Friday, 5 December 2025

திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!

சென்னை வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சென்னை விக்டோரியா ஹாலில் நடைபெற்றதாகவும் எழுதி இருக்கின்றனர். இக்கூட்டமே நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இக்கூட்டம் நடைபெற்ற நாளே நீதிக்கட்சி தோன்றிய நாள் (20.11.1916) ஆகும்.) அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் கீழ்க்காணும் பெருமக்கள் ஒரு சிலராவர். அப்பெயர்கள் வருமாறு:

திவான் பகதூர் பிட்டி. தியாகராயச் செட்டியார், 2. டாக்டர் டி.எம். நாயர், 3. திவான் பகதூர் பி. இராஜரத்தின முதலியார், 4. டாக்டர் சி.நடேச முதலியார், 5. திவான் பகதூர் பி.என். சிவஞான முதலியார். 6.திவான் பகதூர் பி. இராமராய நிங்கார் (பானகல் அரசர்) 7. திவான் பகதூர் எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை, 8. இராவ் பகதூர் நாராயணசாமி செட்டி, 9. இராவ் பகதூர் தணிகாசலம் செட்டி, 10. இராவ் பகதூர் எம்.சி. ராஜா, 11. டாக்டர் முகமது உசுமான் சாயுபு, 12. ஜே.எம்.நல்லசாமி பிள்ளை, 13. இராவ் பகதூர் வெங்கட்ட ரெட்டி நாயுடு, 14. இராவ் பகதூர் ஏ.பி. பாத்ரோ, 15. டி. எத்திராஜூலு முதலியார், 16.ந.கந்தசாமி செட்டியார், 17. ஜே.என். இராமநாதன், 18. கான்பகதூர் ஏ.கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், 19. திருமதி அலுமேலு மங்கைத் தாயாரம்மாள், 20. த.இராமசாமி முதலியார், 21. திவான் பகதூர் கருணாகர மேனன், 22. டி. வரதராஜூலு நாயுடு, 23. மதுரை வக்கீல் எல்.கே.துளசிராமன், 24. கே.அப்பாராவ் நாயுடுகாரு, 25. எஸ். முத்தையா முதலியார், 26. மூப்பில் நாயர் போன்ற முக்கியமானத் தலைவர்கள் அனைவரும் கூடி ‘South Indian Liberal Federation’ எனும் பெயரைத் தெரிவு செய்தனர். இதனைத் தான் சுருக்கமாக ‘SILF’ என்று கூறினர். இதைத் தமிழில் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்று எழுதினர். இவ்வமைப்புக்கு நீதிக்கட்சிக்கு இராஜரத்தின முதலியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாகப் பானகல் அரசர் இராமராய நிங்கார், பிட்டி. தியாகராயர், கே.ஜி. அகமது தம்பி மரைக்காயர், எம்.ஜி. ஆரோக்கியசாமி பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். செயலாளர்களாக பி.எம். சிவஞான முதலியார், பி. நாராயணசாமி முதலியார், முகமது உஸ்மான், எம். கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோர் பணியாற்றினர். பொருளாளராக ஜி. நாராயணசாமி செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

இப்படி அமைப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி சென்னை மயிலாப்பூர் இராஜூ கிராமணியார் தோட்டத்தில் (இப்போது டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ‘சிட்டி செண்டர்’ உள்ள பகுதி) பிட்டி. தியாகராயர் பேசினார். இது குறித்துத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பில்,

‘1916ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகை யிலேயே அன்று மாலை ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிட்டி. தியாகராயர் ‘பிராமணர் அல்லாதார் முன்னேற்றம்’ பற்றிப் பேசிய ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கையொப்பமிடப்பட்டு பிராமணர் அல்லாதார் அறிக்கையொன்று 20.12.1916இல் வெளியிடப்பட்டது. இதனை முழுமையாக 22.12.1916 தேதியிட்ட இந்து வார வெளியீடு வெளியிட்டது.

அவ்வறிக்கை நீதிக்கட்சித் தோன்றுவதற்கான பின்னணியை எடுத்து விளக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிக்கையைத் திராவிட இயக்கத்தின் முதல் ஆவணம் என்று குறிப்பிடலாம். இதைப் போலவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்களை – அவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதற்குப் பிறகு ஈ.வெ. இராமசாமிப் பெரியார் ‘சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்?’ என்று விளக்கிப் பேசியதும் எழுதியதும் திராவிட இயக்கத்தின் இரண்டாவது ஆவணமாகும்.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1938 முதல் 1944 வரை இணைந்து பணியாற்றின. 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநாட்டில் ‘அண்ணாதுரை தீர்மானத்தின்’ மூலமாக நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெயர்கள் ‘திராவிடர் கழகம்’ என மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் இதற்கென்று சிறப்பாக 20.8.1944 எனத் தேதியிடப்பட்டு ஈரோட்டில் அச்சிடப்பட்ட ‘திராவிடநாடு’ வார இதழும், ‘குடிஅரசு’ இதழும் திராவிட இயக்கத்தின் மூன்றாவது ஆவணமாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் அறிக்கையை 17.9.1949இல் வெளியிட்டார். அந்த அறிக்கை திராவிட இயக்கத்தின் நான்காவது ஆவணமாகும். நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944) ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (1949) ஆகிய இவ்வமைப்புகள் தோன்றுவதற்கான காரண, காரிய, விளக்கங்கள் குறித்த அறிக்கைகள் திராவிட இயக்கத்தின் மூல ஆவணங்களாக விளங்கி வருகின்றன .

