இல. முல்லைக்கோ
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்பது திராவிடத் தத்துவம். உலகளா விய சமநிலை மானுடம் மலர வேண் டும் என்ற குறிக்கோளோடு பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்பார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை. சமத்துவம், சமதர்மம் என்னும் கோட் பாட்டை அடிப்படையாகக் கொண்ட தாகும்.
சமநிலை: மதம், ஜாதி, நிறம், இனம், பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலையை உருவாக்குவதாகும்.
வல்லமை: அறிவாசான் தந்தை பெரியாரின் வாழ்த்து நமக்குப் புதிய வல்லமையை, புதிய உற்சாகத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை. அவர் பிறந்தது 17.9.1879ஆம் ஆண்டு, அவர் எதிர்கொண்ட காலத்திலும் அதற்குப்பின் ஏற்பட்ட மாற்றம் குறித்து சுருக்கமாய் பார்ப்போம்.
பெரியாரின் ஆளுமைக்கு முன் - இது வண்ணான் வீடு, பறையன் வீடு, சக்கிலியன் வீடு, தச்சன் வீடு, பள்ளன் வீடு என்று உழைக்கும் மக்களை அழைத்தனர்.
பெரியாரின் செயல்பாட்டால் - இது டாக்டர் வீடு, வாத்தியார் வீடு, தாசில்தார் வீடு, கலெக்டர் வீடு என்று அழைத்தனர்.
முன்பு - டேய் வைத்தா, டேய் மண்ணாங்கட்டி, டேய் அமாவாசை, டேய் துருமெயிலு, டேய் குப்பா, டேய் சுப்பா.
பின்பு - தோழர் இங்கர்சால், தோழர் அறிவுக்கரசு, தோழர் சித்தார்த்தன், தோழர் சமதர்மம், தோழர் ரஷ்யா, தோழர் சாக்ரடீஸ், தோழர் லெனின், தோழர் ஸ்டாலின்.
முன்பு - டேய் வெட்டியான் மவனே, பரியாரி, சாணார பயலே.
பின்பு - வக்கீல் தம்பி, கிளார்க்கு புள்ள, டாக்டர் தம்பி,
முன்பு - நாங்க எல்லாம் பிர்மாவின் தலையிலே பிறந்ததாலே உயர் ஜாதி, மத்தவங்க எல்லாம் சூத்திரன், எங்களுக்கு வைப்பாட்டி புள்ளைங்க.
பின்பு - நாங்க ஒடுக்கப்பட்ட பிராமணர்கள்.
முன்பு - காந்தி சிறீனிவாச அய்யங்கார் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
பின்பு - காந்தி சிறீனிவாச அய்யங்கார் வீட்டிற்குள் அமர்ந்திருந்தார்.
முன்பு - அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு.
பின்பு - 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியர்.
முன்பு - இந்திய நாடு என் வீடு.
பின்பு - தந்திர விடுதலைத் தமிழ்நாடு ஒரு தீர்வு.
முன்பு - தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, பழகினால் தீட்டு.
பின்பு - தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
முன்பு - போய் உன் அப்பன் பார்த்த தொழிலை செய்.
பின்பு - அடுத்து என்ன உயர் படிப்பு படிக்க போறே.
முன்பு - கும்புடுகிறேன் சாமி.
பின்பு - வணக்கம்.
முன்பு - பொட்டப்புள்ள வீட்டுக்குள்ளேயே அடங்கி இரு.
பின்பு - இன்ஸ்பெக்டர் மேடம்
முன்பு - இராமச்சந்திர சேர்வை, சேதுராம உடையார்
பின்பு - இராமச்சந்திரன், சேதுராமன்
முன்பு - டேய் மாடு மேய்க்கிற பயலே.
பின்பு - டாக்டர் சார்.
முன்பு - இந்தியன், ஹிந்து
பின்பு - திராவிடன், தமிழன்
ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டு மல்லவா? இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டுமல்லவா? ஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்து, ஜாதியைக் காப்பாற்றும் கடவுளும் ஒழிந்துவிடுமல்லவா?
எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து, வசதி செய்து கொடுத்து தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டாமா? எந்தத் தலைமுறையும் தனது ஜாதி வேலைக்கே வராமல் செய்ய வேண்டாமா? தலைமுறை தலைமுறையான அடிமை முறை மாற தந்தை
பெரியாரால் கண்ட மாற்றம் அல்லவா இவை?