Thursday 25 May 2017

வரலாற்றை மறக்கலாமா? -இந்தி திணிப்பு


தமிழர்களுக்கு மொழி உணர்வு மட்டும் என்றென்றும் நீறுபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது. அதை ஊதிவிட்டு பெருநெருப்பாக்கி பின்னர் சூடுபட்டுப் போனதைத்தான் வரலாறும் தொடர்ந்து உரைக்கிறது. ஆம், தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற உணர்வுக்கும், தணியாத மொழிப்பற்றுக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் எவர் செயல்பட்டாலும் மொத்தத் தமிழினமும் அதை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதுதான் வழக்கம்.

ஆனால் மொழிப் பிரச்சினையில் தமிழகத்தில் சமீப நிகழ்வுகள் சில சங்கடங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர் மக்கள்.

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தில் இருந்த ஊர்களின் பெயரை அழித்துவிட்டு, அவை இந்தியில் எழுதப் பட்டன. இதை கடுமையாக எதிர்த்த தமிழக இளைஞர்கள் கருப்பு மை பூசி இந்தியை அழித்தனர்.

இதுபோதாதென்று பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் வழங்கப்பட்டிருந்த தமிழ் மொழித் தேர்வு தற்போது நீக்கப்பட் டுள்ளது. இதனால் இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்.

அடுத்த அதிர்ச்சியாக, சமீபத்தில் இந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வருவதற்கான 117 பரிந்து ரைகளைக் கொண்ட அறிக்கையை, சிறு திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது பள்ளிகளில் இந்திமொழியை கட்டாயமாக்குவதற்கான முதல்நடவடிக்கை, இதன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்குவது, அனைத்து பல்கலைக்கழகங் களிலும் இந்தி மூலம் பயில்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை தலைதூக்கும்.

மேலும் குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் இனி இந்தியில்தான் பேசவும் எழுதவும் வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கட்டாயங்களும் இனி நடைமுறைக்கு வரும் என்று அச்சப்படுகின்றனர் தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும்.

அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக வைக்கப்பட்டு வரும் சூழலில், 'இந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழி என்ற இறுக்க மான மனநிலையோடு மத்திய அரசு இருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் ஏற்புடையதுதானா?

இதே இந்தித்திணிப்பின் காரணமாக தாய்மொழியாம் தமிழ்மொழி காக்க தன்னெழுச்சியாக தமிழர்கள் திரண்டெ ழுந்ததும், மொழிப்போர் மூண்டதும் கடந்த கால இந்திய அரசியல் வரலாற்றின் கம்பீரமான கல்வெட்டுப் பக்கங்கள். மத்தியில் ஆள்வோரும் இதை மறக்க முடியாது.
பன்மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணம் இந்தித் திணிப்பை உடனடியாக கைவிடவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. இன்றைய காலகட்டத்தில் மாநில நலன்களில் கூடுதல் முனைப்பு காட்டி செயலாற்றுவதே ஆட்சிக்கும் சிறப்பு.

- நன்றி: புதிய தலைமுறை,

4.5.2017, பக்கம் 5

-விடுதலை,13.5.17

No comments:

Post a Comment