அ.ப. நடராசன், உடுமலை
பழைய மரபு
அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், நாடார் என்னும் ஜாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது.
இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதனால் ஒரு கலகமே உண்டாயிற்று.
தம்முடைய ஜமீனைச் சேர்ந்த கிராமம் ஆகையால், பழைய மரபை மாற்றக் கூடாது என்கிற எண்ணத்தைக் கொண்ட அரசர், அவ்வாறு கோவிலுக்குள் புகுந்த நாடார்கள் மீது ஒரு வழக்குப் போட்டார். பல காலமாக இருந்துவந்த பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரலாம் என்கிற எண்ணத்தில் அவ்வாறு செய்தார். அவருக்கே பல நாடார்கள் நண்பர்களாய் இருந்தார்கள். என்றாலும், நட்பை உத்தேசித்து மரபை மாற்றக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் உடையவராக இருந்ததால் அந்த வழக்கைப் போட்டார்.
மதுரை சப்_கோர்ட்டில் விசாரணை நடந்தது. டி.வரதராவ் என்பவர் அப்போது சப்_ஜட்ஜாக அங்கே இருந்தார். ஆசிரியப் பெருமானை அங்கே வந்து சாட்சி சொல்ல வேண்டுமென்று சொன்னார்கள். மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களே, “நீங்கள் வந்து சாட்சி சொன்னால் எனக்கு மிகவும் பலமாக இருக்கும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஆசிரியப் பெருமான் (உ.வே.சா) அப்படியே போய், சாட்சி சொன்னார். நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார். அதன் பிறகு சப்_ஜட்ஜ் தீர்ப்புக் கூறினார். அந்தத் தீர்ப்பில் ஆசிரியரைப் பற்றிச் சிறப்பாக அந்த நீதிபதி சொல்லியிருந்தார்.
“இந்தச் சாட்சியை அளித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறவர். தமிழில் உள்ள பழைய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார். அந்நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். டாக்டர் போப் துரை முதலியவர்கள் அவருடைய புலமைத் திறத்தையும், அவரது பெருமையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய சாட்சி இந்த வழக்குக்கு மிகவும் தகுதியானதாய் இருக்கிறது. அவர் நடுநிலைமை பிறழாமல் உண்மையை உணர்ந்து சொல்கிறார். ஆகையால் அவருடைய சாட்சி மிகவும் கவனத்திற்குரியதாய் இருந்தது. இத்தகைய சிக்கலான விஷயங்களில் அத்தகைய பெரியவர் சாட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்று விரிவாக எழுதினார்.
ஆதாரம்: ‘என் சரித்திரம்’ -உ.வே.சா - தன் ஆசிரியர் பற்றி கி.வா.ஜகந்நாதன், பக்கம்: 793-794
No comments:
Post a Comment