இந்துமத சாஸ்திரங்கள் பின்பற்றப் படாததால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாதவையே என்று தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் செட்டியார் என்ற (1953) பிரபல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின் 1967இல் இந்து திருமணச் சட்டம் 1967(தமிழ்நாடு – திருத்தம்)இன் கீழ் சுயமரியாதைத் திருமணச்சட்டம் சட்டமன்ற அவையிலும், பிறகு மேலவையிலும் நிறைவேறியது. இந்தச் சட்டப்படி சமீபத்தில் இளவரசன் என்னும் இளைஞர் சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆனால், அது செல்லாது என்றும், குற்றம் என்றும் அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏறத்தாழ 56 ஆண்டுகளுக்குப்பின் தன் திருமணத்திற்கு இப்படியொரு முரணான தீர்ப்பு வழங்கப்படும் என்று இளவரசன் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.
இந்துக்களிடையே இப்படிப்பட்ட மாற்றங்கள் நிறைந்த, சடங்குகள் விலக்கப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதை ஆதரிக்கும் வகையில் 1953இல் சட்டம் எதுவும் இல்லாமலிருந்தது. சுயமரியாதைத் திருமண எதிர்ப்புக்கு அந்தக் காலக்கட்டத்தில் கூறப்பட்ட காரணங்கள் இன்று கூறப்படும் காரணங்களிலிருந்து மாறுபட்டு இருந்ததை மறுப்பதற்கில்லை. அன்று இதே சென்னையில் சட்டம் சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை.
“ஒரு சட்டபூர்வமான இந்து திருமணத்திற்கு ஒரு புரோகிதர், சப்தபதி போன்ற சமயச் சடங்குகளை அனுசரித்து நடத்தி வைப்பது அவசியம்.’’ 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட்- 28 அன்று இப்படித்தான் சொன்னார்கள் நீதிபதிகள் – மனுஸ் மிருதியை மேற்கோளாகக் காண்பித்து, சப்தபதி என்று அவர்கள் குறிப்பிட்டது ஏழடி எடுத்து வைக்கும் கரு சடங்கை.
பலர் அறிய இந்துக்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டால் அது செல்லாது என்று அறிவித்தார்கள் நீதிபதிகள். அத்தகைய திருமணங்கள் இந்து மதச்சட்டம் அங்கீகரிக்கும் திருமணங்களுக்கு நேர்மாறானவை என்றும் கூறினார்கள் அவர்கள். சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் சட்டப்பூர்வமற்ற குழந்தைகளே என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
1958ஆம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கு குறிப்பிடத்தக்கது. ராஜாத்தி என்ற பெண் செல்லையா என்பவரை சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அவர் அந்தப் பெண்ணை கைவிட்டுவிட்டார். தாம்பத்திய உறவு உரிமை கோரி ராஜாத்தி திருச்சி நீதிமன்றத்தின் உதவியை நாடினார். 1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டத்தின்படி அவருக்கு நடந்த திருமணம் செல்லாது என்று கூறி தாம்பத்திய வாழ்க்கை உரிமையளிக்க அந்த மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்தப் பெண்ணிற்கு நீதி வழங்குவதை தவிர்த்ததோடு விடாமல், சுயமரியாதை இயக்கத்தையே அந்த நீதிமன்றம் குறை கூறியுள்ளது. சட்டவிரோதமான ஒரு திருமணத்தால் அந்தப் பெண்ணுக்கு அந்த அவலநிலை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டியது. அதனால் தான் நீதித்துறை அவருக்கு தாம்பத்திய வாழ்க்கை உரிமை அளிக்க முடியாமல் போயிற்று என்றும் விளக்கமளித்தது.
சீர்திருத்தத் திருமணங்கள் அடிப் படையில் கலப்புத் திருமணங்களே (ஜாதி மறுப்புத் திருமணங்களே) ஆகும். அவற்றின் நோக்கம் பெண்ணுரிமைக் காப்பு. ஒருவரையொருவர் மனம் நம்பி ஏற்றுக்கொண்டாலே போதும். சடங்குகளோ சம்பிரதாயங்களோ தேவையில்லை. இப்படிப்பட்ட ஒரு நவீனக் கொளகையையும் புதிய சமூகப் பிரக்ஞையையும் ஆதரிப்பதே சுயமரியாதைத் திருமணங்களின் நோக்கம். ஆனால் குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த விளக்கங்கள் ஒரு நல்ல சீர்திருத்தத்திற்கு தடைவிதித்தது போலவே இருந்தன.