இதோடு முக்கிய இரு சொற்பொழிவுகளை அய்ந்தாவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும். அவ்விரு சொற்பொழிவுகளில் ஒரு சொற்பொழிவு மட்டுமே கிடைத்துள்ளது. அது 1919ஆம் ஆண்டு முதல் உலகப் போருக்குப் பின் ஆற்றிய உரையாகும். அதனைப் பிற்சேர்க்கை ஒன்றில் இணைத்து இருக்கிறோம். சென்னைச் சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம். நாயர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு 1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. டாக்டர் டி.எம்.நாயரின் ஆங்கிலப் பேச்சை சோமசுந்தரம் பிள்ளை தமிழில் எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவு கிடைக்கவில்லை.

(திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘நீதிக்கட்சி வரலாறு’ நூலிலிருந்து…)

 - விடுதலை நாளேடு, 20.11.25

பொது இடங்களில் ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு! - நீதிக்கட்சி அரசாணை

 


அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் –  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டை மலை)

  1. (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.L. மூர்,

அரசாங்கச் செயலாளர்.

ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,

நகராட்சிகள், கார்ப்பரேஷன், சென்னை

பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,

தொழில் கமிஷனர்,

சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக்காக்கள்,

அரசாங்க செய்தி ஸ்தாபனம்,

இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டன.

சட்டக்குழு அலுவலகம்

25.6.24

தீர்மானம்

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்)  உள்துறை அரசாங்க அலுவலகம்.

  1. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித்தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.

(a) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,

(b) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங்களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.

- விடுதலை நாளேடு,20.11.25

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சரித்திரச் சாதனை! ‘ஏதுமற்ற’ இடத்திலிருந்து 69% இடஒதுக்கீடு வரை கொண்டுவந்தது நீதிக்கட்சி அரசும், அதன் நீட்சிகளான ஆட்சிகளுமே! அடித்தளமிட்ட ஆளுமைகளுக்கு வீரவணக்கம்!

 


ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

“ஜஸ்டிஸ் பார்ட்டி” என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட “நீதிக்கட்சி’’ 1916ஆம் ஆண்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கமாகத் (Non-Brahmin Movement) தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல  உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Association) என்ற அமைப்பு, திராவிடர்களின் வாழ்வுரிமையின் முக்கிய அம்சமான, கல்வி, உத்தியோகம் ஆகியவற்றை – ஆரியப் பார்ப்பனர்கள் தங்களது ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டதிலிருந்து, அவர்களது மீட்சிக்காகவே உருவானது. இவ்வியக்கத்தை சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற வர்கள் சென்னையில்,  பல பார்ப்பனரல்லாதார் பிரமு கர்கள், கல்வி அறிஞர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி விவாதித்து உருவாக்கினர். அரசியல் ரீதியாக உரிமைப் போருக்கு வழிவகுத்தனர்.

முன்னோடிகள்

அதற்கு முன்பாகவே, இதனை 1912லேயே பல முக்கிய பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்கள் இதற்குரிய தொடக்கப் பணியை ஆரம்பித்தார்கள். திருவல்லிக்கேணியில், வசதி வாய்ப்பற்ற பார்ப்ப னரல்லாத திராவிட, ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ‘திராவிடன் இல்லம்’ என்ற விடுதியை அமைத்து, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, கல்விக் கண்ணைத் திறந்தவரான டாக்டர் சி.நடேசனார், பின்னர் நீதிக்கட்சி உதயத்திற்கு முக்கிய முன்னோடியாவார்! மிகப் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறிவு கொளுத்தி, விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, “பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை” (The Non-Brahmin Manifesto) எழுதினர்.

அனைத்திலும் பார்ப்பனர் ஆதிக்கம்

அதில் மக்கள் தொகையில் 100க்கு மூன்று சதம் கூட முழுமையாக இல்லாத ஆரியப் பார்ப்பனர்கள் கல்வி, உத்தியோகங்களைக் கைப்பற்றி வெள்ளைக்கா ரர்களுக்கு “நல்ல வேலைக்காரர்களாகி”, அவர்களைத் தம் வயப்படுத்தி, முந்திக் கொண்டு ஆங்கிலத்தைக் கற்று விட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி பதவிகளைத் தாங்களே ஆக்ரமித்து ‘ராஜ்ய பாரத்தை’ உண்மையாக நடத்தினர்.

இதை விளக்கித்தான் ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ தக்க புள்ளி விவரங்களைத் தந்தது!

