பூரணச்சந்திரன் கேள்வி-பதில்கள்
கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?
கதிரேசன், சென்னை
இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.
இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும், யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்” என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம்.
-1.3.2012