மேற்கண்ட தீர்ப்பும் அதுபோன்ற வேறு சில தவறான கருத்துகளும் பார்ப்பனிய இந்துக்களுக்கு உற்சாகம் அளித்துவிட்டன. அவர்கள் ஒன்றுகூடி சுயமரியாதைத் திருமண முறையையே கேவலப்படுத்தத் துவங்கினர். அந்த முறைப்படி மணந்துகொண்ட பெண்களுக்கு விலைமாதர் பட்டம் சூட்டினர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் முறை தவறிப் பிறந்த குழந்தைகள் என்று முத்திரை குத்தி அவமானப்படுத்தினர்.
திராவிடர் கொள்கைகள் எப்போதுமே பார்ப்பனிய திருமண முறைகளையும் வைதிக சடங்குகளையும் எதிர்த்து அவற்றுக்கு மாற்றாக ஒரு சீர்திருத்த முறையைப் பரப்ப முயன்று போராடி வந்துள்ளன. ஆனால் நீதித்துறையைச் சார்ந்த சிலர் ஆதிக்கவாதிகள் பின்பற்றி வந்துள்ள இந்து திருமண முறைகளை ஆதரித்து, மரபு சார்ந்த பழக்கவழக்கங்களை பாதுகாத்து வந்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. பழமைவாதிகளுக்கு நீதித்துறையே பக்கபலமாக இருந்துள்ளது வேதனைக்குரிய விஷயம். தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் என்னும் புரட்சிகரமான சீர்திருத்தம் இப்படி பல இடையூறுகளைக் கடந்து வந்துள்ளது.
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை
பாரம்பரிய இந்து திருமணங்கள், பண்டைய மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து நடக்கும் இந்து திருமணங்கள், முக்கியமாக பார்ப்பனியத் திருமணங்கள், யாவுமே உயர்நிலை ஆதிக்கத்தையும், ஆணாதிக்கப் போக்கையுமே பிரதிபலிக்கின்றன என்பதே சுயமரியாதை இயக்கத்தின் வாதங்களில் முக்கியமான ஒன்று. எந்த விதமான மதச்சடங்குகளும் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் தாம்பத்திய உறவுக்கான பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. அது என்றுமே ரத்தாக முடியாததாகவும் இருக்கவேண்டும் என்றும் இயக்கம் எதிர்பார்க்கிறது.
இருதார வாழ்க்கை முறை இந்து ஆண்கள் மத்தியில் பரவலாக நடை முறையில் உள்ளது. எனவே எல்லா திருமணங்களும் திருமணப் பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. பெண்களுக்கு விவாகரத்து, மறுமணம் இரண்டிற்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும், சொத்துரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நீதிமன்றமோ சுயமரியாதை திருமணமே செல்லாது என்றுஅறிவித்ததன்மூலம் ராஜாத்திக்கு தாம்பத்திய வாழ்க்கை உரிமையை அளிக்க மறுத்துள்ளது.
1969ஆம் ஆண்டு ராஜாத்தியின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1967ஆம் ஆண்டின் இந்து திருமண விதி சட்டத்திருத்தத்தின்படி அந்தப் பெண்ணிற்கு நியாயம் வழங்கப்பட்டது. சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமானது என்று அங்கீகரித்த அந்தத் திருத்தத்தால், ராஜாத்திக்கு தாம்பத்திய வாழ்க்கை உரிமை வெற்றிகரமாக கிடைத்தது.
ஒரு போராட்டம்
அந்தச் சட்டம் இயற்றப்பட்டபின் சென்னை மாகாணத்திலும், அகில இந்திய அளவிலும் திராவிட இயக்கம் நீண்ட காலம் போராட நேர்ந்தது. இந்து நெறிமுறைச் சட்டம் உருவான காலக்கட்டத்தில் போராட்டம் துவங்கியது. பி.என்.ராவ் தலைமையில் இயங்கிவந்த இந்து சட்டக்குழு 1944இல், மாகாணங்கள் அனைத்திலும் ஆய்வு செய்து ஆதாரங்கள் திரட்டி அந்த நெறிமுறைச் சட்டத்தை உருவாக்கிற்று. வாய்வார்த்தைகள் வாயிலாகவும், ஒப்பந்தங்கள் வாயிலாகவும் அரசியல் தலைவர்களும் சமூகத் தன்னார்வலர்களும் தேவையான விவரங்களைத் திரட்டித் தந்தனர். அவற்றைச் சேகரித்துக் கொண்ட சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் சட்டப்பூர்வமான மகளிர் உரிமைகளைக் கோரி போராடினர். இந்து சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே போதாது என்றவர்கள் இந்துக்களின் பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்கும் மேலாக, பெண்களுக்கு சட்டப்படி எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாகப் போராடினர்.
