சென்னை,அக்.20- திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (19.10.2023) மாலை நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இவ்விழாவை இணைந்து நடத்தியது.
தந்தைபெரியார் கொள்கை வழியில், தொண்டாற்றிய வர்களில் பலருடைய நூற்றாண்டு விழாக்களை அடை யாளப்படுத்தி திராவிடர் கழகம் கொண்டாடி வருகிறது.
நூறு ஆண்டுகள் கடந்தாலும் தந்தை பெரியார் கொள்கைவழியில் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களின் வழித்தோன்றல்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு சிறப்பு செய்வதுடன், அம்மாவீரர்களின் தொண்டுக்கு தமிழினத்தின் சார்பில் நன்றிசெலுத்தும் பெருவிழாவாக நூற்றாண்டு விழாக்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
அந்த வகையில், திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் ஆ.வெங்க டேசன் வரவேற்புரையாற்றினார்.
கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
டாக்டர் சத்தியவாணிமுத்து படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் சிறப்புரை
திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.
படத்திறப்பில் திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரமுகி சத்தியவாணிமுத்து, பேத்தி, கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்தியர் உள்ளிட்ட குருதிக் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
விழாத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு நன்றிப்பெருக்குடன் சித்ரமுகி சத்தியவாணிமுத்து பயனாடை அளித்தார்.
டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழாவில் அவர் மகள் சித்ரமுகி சத்தியவாணிமுத்துவுக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
நினைவுரை ஆற்றிய ‘பாசறை முரசு’ மு.பாலன், வழக் குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
விழா நிறைவாக விழாவின் தலைவராகிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இது நூற்றாண்டு விழாக்களின் சகாப்தம். நூற்றாண்டு விழா கொண்டாடுவது என்பது சடங்கிற்காகவோ, சம்பிரதா யத்துக்காகவோ கிடையாது. வேர்களின் தொண்டுகளை நினைவுபடுத்தி, விழுதுகள் பழுது இல்லாமல் கொள்கைகளை உணர்வுடன் கொண்டு செல்கின்ற இயக்கம்தான் திராவிட இயக்கம்.
இந்த இயக்கம் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த இயக்கம். அப்படி தொண்டாற்றியவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது என்பது தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் கொள்கை அடிப்படையிலான வரலாற்றுக்கடமை யாகும். அன்றும், இன்றும், என்றும் திராவிடர் கழகம்தான் இக்கடமையை உணர்த்தும் பாசறையாகும்.
இந்த இயக்கம், பெண்களுக்கு சமத்துவம், படிப்புரிமை, சொத்துரிமை, வாழ்வுரிமை, சமத்துவத்துடன் அதிகார பங்களிப்புக்காக போராடி வென்று காட்டிய இயக்கம்.
பெண்களை கல்வி பெறச் செய்தது மட்டுமல்லாமல், கொள்கைக்காகக் களமாட, போராடச் செய்த இயக்கம். பெண்கள் போராளிகளாக தியாகத்துடன் சிறைச்சாலைக்கும் சென்றார்கள்.
மொழிப்போரில் உயிர்நீத்தவர் தாளமுத்து. அதுமட்டுமல் லாமல், அவர் மனைவி குருவம்மாள் சிறையில் இருந்தவர்.
பாபு ஜெகஜீவன்ராம் சென்னையில் கலைஞர் வீட்டில் தந்தைபெரியாரை சந்தித்தார். அப்போது, தாழ்த்தப்பட்ட சமு தாயத்துக்கு திராவிட இயக்கம்போல் பாடுபட இந்தியாவில் வேறு இயக்கம் எங்கும் இல்லை என்றார்.
டாக்டர் சத்தியவாணிமுத்து ஆற்றிய தொண்டுகளையும், அவரின் துணிச்சல்மிக்க உரைகளையும், பொதுவாழ்வில் அவர் எதிர்கொண்ட அறைகூவல்களையும் பல்வேறு ஆதாரபூர்வமான, சுவையான தகவல்களுடன் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார். மாறுபடுவது மனித சுபாவம் என்றாலும், அவர்கள் செய்த தொண்டை மறக்கக் கூடாது என்றார். தந்தைபெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட டாக்டர் சத்தியவாணிமுத்து கொள்கைவழியில் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை விரிவாக எடுத்துக் கூறினார்.
கழகத்துணைத் தலைவர் தொடக்க உரை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பல்வேறு வரலாற்று பூர்வமான தகவல்களை எடுத்துக்காட்டி தமது தொடக்க உரையில்,
இது நூற்றாண்டு விழா பருவம்-கழகம் சார்பில் பல நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண் மையில் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சையில் நடத்தப் பட்டது. ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா, கழகத்தின் முதல் பொருளாளர் அர்ச் சுனன் நூற்றாண்டு விழா, சேரன் மகாதேவி போராட்ட நூற்றாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கள் என நூற்றாண்டு விழாக் கள் சகாப் தமாக உள்ளது.
