சென்னை, மே 21 ‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார். பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அமையவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நெறியாளர்: பெரியார் எந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்?
தமிழர் தலைவர்: ‘‘நீ உருப்படுவியா?’’ என்று மக னைப் பார்த்து அப்பா கேட்பார். ‘‘நீ உருப்படவே மாட்டாய்; அதனால், நீ வீட்டை விட்டுப் போ’’ என்று கோபமாகக்கூட அப்பா கத்துவார்.
அதனால் அப்பா, மகனை வீட்டை விட்டு வெளி யேற்றுகிறார் என்று அர்த்தமல்ல.
அதுபோன்றுதான் தந்தை பெரியாரும்!
அறிவியல் காலத்திற்கேற்ப
மொழி வளர்ச்சியடைவேண்டும்!
எதிலும் வளர்ச்சிப் பற்றைத்தான் விரும்புவார் அவர். தமிழ் என்ற மொழியை வைத்துக்கொண்டு பழம்பெருமையைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இது அறிவியல் காலம். அதற்கேற்றாற்போல் மொழி வளர்ச்சியடையவேண்டும்.
‘‘காட்டுமிராண்டிக் காலத்து மொழி’’ என்றுதான் பெரியார் சொன்னார்.
இப்படி அவர் சொன்னதை வைத்துதான், புரியாத வர்கள் ஏதோ பெரிதாக விளையாடுகிறார்கள்.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்.
‘‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்று தமிழ்மொழியைச் சொல்கிறார்கள். இதைச் சொல்லாதவர்கள் உண்டா?
தமிழ் மொழிக்குப் பெருமை என்று, இதைத்தான் சொல்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
‘‘கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’’ என்றால், அது எந்தக் காலம்?
ஆதிகாலம்தானே!
பொதுமக்களுக்கு விளங்கும்படியாக பெரியார் சொன்னார்!
பச்சையாக, பொதுமக்களுக்கு விளங்கும்படியாக காட்டுமிராண்டிக் காலம் என்று சொல்கிறார் பெரியார்.
ஆகவே, காட்டுமிராண்டிக்காலத்துத் தமிழ் என்றால், பழைமையான தமிழ் என்று அர்த்தம். அது வரலாற்றுப் பெருமைக்கு வேண்டுமானால் பயன்படும்.
பழைய கட்டடம் என்பதுதான் பெரியார் சொன்ன உதாரணம். அப்படியென்றால், பழைய கட்டடத்தை நெருங்குவதற்குப் பயப்படுவார்கள் அல்லவா!
பழைய கட்டடத்தையெல்லாம் இப்போது புதுப்பிக்கிறார்கள். பழைய கட்டடத்திற்கு (Heritage Building) எல்லாம் ஒரு பெயர் வைத்திருக்கிறோம். அதைப் பாதுகாக்கவேண்டும் என்றும் சொல்கிறோம். அதைப் பாதுகாப்பது மட்டும் போதாது. அதனை சீரமைப்பதும் மிகவும் முக்கியமாகும்.
அதுபோன்று, தமிழ் மொழி வளர்ச்சியடைவேண்டும் என்று தந்தை பெரியார் நினைத்தார்.
மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்!
‘‘என் பார்வையில், மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும்’’ என்றார் பெரியார்.
பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கின்ற நேரத்தில், மொழியை வைத்துத்தான் நாம் போராடவேண்டி இருக்கும். அந்த மொழிப் போராட்டமென்பதும் பண்பாட்டுப் பாதுகாப்புக்குரியதாக அது அமைய வேண்டும்.
இப்போது ஏன் ரபேல் விமானங்களை வாங்குகி றார்கள்? இவர்கள் என்னதான் இராமனைக் கொண்டா டினாலும், இராமனுடைய ஆயுதம் வில். அதனையே பாகிஸ்தான்மீது ஏவலாம் என்று சொல்வார்களா? சொல்லவே மாட்டார்கள்.
கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?
பழங்கருவிகளான வேல், வில், அம்பு எல்லாவற்றை யும் எங்கள் ஆதிகாலத்து மனிதர்கள் பயன்படுத்திப் போர் செய்தார்கள் என்று வரலாற்றுப் பெருமையாகச் சொல்லலாம். அப்படி சொல்வதனால், அதைக் கொச்சைப்படுத்துகிறோம் என்று அர்த்தமாகுமா?
முதலில் கண்டுபிடித்தது வேல்தான். அதற்குப் பிறகுதான் வில் கண்டுபிடிக்கப்பட்டது. தூரத்தில் ஏதாவது மிருகம் வந்தால், அதை நோக்கி எறியப்பட்டது தான் வேல் என்ற ஆயுதம்.