‘இந்து’ என்ற சொல்லின் வரையறை புரிந்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக இல்லை என்று கருதினார் சுயமரியாதை இயக்கத் தோழர்களுள் ஒருவரான குஞ்சிதம் குருசாமி. தங்களை ‘இந்துக்கள்’ என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாதவர்களையும் உள்ளடக்கியதாக அந்தச் சொல் இல்லை என்று வாதிட்டார் அவர். புதிய இந்து நெறிமுறைச் சட்டம் மதங்கள் சாரா திருமணங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர். 1947ஆம் ஆண்டின் ராவ் ஆணையத்தின் அறிக்கை அவருடைய கோரிக்கைகளை ஏற்கவில்லை. அந்த ஆணையம் வீரசைவ, பிரம்ம சமாஜ், ஆரிய சமாஜ் மற்றும் பிரார்த்தனா சமாஜ் முறை திருமணங்களுக்கு ஒப்புதல் அளித்து அங்கீகரித்தது. அந்த வகையான சீர்திருத்தத் திருமணங்களுக்கு மட்டுமே 1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டம் சட்டபூர்வமானவை என்ற அந்தஸ்தை வழங்கியது.
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டவிதியின் பிரிவு எண் 7 இந்துமதச் சடங்குகளுக்கும் சம்பிரதாய நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. தாலி கட்டும் சடங்கு போன்றவற்றுக்கு அது ஒப்புதல் அளித்தது. ஏழு அடிகள் எடுத்து வைக்கும் ‘சப்தபதி’ முறையும் அங்கீகரிக்கப்பட்டது. மற்றபடி புரோகிதர் அற்ற ஒப்பந்த முறை திருமணங்களுக்கும் சடங்குகள் மறுத்த திருமணங்களுக்கும் சட்டவிதியின் ஏழாம் பிரிவு ஒப்புதல் அளிக்கவில்லை.
நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஒன்றை மட்டும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. சுயமரியாதைத் திருமணங்கள் 1954இன் சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே அது. இந்தச் சட்ட விதி நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தம்பதிகளின் சொத்துரிமை பற்றி அதிகம் சிந்திக்கப்படவில்லை. இந்து கூட்டுக்குடும்ப அமைப்பை விட்டு விலகுவதையும் பாரம்பரிய சொத்துரிமை மறுக்கப்படுவதையும் தான் இது உணர்த்திற்று.
சிதம்பரம் செட்டியார் எதிர் தெய்வானை ஆச்சி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்திருந்த சட்டமன்றத்திற்கு கீழ்கண்டவாறு அறிவுறுத்தியிருந்தது:
“சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் பூர்வமாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சடங்குகள் தவிர்த்து திருமணம் செய்துகொண்டவர்களின் சொத்துரிமை காக்கப்பட வேண்டும். சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட இந்துக்கள் பாதிக்கப்படக்கூடாது.’’
1953ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ‘இந்து பழக்கவழக்கங்கள் மீறிய திருமணம் பதிவு மசோதா 1954’ என்ற பெயரில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதே அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டு பின்னர் அதை ஒரேயடியாக நிராகரிக்கவும் செய்தது. சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஒன்றே சுயமரியாதைத் திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு தீர்வு காண போதுமானது என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.
1959ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.எம். அண்ணாமலை ‘சென்னை சுயமரியாதைத் திருமண அங்கீகார’ மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த காலத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களையும் செல்லுபடியானவை என்று அறிவிக்கவைப்பதே அந்த மசோதாவின் நோக்கமாக இருந்தது. சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியினரும் கருத்து தெரிவிக்கவில்லை. அந்த மசோதா நிறைவேறாமல் தோல்வியுற்றது.
