Tuesday, 22 July 2025

பெரியார், தமிழர்கள் என முன்னிறுத்தாமல், திராவிடர்கள் என்று ஏன் முன்னிறுத்தினார்?

 

பெரியார், தமிழர்கள் என முன்னிறுத்தாமல், திராவிடர்கள் என்று ஏன் முன்னிறுத்தினார்?

நெறியாளர்: பெரியார், திராவிடம், திராவிடர்கள் என்பதைப் பல பின்னணிக் காரணங்களோடு சொல்லி யிருக்கிறார். ஆனால், இன்றைக்குப் பெரியாரைப்பற்றி விமர்சிக்கின்றவர்கள், பெரியார், தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதினால்தான், தமிழர்கள் என முன்னிறுத்தாமல், திராவிடர்கள் என்று முன்னிறுத்தினார் என்று சொல்கிறார்களே?

மனுநீதியிலேயே
திராவிடம் என்ற சொல் இருக்கிறது!

தமிழர் தலைவர்: இது தவறானது. பாரதிதாசனுக்குத் தாய்மொழி எது?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடும்படி தமிழ்நாடு அரசு சார்பாக அறிக்கை விடப்பட்டு இருக்கிறது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஆந்திராவில் இருந்து வந்தவரா?

கலைஞர் என்ன தெலங்கானாவில் இருந்து வந்தவரா?

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை தெலுங்கு நாட்டிலிருந்து வந்தவரா?

மொழி வாழ்த்துப் பாடுகிறோமே, அப்போது எல்லோரும் எழுந்து நிற்கின்றோமே, அந்தப் பாடலை எழுதியவர் யார்?

பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்.

அவர் ஏன் “திராவிடம்’’ என்று சொன்னார்?

அவர் மட்டுமா, திராவிடம் என்று சொன்னார்? மனுநீதியிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது.

மனுநீதி 10 ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது.

‘திராவிடம் என்பதை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டு வந்தார்கள்;  கால்டுவெல்தான் அதனைச் செய்தார்; இங்கே இருப்பவர்கள் அதனைப் பின்பற்றினார்கள்’ என்று திட்டமிட்ட பொய்ப் பிரச்சா ரத்தைச் செய்தனர். பதவி உயரத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கு கிறாரே ஆளுநர், அவர் உள்பட, ஆர்.எஸ்.எஸ். உள்பட, இதுபோன்ற தவறான பிரச்சாரத்தைச் செய்கின்றனர்.

பெரியார் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்கிறார்கள்!

பெரியாருடைய பிம்பத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக, பெரியார் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்கிறார்கள். அல்லது சொன்னதைத் திரிபுவாதம் செய்கிறார்கள்; ஒட்டுகிறார்கள், வெட்டு கிறார்கள்.

ஆனால், ஒருபோதும் அவர்களால் அசைத்துப் பார்க்க முடியாது.

பெரியார் உடலால் மறைந்து அரை நூற்றாண்டு தாண்டியாகிவிட்டது. இன்னமும் பெரியார்தான் பேசப்படுகின்ற பொருளாக இருக்கிறார்!

புத்தகக் காட்சிகளில் பெரியார்பற்றிய புத்த கங்கள்தான் மிக அதிகமாக விற்பனையாகின்றன.

அதைக் கண்டு பொறுக்க முடியாதவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெரியார் குறித்து பல்வேறு அவதூறுகளைப் பரப்புகின்றனர்.

- ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டியின் ஒரு பகுதி

-விடுதலை நாளேடு, 21.5.25

No comments:

Post a Comment