இரா.பி.சேதுப்பிள்ளை
இரா.பி.சேதுப்பிள்ளை, ஓர் அருமையான புத்த கத்தை எழுதியிருக்கிறார் ‘‘வேலும் – வில்லும்’’ என்ற தலைப்பில்.
இரும்புக் கம்பியை எடுத்து பழுக்க நெருப்பில் காய்ச்சி வார்க்கப்பட்டதுதான் வேல். மிருகங்களை நோக்கி எறியப் பயன்பட்டது.
ஆனால், வில் என்பதைக் குறி வைத்துத் தூக்கி எறிய முடியாது. பகுத்தறிவின் காரணமாக, யோசித்தன் விளைவாக, வில்லை வைத்து எறிவதற்காக ஒரு நாண் கண்டுபிடித்தான். ‘அதுதான் புராண காலத்து ஆயுதம். இந்தக் காலத்திலேயும் அதையே பயன்படுத்தவேண்டும். நம் கடவுள்களும் அதையே பயன்படுத்தினார்கள். ஆகவே, அதனையே நாம் இன்றைக்கும் பயன்படுத்த வேண்டும்’ என்று சொன்னால், யாரும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இன்றைக்கு அறிவியலின் கண்டுபிடிப்பான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தேவைப்படுகிறது.
எதிரி என்ன ஆயுதம் எடுக்கிறான் என்பதைப் பார்த்து, நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.
ஆகவே, மொழி என்பது ஒரு போர்க் கருவியாக இருக்கவேண்டும். மொழி என்பது அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும். சாணைத் தீட்டப்பட வேண்டும் என்பதற்காகப் பெரியார், ‘‘தமிழ் மொழி இன்ன மும் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கக்கூடாது; வளர்ச்சி அடையவேண்டும்’’ என்று சொன்னார்.
தமிழ் வரலாற்றில் மொழி அறிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். பெரியார் செய்த அளவிற்கு, வேறு யாரும் தொண்டு செய்யவில்லை. உதாரணம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.
ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்;
தமிழ் எழுத்துகள் 247
கணினியில், ஆங்கில எழுத்துகள் வந்தாகிவிட்டது. ஆனால், தமிழ் எழுத்துகள் வர முடியவில்லை. நாம் கஷ்டப்பட்டு, தட்டச்சில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுவதைக் கண்டுபிடித்தோம். ஆனாலும், தவறு வராமல் இருக்கவே முடியாது. காரணம் என்ன வென்றால், ஆங்கிலம் 26 எழுத்துகள்தான்.ஆனால், தமிழ் எழுத்துகள் 247.
தந்தை பெரியார் அவர்கள், மொழியறிஞர் அல்ல; பகுத்தறிவுவாதி. எனவே, பயன் கருதி எதையும் செய்யவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு மொழி பயன்படவேண்டும். பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால், அவர்களுடைய மனதில் எளிதில் பதியவேண்டும் என்று நினைத்தார்.
இன்றைக்குக் கணினியில் தட்டச்சு தமிழ் எழுத்துகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட்டன.
ஆங்கிலத்தில் பதில் அளிக்கவேண்டுமானாலும், தமிழ் மொழியில் பதிலளிக்கவேண்டுமானாலும், மிக வும் எளிமையாக கைத்தொலைப்பேசியில் பதிவிடு கிறார்கள்.
எழுத்துகளும் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன!
‘நன்றி’ என்பதற்கு, மூன்று எழுத்துகள்தான். ஆனால், ஒரு ‘கும்பிடு’ குறியீட்டைப் போட்டு விடுகிறார்கள். நன்றி என்பதை இப்படி மிக எளிமையாக தட்டச்சு செய்துவிடுகிறார்கள். எழுத்துகளும் எளிமை யாக்கப்பட்டு இருக்கின்றன.
அவை யாருடைய எழுத்துகள்?
பெரியாருடைய எழுத்துகள்.
பெரியார் நூற்றாண்டில்,
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்!
பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடை முறைக்குக் கொண்டுவந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உரியதாகும். பெரியாருடைய நூற்றாண்டில் அதனை செய்தார்.
சிங்கப்பூர் உள்பட உலகத்தில் உள்ள தமிழர் வாழும் அத்துணை நாடுகளிலும் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்திற்குத் தந்தை பெரியார் அளவிற்குச் செய்தவர்கள் வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
எத்தனையோ தமிழறிஞர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பதவுரை, பொழிப்புரை போன்றவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், மொழி வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்கு என்ன?
தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள், பெரியாருக்குத் தலைசிறந்த மாணாக்கர்கள் போல, சீடர்களைப்போல தோழமை உணர்வோடு இருந்தனர்.
- கட்டுரையின் ஒரு பகுதி
-விடுதலை நாளேடு, 21.5.25