1965இல் தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் எஸ். மாதவன் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்கு இந்து சட்டப்படி அங்கீகாரம் கிடைக்க வழிசெய்யும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா அது. செல்லுபடியாகும் இந்துத் திருமணங்கள் என்று அவற்றுக்கு ஒப்புதல் வழங்கச் செய்யவே அது தாக்கல் செய்யப்பட்டது.
சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டால், மணந்துகொண்ட பெண்களுக்கு தீங்கிழைத்தது போலாகிவிடும் என்று தி.மு.க. வாதிட்டது. சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தால் சுயமரியாதை முறைப்படி மணந்துகொண்ட மகளிருக்கு விவாகரத்து உரிமையும் கிடைக்கும் என்று அவர்கள் கூறினர். ஆண்களின் இருதாரக் குற்றங்கள் தடுக்கப்படவும் வழிபிறக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் அந்த மசோதாவால் எதிர்பார்த்த நற்பயன் எதுவும் ஏற்படவில்லை. காரணம்- தேர்தல் தோல்வி.
1967இல் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் பிரிவு 7ஏ என்று அந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டது. ‘இந்து திருமணச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 1967 என்ற பெயரில் இந்தச் சட்டம், சடங்குகள் தவிர்த்த இந்துத் திருமணங்கள் அனைத்தையும் செல்லுபடியானவை என்று ஒப்புதல் பெற்றுத் தந்தது. இந்து திருமணங்களுக்கும் இந்தச் சட்டம் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கெனவே கடந்த காலத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியானவையாக அறிவிக்கப்பட்டது.
தடைகளும் இடையூறுகளும்
இன்னும் உள்ளன
நீதித்துறை நீண்டகாலமாக மேற்கண்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்தும் பல்வேறு விதமான விளக்கங்கள் அளித்தும் வந்துள்ளது. சடங்குகள் தவிர்த்த திருமணங்களையும், இருசாராரும் முழு சம்மதத்துடன் நடத்திக்கொள்ளும் கலப்புத் திருமணங்களையும் (ஜாதி மறுப்பு) தடுப்பதே ஒன்றிய அரசின் நோக்கம். சமீப காலத்தில் இது பல விதங்களில் தெளிவாகியுள்ளது.
இதற்கு இரு உதாரணங்கள் கூறலாம். ஒன்றிய அரசின் சமூகநீதித்துறை மற்றும் அதிகாரப் பங்களிப்பு அமைச்சகம் கலப்புத் திருமணம் (ஜாதி மறுப்பு) செய்துகொண்ட இணையர்களுக்கு பரிசுகளும் விருது களும் வழங்கி வந்தது. 2017ஆம் ஆண்டில் அது சட்டப் பிரிவு எண் 7அய் ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழ்நாட்டிலிருந்து பெறப்பட்ட கலப்புத் திருமண இணையர்களின் மனுக்களை மட்டும் நிராகரித்துவிட்டது. அந்தத் திருமணங்கள் இந்து திருமணச்சட்டம் 1955இன்படி முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. கருத்தை மாற்றிக்கொள்ள பிடிவாதமாக மறுத்து வந்த ஒன்றிய அரசு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விளக்கமளித்து தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. இது முதல் உதாரணம்.
இரண்டாவது உதாரணம்
கடந்த மாதம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நினைவுபடுத்த நேர்ந்தது- சுயமரியாதைத் திருமணங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து. அவை மதச் சடங்குகள் ஏதுமின்றி பொது இடங்களில் கொண்டாட்டங்களின்றி நடந்தாலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வேறு சிலர் மத்தியில் அவை நடப்பதாகவும் வாழ்விணை ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு சட்டப்பூர்வ மகளிர் நல சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளதை எவரும் மறந்துவிடக்கூடாது. சமுதாய மாற்றங்களை ஆதரிக்கும் விதமான கண்ணோட்டத்தில் பல தீர்ப்புகள் உள்ளன. திருமணம் என்ற விஷயத்தில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் உரிமைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் வேறு எந்த நீதிமன்றத்திலும் இத்தகைய புதிய பார்வை இருப்பதாகத் தோன்றவில்லை. சமீபத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் இந்து திருமணச் சட்ட விதியின்படி நீதிமன்ற அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வு. திருமணச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் – 29.09.2023