Tuesday, 14 February 2017

டிஎன்பிஎஸ்சி தேர்வு : புதிய விதிமுறைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு களை எழுதுபவர்களுக்காக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

ஆண் விண்ணப்பதாரார், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கெனவே மனைவியுடன் வாழும் ஒருவரைத் திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது.

விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா, கிரேயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.

வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்ட பெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல்போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது.

விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சிக்கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்குத் தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக்கூடாது.

கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச், மோதிரம், கம்யூனிக்கேஷன்சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டு-மானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக்கூடாது. விதிகளை மீறுவோர், அய்ந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. திருத்தப்பட்ட புதிய விதிமுறை-களின்படி, எந்தக் காலம்வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும்.

தேர்வுக் கூடத்தில் மட்டுமின்றி தேர்வு மய்ய வளாகத்திலும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்தி விட்டு வரக்கூடாது. தேர்வுக்கூடத்தில் புகை பிடிக்கக்கூடாது.

தேர்வுக்கூட கண்காணிப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர் அல்லது தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்களுடன் தேர்வுக்கூடத்திலோ அல்லது தேர்வுமய்ய வளாகத்திலோ தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ, பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும்போதோ முறைதவறி நடக்கும் விண்ணப்பதாரர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்கள் மீது குற்றவியல் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பட்டம் அல்லது பட்டத்தின் தற்காலிக சான்றிதழின் (Provisional Certificate) நகல்கள் மட்டுமே கல்வித் தகுதிக்குரிய சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். மதிப்பெண்கள் பட்டியல் அல்லது மதிப்பெண் நிலைச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் போதுமான ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தேர்வுக் கூடத்திற்கு உள்ளே தேநீர், காபி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்-பட்ட பதிவு எண் எழுதப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும். இடம் மாறி அமரக்கூடாது.

தேர்வுக்கூடத்தில் மற்ற விண்ணப்பதாரர்-களுடன் கலந்து ஆலோசிப்பது, மற்றவர்களின் விடைத்தாளைப் பார்த்து எழுதுவது, குறிப்புகள் கொண்டு வருவது, தேர்வுக்கூடக் கண்-காணிப்பாளர் அல்லது மற்றவர்களின் உதவியை நாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  இதனை மீறுவோர், தேர்வுக்கூடத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அவர்களது விடைத்தாளும் செல்லாத தாக்கப்படும். எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளிலும் கலந்துகொள்ள முடியாது.

தேர்வுக்குரிய நேரம் முடிவதற்கு முன்னதாக, தேர்வு எழுதுவோர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது.

நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட பால் பாயிண்ட் பேனா தவிர, வேறு நிற மை கொண்ட பேனாவைப் பயன்படுத்தக் கூடாது. பென்சிலால் விடைகளை நிரப்பக் கூடாது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விருப்பப் பாடத்தில் தேர்வு எழுதாமல் வேறு பாடத்தில் மாற்றி எழுதக் கூடாது. செல்போன், நினைவூட்டு கட்டமைப்பு குறிப்புகள் அடங்கிய கடிகாரம், மோதிரம், மின்னனு சாதனங்கள், புத்தகம், குறிப்புகள், கைப்பைகள், டிசைன் டேட்டா புக் ஆகியவற்றை தேர்வுக்கூடத்திற்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கக் கூடாது.

வினாத்தாள் வரிசைக்கான கட்டம் நிரப்பப்  படாமல் விடப்பட்டிருந்தாலும் அல்லது தவறாக நிரப்பப்பட்டிருந்தாலும் எந்த எண் கொண்ட வினாத்தாளைப் பயன்படுத்தினார் என்பதைக் கண்டறிய இயலாத விடைத்தாள் செல்லாத தாக்கப்படும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்லத் தவறுவது இரண்டு மதிப்பெண் குறைத்தல் அல்லது விடைத்தாளை செல்லாததாக்குதல் போன்ற-வற்றிற்கு வழிகோலும். அவ்வாறான ஒவ்வொரு நேர்விலும் தேர்வாணையம், தகுதியின் அடிப்படையில் எது சரியெனப்படுகிறதோ அவ்வாறு முடிவெடுக்கும்.

பதிவு எண் வரிசைக்கான கட்டம் தவறாக நிரப்பப்பட்டிருந்தாலோ / நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தாலோ இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

வினாத்தாள் வரிசைக்கான கட்டம் தவறாக நிரப்பப்பட்டிருந்தாலோ / நிரப்பப்படாமல் விடுபட்டிருந்தாலோ இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 29.9.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஒருமுறை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கெனவே அவர்கள் பெற்றுள்ள பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, புதியதாக மீண்டும் ஒருமுறைப் பதிவு (One time Registration System)  முறையில் தங்களின் தன் விவரப் பக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக்-கணக்கை உருவாக்க அனுமதி இல்லை.

விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுப் பெறுதல் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கும் பொதுவான தகவல்களைப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 044_25332833, 25332855 மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-_425_1002 என்ற எண்ணிலோ வேலைநாட்களில் 10 மணிமுதல் 5.45 மணிவரை தொடர்புகொள்ளலாம்.
-உண்மை இதழ்,1-15.2.17

 


No comments:

Post a Comment