திராவிட இயக்கம் தோன்றி சமுதாயத்தில் மாற் றங்கள், புதிய திசைகள், திருப்பங்கள் பல ஏற்பட்டன.
திராவிட இயக்க வீராங் கனை டாக்டர் சத்திய வாணிமுத்து இளம் வயதில் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றியவர்.
அவர் தந்தையார் நாகை நாதர் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியில் தந்தை பெரியாரோடு இணைந்து பணி யாற்றியவர்.
திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து தம்முடைய வாழ்விணையரோடு 1944இல் சேலம் மாநாட்டில் கலந்துகொண்டவர். ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் கர்ப்பவதியாக சிறை சென்றவர். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பின்னாளில் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர்.
கலைஞர் தமது ஆட்சியின்போது பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கும் திட்டத்துக்கு அவர் பெயரை சூட்டினார்.
திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணி முத்துவின் 47ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலருக்கு தந்தைபெரியார் வாழ்த்துச் செய்தி அளித்திருந்தார்.
தந்தை பெரியாருக்கு பெண்கள் மாநாட்டில்தான் Ôபெரியார்Õ என்று பட்டம் அளித்தார்கள். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க பெண்களைத் தூண்டினார் என்றுதான் தந்தைபெரியாருக்கு சிறைத்தண்டனை விதித்து பெல்லாரி சிறையில் அடைத்தார்கள் – இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நினைவுரை
‘பாசறை முரசு’ ஆசிரியர் மு.பாலன் நினைவுரை ஆற்றுகையில்,
1965ஆம் ஆண்டில் பெரம்பூர் – வாழை மாநகரில் தந்தை பெரியார் பேசிய பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவரை முதன் முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “டாக்டர் சத்தியவாணி முத்து அவர்கள் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட போது ஒரு மாதம் விடுப்பு எடுத்து தேர்தல் பணிகளைச் செய்தேன். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரது பேரன்பை பெற்றவர் சத்தியவாணி முத்து அம்மையார். தி.மு.க. அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவரின் பெரும் முயற்சியால்தான், பெரம்பூர் பேருந்து நிலையமும், வடசென்னை வியாசர்பாடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறும் வாய்ப்பாக டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரியும் ஏற்பட்டன” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நினைவுரை ஆற்றுகையில்,
நம்முடைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் குறிப்பிட்டது போன்று இந்த ஆண்டு நூற்றாண்டு விழாக்களின் பருவ ஆண்டாக உள்ளது. பல தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை நம்முடைய தமிழர் தலைவர் தலைமை வகித்து சிறப்புடன் நடத்தி உள்ளார். அதுபோன்று வரவிருக்கும் காலத்தில், ஆண்டுகளில் பல திராவிடர் இயக்கத் தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை கொள்கை எழுச்சியோடு நம்முடைய தமிழர் தலைவர் நடத்திட உள்ளார். அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை அவரது சிறப்பான முன்னிலையில் நாம் அனைவரும் இணைந்து எழுச்சியாகக் கொண்டாடுவோம். இது உறுதியான ஒன்று என்று கூறினார்.
சித்ரமுகி சத்தியவாணி ஏற்புரை
டாக்டர் சத்தியவாணிமுத்து மகள் சித்ரமுகி சத்தியவாணிமுத்து ஏற்புரை ஆற்றுகையில், ஓர் இயக்கத்தை நடத்துவது சாதாரணமானதல்ல. தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை மிக லாவகமாக, திறம்பட நடத்தி வருகிறார். எங்கள் அன்னையாரின் நூற்றாண்டு விழாவை தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் நடத்துவதில் ரொம்ப மகிழ்ச்சி!
எங்கள் அம்மா மறைவுற்று 24 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, அவரை நினைவுகூர்ந்து இந்த விழாவை திராவிடர் கழகம் நடத்துகிறது.
இந்த சமுதாயம், பெண்களின் முன்னேற்றத்துக்கு காரணம் தந்தைபெரியார்தான். லண்டன், துபாய் போன்ற வெளிநாடுகளில் தமிழர்கள் முன்னேற்றமடைந்து இருப்ப தற்குக் காரணம் இந்த இயக்கம்தான்.
பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கும், பல மாற் றங்கள், பல முன்னேற்றங்கள் ஏற்படவும் காரணம் தந்தை பெரியார்.
பெற்ற தாய் தன் குழந்தையை உச்சி மோந்து பாராட்டுவது போன்ற மைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி! என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விழா நிறைவாக பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.
கழகப்பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், நெய்வேலி வெ.ஞானசேகரன், தாம்பரம் ப.முத்தையன், சு.மோகன்ராசு, இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, கி.இராமலிங்கம், சு.அன்புச்செல்வன், தே.ஒளிவண்ணன், சோ. சுரேஷ், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், பகுத்தறிவாளர் கழகம் மு.இரா.மாணிக்கம், தென்.மாறன், ஜனார்த்தனன், சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பசும்பொன், மாணவர் கழகம் செ.பெ. தொண்டறம், பெரியார் மாணாக்கன் உள்பட பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் விழாவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment