ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை
சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங் களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார் இந்திய கவர்ன்மெண்டுக்கு அனுப்பிய விண்ணப் பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரி வித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்ப தென்ன வென்றால்,
ஜாதி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டுமென் னும் விஷயத்தில் கவர்ன்மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற் கில்லை. ஆனபோதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள் கையை உண்மையாய் அடியோடு விட்டு இருக்கின்றவர்கள். தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக்கணக்கு எடுப்பவர்கள் (அதாவது என்யூமிரேட்டர்கள்) ஒப்புக் கொண்டு அந்தக் காலத்தில் ஜாதியில்லை அதாவது சூடை என்று பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள்.
இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார் நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்ப வர்களுக்கே இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.
ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திர மல்லாமல், அனுபவத்திலும் பாராட்டாமலிருக்கின் றவர்கள் தைரியமாய் என்யூமிரேட்டர்கள் - கணக்கெடுப்பவர் களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது(Nil) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.
அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லை யென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக் கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாகவேண்டு மென்று கேட்டால் பகுத்தறிவு மதம்(Rationalist) என்று சொல்லி விடலாம்.
ஆதலால் யாரும் சர்க்காருக்குப் பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.
- குடிஅரசு - 14.12.1930
- விடுதலை நாளேடு, 9.2.19
No comments:
Post a Comment