Tuesday, 22 October 2019

பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள்.

செட்டியார், முதலியார் என்பது வெறும் சாதிப் பெயர்கள் தான். ஆனால் பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள். பிராமணன் என்று ஒருவனை குறிப்பிட்டால் மற்றவன் சொல்லாமலே சூத்திரனாகிறான்.
சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (வேசி மகன்) என்று மனுஸ்மிருதி (மனு தர்மம்) அத்யாயம் 8,சுலோகம்-415 கூறுகிறது. சூத்திரன் பிரம்மாவின் காலில் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி (அத்யாயம் 1,சுலோகம்-87 ) யும் ரிக் வேதம், புருஷ சுக்தமும், யஜுர் (அத்யாயம் 31,சுலோகம்-11 ) வேதமும் கூறுகிறது..
 வேதப்படி பிராமணன் என்று எழுதி, வேதப்படி எங்களை இழிவு படுத்த 
எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது!
--செ.ர.பார்த்தசாரதி
முகநூல் பக்கம், 22.10.12

Friday, 11 October 2019

சூத்திரப் பட்டம்!(ஆவணங்களில் நீக்கம்)



பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களைக் குறிக்க 'சூத்திரன்' என்ற சொல் அரசுக் குறிப்புக்களிலும் பயன்படுத்தப் பட்டு வந்ததை நீக்குவதற்குப் பெரியார் அரும்பாடு பட்டார்.

1926 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் அச்சொல் அரசுக் குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. 1926இல் நீதிக் கட்சி தோற்றவுடன் பார்ப்பனர் ஆதிக்கம் மீண்டும் தலையெடுத்ததன் பயனாய் மீண்டும் அச்சொல் அரசுக் குறிப்புகளில் பயன் படுத்தப்பட்டது. (வி. 19.7.80) சென்னை மாகாண முதன்மந்திரி - சட்டசபையில் காட்டிய ஒரு ஆதாரத்தில் சூத்திரன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பெரியார் குடியரசில் வன்மையாகக் கண்டித்து எழுதினார்.

சூத்திரன் என்ற சொல் எவ்வளவு கேவலமான பொருளுடையது என்பதை வேதத்திலிருந்தும் மனுதர்மத்திலிருந்தும் சான்று காட்டி விளக்கினார்.

சூத்திரன் என்றால் பக்தியினால் பார்ப்பானுக்கு வேலை செய்கிறவன், யுத்தத்தில் தோற்று அடிமை யானவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், பரம்பரை யாய்ப் பார்ப்பானுக்குத் தொண்டு செய்பவன். மனு 8-415

இவர்தாம் பெரியார் (பக்.26)

 

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9 .19

தந்தை பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி!


பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று. செயற் கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிரா மணியத்தைப் போக்கு வதும் பகுத் தறிவைப் புகட்டு வதும் மூடப்பழக்க வழக்கங் களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடு தலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத் தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், 'அதெல்லாம் நீங்களே தமிழ்ப் பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர் களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்' என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன்.

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற் றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமை களைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவது மில்லை. பிரித்தானியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

கலப்புமணம், பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை  விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும்.

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மை யான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப் பகங்களுடன் ஒத்து ழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள் கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற் பட்டன வாகா.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக் கொண்டாட்டத்தில் ஊர் தோறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரி யார் படிமைக்கு மாலையணி வதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?


இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு  வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத் தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய:-

முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே

மொழிவர லாறு மொழிவது கேண்மின்

பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு

நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்

பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்

நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்

வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்

தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்

நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்

நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்

அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்

அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே

விடுதலை பெறவழி வேறில்லை யென்றே

கடவுள் இலையெனுங் காரங் கலந்து

மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்

மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே

அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்

வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை

குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து

பண்டம் விட்டுப் படிவம் பற்றித்

தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்

தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து

பெரியார் பெயரைக் கெடுப்பார்

தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

 

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

- விடுதலை ஞாயிறு மலர், 14.9.19

70 வயது முதியவர் 20 வயது பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்குகிறார்

70 வயது முதியவர் 20 வயது பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்குகிறார்


