ஆயக்கலைகள் 64 என்பர். இந்த கலைகளை யெல்லாம் விஞ்சிய அற்புத நவீனகால கலையாக நிழற்பட கலையை கூறலாம். வரலாற்று நிகழ்வு, சமூக பிரச்சினை, கல்யாணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், சோக நிகழ்வுகள், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது நிழற்படம்தான். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்வதும் இந்த நிழற்படம்தான். சார்... ஸ்மைல் ப்ளீஸ் என கருப்பு போர்வைக்குள் புகுந்து ஸ்டூடியோவில் படம் பிடித்த காலம் முதல், கையடக்க சைசில் டிஜிட்டல் கேமரா வைத்துக்கொண்டு விதம்விதமாக தங்களை செல்பி முறையில் படம் பிடித்துக்கொள்பவர்கள் நம்மில் அதிகரித்து விட்டனர். அந்தளவுக்கு நிழற்படம் மக்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது.
எங்காவது சுற்றுலா சென்றால் முதலில் நாம் எடுத்து வைக்கும் முக்கிய பொருளாக கேமரா மாறி விட்டது. சுதந்திரத்திற்கு போராடிய காந்தி, நேதாஜி, வஉசி உள்ளிட்ட எண்ணற்ற தேசத்தலைவர்களை, அறிஞர் களை, கலைஞர்களை நாம் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவர்களையெல்லாம் நம் கண்முன் வந்து நிறுத்துவது புகைப்படமே. எந்த துறையில் அதிகம் பயன்படுகிறதோ, இல்லையோ செய்தித்துறையில் நிழற்பட கருவி அதிமுக்கியமாக பயன்படுகிறது. வரி வரியாக அரைப்பக்கம் எழுதி சொல்லக்கூடிய கருத்தை ஒரு நிழற்படம் மூலம் எளிதில் சொல்லிவிடலாம். படித்தவர்கள் மட்டுமின்றி மழைக்குகூட பள்ளிக்கு ஒதுங்காதவர்களையும் படத்தை பார்த்து செய்தியை அறிந்து கொள்ள உதவுகிறது கேமரா. சிறந்த நிழற்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
நிழற்பட கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆக.19 ஆம் தேதி உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 175ஆவது ஆண்டாக நிழற்பட நாள் கொண்டாடப்பட உள்ளது. 13ஆம் நூற்றாண்டிலேயே கேமரா அப்ஸ்குரா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிய, பெரிய அளவில் பல்வேறு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. 1825ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டடத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த படம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது. 1839ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார்.
அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் சூட்டினார். போட்டோகிராபி என்பது கிரேக்க மொழி சொல்லாகும். இதன் அர்த்தம் ஒளியின் எழுத்து. இதே ஆண்டில் லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான நிழற்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். மரத்தாலான இந்த நிழற்பட கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது.
இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல்பாடுகள் 1839ஆம் ஆண்டு ஆக. 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என உலகம் முழுவதும் அறிவிக்கப் பட்டது. இந்த நாளையே உலக நிழற்பட நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
* 1841இல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடை என்ற முறையை அறிமுகப் படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது.
* 1880இல் செல்லுலாய்ட் நைட்ரேட் பிலிம்களை பயன்படுத்தி நிழற்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
* 1888ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களைப் பயன்படுத்தி பொக்ஸ் கேமராவில் நிழற்படம் எடுப்பதை கண்டறிந்தார்.
* 1900இல் பொக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கொடாக் அறிமுகப்படுத்தினார்.
* 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913இல் ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார். இது நிழற்பட துறையையே புரட்டிப்போட்டது.
* முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981இல் தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.