ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?
கவிஞர் கலி. பூங்குன்றன்
தந்தை பெரியார், பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடர் கழகம் - இவர்களின்மீது புழுதிவாரி இறைப்பது - பிம்பத்தை உடைப்பது எனும் ஒரு செயலில் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருப்பதாகவே தெரிகிறது!
தினமலர், தினமணி, துக்ளக்கோடு, தமிழ் இந்துவும் ஜோடி சேர்ந்திருக்கிறது போலும்!
வரட்டும் - ஒரு வகையில் நன்மைக்குத்தான் - இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கூட்டத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு அல்லவா - அந்த வகையில் நிரம்பவே வரவேற்கிறோம் - எதிர்பார்க்கிறோம்.
நேற்றைய (31.10.2021) 'தினமலர்' ஏட்டில் யாரோ எழுத்தாளராம் - அவர் பெயர் எஸ். ராமசுப்பிரமணிய னாம். கட்டுரையின் தலைப்பு "குலக்கல்வியும் - தொழிற் கல்வியும்!" என்பதாகும். என்ன சொல்ல வருகிறார்கள்?
"கடந்த 1953 ஏப்ரல் 16இல் ராஜாஜி சென்னை மாகாணத் தின் முதல் மந்திரியாக இருந்தபோது ஒரு சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டார்.
அதன்படி மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை மாணவியர், பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களும் தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும்.
மற்ற நேரம், பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்க லாம் என்று ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.
அதாவது, தச்சர் மகனுக்குத் தச்சுத் தொழில் நுட்பமும், தட்டார் மகனுக்கு நகை செய்யும் நுணுக் கமும், சிற்பக் கலைஞர் மகனுக்கு சிற்ப வேலைப் பாட்டு நேர்த்தியும், சமையல் கலைஞர் மகனுக்கு நளபாகமும் பிறவியிலேயே வாய்த்திருக்கும்.
அந்த பண்பு அவரவர் 'ஜீன்' எனப்படும் உடல் மூலக் கூறிலேயே உறைந்திருக்கும்! அந்தப் பண்புகளை தகப் பனார் கூடவே இருந்து மெருகேற்றினால் மேலும் மிளிரும்.
அந்த கோணத்தில், அந்த உயர்ந்த நோக்கத்தில் தான், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்" என்று கூறுகிறது தினமலர்.
இது தொழிற் கல்வி திட்டம் தானாம். முதல்அமைச்சர் ராஜாஜி தொழிற் கல்வி என்பதற்குப் பதிலாக குலக்கல்வி என்று 'நா' குழறி சொல்லி விட்டாராம்.
உடம்பெல்லாம் மூளை என்று தம்பட்டம் அடிப் பார்களே - ராஜாஜி பற்றி பார்ப்பனர்கள்! அப்படிப்பட்ட ராஜாஜிக்கா நா குழறி விட்டது? சரி. ஒரு முறைதான் நா. குழறியது - தவறைத் திருத்தி சொல்ல வேண்டியது தானே - அவரைத் தடுத்தது யாராம்....? உண்மை என்னவென்றால் அவர்கள் தொழிற்கல்வி என்று முக்காடு போட்டுக் கொண்டு வந்த திட்டத்தை - குலக் கல்வி என்ற ஒரே ஒரு வார்த்தை மூலம், அவர்களின் முகமூடியைக் கிழித்து சுக்கல் நூறாக்கி விட்டார் தந்தை பெரியார். மக்களும் விழிப்புணர்வு பெற்றனர் என்பது தான்உண்மை.
சரி... தினமலர் கட்டுரையாளரின் கூற்றுக்கே வருவோம். தச்சர் மகனுக்கும், தட்டார் மகனுக்கும், சமையல்காரர் மகனுக்கும் அந்தத் திறன் தந்தை 'ஜீன்' வழி வருமாம். அதனால்தான் அத்தகைய கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தாராம்.
முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி எடுத்து வைக்கும் (அதுவும் இன்றைக்கு 68 ஆண்டு களுக்குமுன் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!) பிள்ளைகள் அரை நேரம் அதுவும் வெறும் மூன்று மணி நேரம் படிப்பு! மீதி நேரம் அப்பன் தொழில் என்றால் அந்தப் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக் கல்வி நிலை எந்த அளவுக்கு இருக்கும்?
அந்த வயதிலேயே அப்பன் தொழிலைக் கற்று, நாலு காசைக் கையில் பார்த்து விட்டால், அவர்களின் மனநிலையும், நாட்டமும் எந்தப் பக்கம் சாயும்?
இது சாதாரண பொது அறிவு உடையவர்களுக்குக் கூடத் தெரிந்த சின்ன விஷயம் - இது மெத்தப் படித்த "தினமலர்" வகையறாக்களுக்குத் தெரியாமல் போயிற்று என்று சொல்ல மாட்டோம் - எப்படியாவது அவர் களின் குலகுருவான ராஜாஜியை விட்டுக் கொடுக்க முடியாதே - காப்பாற்றியாக வேண்டுமே - அந்தப் பூணூல் இனவுணர்வுதான் 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளை ஆட்டிப் படைக்கிறது.