- விடுதலை ஞாயிறு மலர், 7.9.19

பகுத்தறிவு திருமணம்

22.07.1944  - குடிஅரசிலிருந்து....
தோழர்களே! இப்போது நடைபெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைகீழாக ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே, பல இடங்களிலே இன்று கையாளப் பட்டுத் தான் வருகிறது.
இங்கே நாம் என்ன மாறுதலைக் காண் கிறோம்? சடங்கில்லை. வேறு இனத்தவன் எவனும் மணத்தை நடத் துவதில்லை. சுயமரியாதைக்கும், பகுத்தறிவிற்கும், இயற் கைக்கும் பொருந்திய மணம் வேண்டு கிறோம். அப்படிப்பட்ட இந்தத் திரு மணத்தை  நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக்கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம் அய்யர் இல்லை யென்றாலும், அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருக்கக் கூடாதா? என்றெல்லாம் சொல்லு வார்கள். நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ, தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியதுதான். அம்மி அரைக்கப்  பயன்படட்டும். இரவில் விளக்கு இருக்கட்டும். ஒவ்வொன்றும் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத் தறிவிற்கும், நம் தன்மானத்திற்கும் முரண் பட்ட எதையும் நீக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.
ஒவ்வொன்றிற்கும் ஏன் என்ற கேள்வி யைப் போட்டு ஆராய்ச்சி நடத் தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன் படுகின்றது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கிறோம். இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி, பார்ப்பனன் இல்லாதது. ஆதலால் இதை சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம். தான்தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவங் கொண்டு, நம்மைத் தொடாதே, கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்காரவைத்து காரியம் நடத்தினால் தமிழனுக்கு மான முண்டு என்று சொல்ல முடியுமா?
இரண்டாவது வெற்றி என்ன வென்றால், இது பகுத்தறிவுத் திருமணம். பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணுகிறோமோ, அவை நாளைக்கு மூடப்பழக்கவழக்கங்கள் என தள்ளப் படும். நாம்கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக் களெனத் தள்ளிவிடவில்லையா? அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஓர் காலத்தில் இராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான் என்று சொல்லுவார்கள். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். எனவே பழைய காலத் தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூற வில்லை. அவர்கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும், இன்று மாறித்தான் ஆகவேண்டும், சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து எடிசன் அப்புறம் படிப் படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற் கையானது அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத் திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப் போது நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங்களுக்கு முன்பிருந்த தைவிட கடவுளைப் பற்றி எண்ணம் தெய் வீக சக்தி படைத்தவர்கள், பெரிய மனி தர்கள் என்பவர் களைப் பற்றிய எண்ணம், வீடுவாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண்ணங் களில் பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண் கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.
அடுத்தபடியாக, இங்கு பொருட் செலவு அதிகமில்லை, நேரமும் பாழா வதில்லை. முன்பெல்லாம் பல நாட்கள் திருமணம் நடைபெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூட ‘one day only’’ அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள்.
மற்றும், இந்தத் திருமணத்தில் ஆணுக் கும், பெண்ணுக்கும் சம உரிமை இருக் கின்றது. ஆரியரின் எட்டுவகைத் திருமண முறைகளில் ஒன்றில்கூட பெண் ஓர் உயிருள்ள பொருளாகக் கூட மதிக்கப்படுவ தில்லை.
ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால், அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக் கிறோம், பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட இப்பெண்களைத் தங்களுக்கு வேண்டி யவைகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படி சொன்னால் டிராமா (நாடக) கார னைத்தான் தெரிந்தெடுப் பார்கள். அவர் களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட ‘Fresh air’ அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது.
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டு பொருத்தம் பார்க்கச் சொன்னால், அவனுக்கு மணமக் களைப் பற்றி என்ன தெரியும். அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களை கொடுத்தால், ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லு வான். மனிதனுக்கும் நாய்க் குட்டிக்கும்கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம். ஜாதகம் இல்லையென்றால், பெயரைச் சொல்லச் சொல்லிப் பொருத்தம் பார்ப் பான். அதற்கு மேல் பல்லி, கருடன் ஆகியவைகளிள் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையையே பிணைக்கக் கூடிய திரு மணத்தில், இவ்வளவு பேதமை அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண் ணின் முதுகுக்கும் கணவனின் கைத் தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகின் றது. வரும் காலத்தில் வாலிபர்களுக்கும் பெண் களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லை யென்றால் உரிமையுடன் இருக் கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னே றுவார்கள். எனவே முதலிலேயே உரிமை யளித்து விடுவது நல்லது. தங்களனை வருக்கும் வணக்கம்.
(12.07.1944 அன்று பேரளத்தில்  என். மகாதேவன் அவர்கள் புதல்விகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு)
- விடுதலை நாளேடு, 11.10.19