடக் கிய செம்பனார்கோவில் பகு தியிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கலந்து கொண்டு தானும் சிறை சென்றார்.

ஊராட்சி மன்றத்தேர்த லில் இப்போதுநடைபெறும் அரசியல் சித்து விளையாட்டு கள் அப்போதும் நடப்ப துண்டு. பிரபல அரசியல் கட்சிகளெல்லாம் தேர்தல் நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களை கடத்திமறை விடத்தில் இருத்தும் பட்சத்தில் அந்தப் பகுதியில் அப்படி கடத்தப்படாத,கிட்டேநெருங் கக்கூட முடியாத இரண்டு தலைவர்கள் உண்டென்று சொன்னால்,ஒருவர்திருவிளை யாட்டம்ஊராட்சிமன்றத் தலைவர்ஆ.சவுரி ராஜன் மற்றொருவர்திரு விளையாட்டத்தைஅடுத்த பரசலூர்ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.பி.கோதண்ட பாணி. அதற்குக்காரணம் அவர்கள் தங்கள் இயக்கத் திற்கும், கொள்கைக்கும் கட் டுப்பட்டவர்கள் என்பதே.  இருவருமேதிராவிடர்கழகத் தொண்டர்கள், பொறுப்பாளர் கள் ஆயிற்றே!

நினைவு மண்டபத்தைத் திறந்தார் தமிழர் தலைவர்

திரு.ஆ.சவுரிராஜன் அவர்கள் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் பிறந்து, தன் வாழ்நாளில் பெரும் தொண்டாற்றி, தனது 81 ஆம் வயதில் 18.3.1973 அன்று  இயற்கை எய்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு  18.3.1974 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் அன்றையப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவிளையாட்டத்தில் அவரது நினைவு மண்டபத்தை திறந்து வைத்து அவரது பெரும் பணியைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

தந்தை பெரியாரைஅவ் வூருக்கு அழைத்து சவுரிராசனை அய்யாவுக்கு அருகில் அமர்த்தி ஊர்வலம் நடத்தினர் அவ்வூர் மக்கள்.

ஒப்பற்றப் பணி 


திருவிளையாட்டம் போன்ற கிராமங்கள் இன்ற ளவும் ஜாதிப் பாகுபாடின்றி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக ஒளிர்விட்டுக் கொண்டிருப்பது  திராவிடர் இயக்கத்தின் தன் னிகரில்லா தொண்டு, அய்யா சவுரிராஜன் போன்ற பெரியார் தொண்டர்களின் ஒப்பற்றப் பணி  ஆகியவற்றின் விளைச் சல் அல்லவா?

தகவல்:
விடுதலை செய்தியாளர் கி.தளபதிராஜ்
-விடுதலை,27.7.16

நாளந்தா பல்கலைக் கழகம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு


புதுடில்லி, ஜூலை 16 யுனெஸ்கோ எனப்படும் அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக புராதன குழு கூட்டம் இஸ்தான்புல் நகரில் கூடியது.
சீனா, ஈரான், மைக்ரோநேசியா ஆகிய நாடுகளில் உள்ள பாரம்பரிய தளங்களோடு, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகமும் உலகின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டது.
இது தொடர்பாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளந்தா பல்கலைக் கழகம் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் பழமையான தளமாகும். நாளந்தா அமைப்பானது 800 ஆண்டுகளுக்கு மேலாக அறிவை போதித்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மய்யப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. நாளந்தா பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக் கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197 இல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற் றாக அழிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறி ஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள் ளார்கள். கவுதம புத்தர் இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்களும் வழங் கப்பட்டிருந்தன.
-விடுதலை,16.7.16