தச்சர் மகன், தட்டார் மகன், சமையற்காரர் மகன் என்று பட்டியல் போடும் பார்ப்பன எழுத்தாளர் புரோகிதர் மகன், கருமாதி மந்திரத்தையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே ஏன்?
கருமாதி பார்ப்பான் மகன் மட்டும் காலையில் மூன்று மணி நேரம் பள்ளியில் படிப்பு; பிற்பகலில் - அக்கிரகாரத்து மாமி, பாட்டி கூடப் படித்தவர்கள் ஆதலால், அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பார்ப்பனர் அல்லாதார் கல்வி வாய்ப்பை இந்தக் 'கண்ணி வெடி' மூலம் தகர்க்க வேண்டும் என்பது தானே ஆச்சாரியாரின் நோக்கம்.
அதுவும் போகட்டும்; அவர்கள் சொல்லும் தொழிற் கல்வியாகவே இருந்து தொலையட்டும் - அரை நேரம் பள்ளிப் படிப்பு என்பதோடு நிறுத்த வில்லையே! 6000 பள்ளி களை இழுத்து மூடினாரே ஆச்சாரியார் அதன் நோக்கம் என்ன?
1953இல் மட்டுமல்ல; 1937இல் ஆச்சாரியார் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியவர்தானே!
இவற்றை எல்லாம் அறியாத்தனத்தால் ஆச்சாரியார் செய்துவி டவில்லை. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம் - பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கோட்பாடு!
அதிலே ஆச்சாரியார் உறுதியாக இருந்த காரணத் தால்தான் அந்த வேலைகளை மிக சூட்சமமாக அவருக்கே உரித்தான நரித்தனத்தோடு செய்தார் என்பதுதான் உண்மை- உண்மையிலும் உண்மை!
'பிராமணர்' மற்றும் ஜாதிபற்றி ஆச்சாரியாரின் அழுத்தமான எண்ணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் 1953 குலக்கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அவர் மூளையில் உருவானது என்பதை எளிதில் உணர முடியும்.
Infact in one occasion Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan April (1) 1978 Gandhiji's crusade Against Casteism).
முதல்அமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக பெருமையாக நேசிக்கிறேன்" என்றவர்தானே.
முதல் அமைச்சராக ஆச்சாரியார் இருந்தபோது திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் என்ன பேசினார்?
"அவரவர் ஜாதித் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கி ருந்து கிடைக்கும்?"
('தி இந்து' 30.6.1952)
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆச்சாரியார் குலக் கல்வி திட்ட அறிவிப்புக்கு முன்பே இந்தக் குலக்கல்வி மனப்பான்மையோடு இருந்தார் என்பதுதான்!
ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித்துதான் நம் முன்னோர்கள் வர்ணாசிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்"
(கரூர் பசுபதிபாளையத்தில் ஆச்சாரியார் உரை 'சுதேசமித்திரன்' பக்கம் 1 - 29.1.1961)
ராஜாஜியின் இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால் தான் 1953இல் அவர் கொண்டு வந்தது ஜாதியின் அடிப்படையிலான குலக் கல்வியே என்பது மிகப் பச்சையாகவே தெரியும் - புரியும்.
குலக் கல்வி திட்டத்தை எதிர்த்த தி.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாரிசுகளை தங்கள் தொழிலான அரசியலிலே வைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகிறார் 'தினமலர்' எழுத்தாளர்.
அரசியலில் ஈடுபடுவதும், பொதுத் தொண்டாற்று வதும் ஒரு தொழில் என்று சொல்லும் 'அதிமேதாவியை' இப்பொழுதுதான் பார்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக சிலவற்றை நம்மால் கேட்க முடியும்.
இந்தியாவில் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகக் கருதப்படும் சரத்பவாரின் மூதாதையர் மண் பாண்டம் செய்தவர்கள். அவருடைய மூதாதையர் தொழிலைக் கற்று அதிலே ஈடுபட்டிருந்தால் சரத்பவார் மராட்டிய மாநில முதல் அமைச்சராக ஒன்றிய அமைச் சராக வந்திருக்க முடியுமா?
மும்பை வந்து தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ஒரு நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது. அவர் வாழையடி வாழையாக அரசியல் குடும்பத்தில் வந்தவர் கிடையாதே!
இசைஞானி இளையராஜாவின் பாட்டனார் எஸ்டேட் கூலித்தொழிலாளி. சொந்த வீடு கிடையாது.
"குலத் தொழிலைப் பின்பற்றி இருந்தால் இன்று உலகம் போற்றும் இசைஞானியாக ஒளிர முடியுமா?
பச்சைத் தமிழர் காமராசர் அரசியலில் ஆச்சாரியாரை வீழ்த்தி அவதானித்திருக்க முடியுமா?
தி.க., தி.மு.க. காங்கிரசின் வாரிசு அரசியல் பேசும் இவர்கள் பா.ஜ.க.வில் கொத்துக் கொத்தாக குடும்ப வாரிசுகளாக ஜொலிக்கிறார்களே! அதைப்பற்றி மூச்சு விடாதது ஏன்? (தனிப் பட்டியல் காண்க).
ஓ, மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி - அதுதானே பார்த்தோம்!