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாண்டேகு செம்ஸ்போர்டு குழு அறிக்கைப்படி – இந்தியாவின் மாகாணங்களில் இரட்டை ஆட்சி (Dyarchy) நடத்திட ஒப்புக் கொண்டு மே 1920இல் மாகாண சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தியது.

வென்றது நீதிக்கட்சி

அதில் நீதிக்கட்சி போட்டி போட்டு, வென்று, ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது.

அதன் தலைவர் வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயரை பிரதம அமைச்சர் பதவியேற்கக் கவர்னர் அழைத்தார்!

அவரோ, தான் பதவியேற்காமல், கடலூர் சுப்பராயலு (ரெட்டியாரை) அப்பொறுப்பை ஏற்கும்படி செய்து, அந்நாளைய அரசியல் அதிசயமானார்! என்னே அவரது பெருந்தன்மையின் உச்சம் (majurity)!

மொத்தம் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

  1. கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்)
  2. பானகல் அரசர் இராமராய நிங்கார்
  3. சர். கே.வி. ரெட்டி (நாயுடு)

சுப்பராயலு அவர்கள் இடத்திற்குப் பின்னர் ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார். அவர்  கருநாடகப் பகுதியைச் சேர்ந்தவர்.

அவ்வியக்கம், திராவிடர்களின் பறிக்கப்பட்ட கல்வி உரிமை, உத்தியோக உரிமை முதலியவற்றிற்கு சீரிய ஏற்பாடுகளை விரைந்து செய்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான விடியலைத் தரத் தொடங்கின!

சமூகப் புரட்சியாளர் பானகல் அரசர்

திராவிடர் கழகம்

பதவியேற்ற சில மாதங்களில் முதல மைச்சர் கடலூர் சுப்பராயலு (ரெட்டி) அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பதவி விலகிட, பானகல்அரசர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

(இவர் 1912–லேயே மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்து Central Legislative Assembly-யிலேயே தீண்டாமை ஒழிப்புக்குத் தீவிரமாகக் குரல் கொடுத்தார். மானக்ஜி தாதாபாய் அவர்களின் மனிதநேய குரலுக்குத் (தாதாபாய் நவ்ரோஜி அல்ல) துணையாக நின்று, தீண்டாமை ஒழிப்பு மசோதாவிற்குத் இந்தியாவின் சட்டமன்றத்தில் கால் கோள் இட்ட மனித உரிமைப் போராளி (பானகல் அரசர்) என்பது பலரும் அறிந்திராத அரிய உண்மையாகும்).

அவர்தான் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்று மளமளவென்று, உரிமைகளைக் கிள்ளி அல்ல, அள்ளித் தந்து வரலாற்றின் புதிய பொன்னேட்டைத் திராவிடர் எழுச்சியில் முத்திரை பதித்த நம் அனைவரின் மகத்தான நன்றிக்குரியவர்.

இவருக்குக் கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராயர் முழு ஆதரவு தந்து இவரை முடுக்கி விடச் செய்தார்.

அதுபோலவே டக்டர் சி.நடேசனார் போன்ற தலைவர்களும்!

வகுப்புவாரி ஆணை வரலாறு

அந்த ஆட்சி 17 ஆண்டுகள் நேரடியாகவும், ஆதரவு தந்த ஆட்சியாகவும் 1920 முதல் 1937 வரை நீடித்து புதிய திராவிடர் எழுச்சியினை வரலாற்றுக் கல்வெட்டாகப் பதித்தது.

பதவியேற்ற ஓராண்டிலேயே வகுப்பு வாரி உரிமை (கம்யூனல் ஜி.ஓ. – Communal G.O.) ஆணையை 16 செப்டம்பர் 1921இல் (Order No. 613) “அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதவர்களின் வகுப்புவாரி முறையில், பிரதிநிதித்துவம் போதிய அளவில் இருக்க வேண்டும்” (Adequate Proportional Representation) என்று அந்த அரசு ஆணை போடப்பட்டது.

ஆனால் அன்று அரசுச் செயலகத்தில் முக்கிய கேந்திரப் பதவி அதிகாரிகளாக உயர் ஜாதிப் பார்ப்ப னர்களே பெரிதும் நிரம்பி இருந்த காரணத்தால், இந்த ஆணையைச் செயல்படுத்த விடாமல் பலவாறு கேள்விகள், திருத்தங்கள் – முதலியவற்றை எழுப்பினர். தங்களது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அந்த ஆணையை செயலுக்கு வராமலே தடுப்பதில் பெரிய பார்ப்பனர்கள் தங்களது அதிகாரத்தை முழு வீச்சில் பயன்படுத்தினர்.

எத்தனைத் தடைகள்?

பல மேல் அதிகாரிகள், வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைக் குழப்பியும், தம் வயப்படுத்தியும் அந்தச் சமூக நீதி ஆணை – கைக்கெட்டியது வாய்க்கெட்டா நிலையை உருவாக்கி மகிழ்ச்சி அடைந்தனர்!

1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு மற்றொரு புது ஆணை Second Commual G.O. No. 658 dated 15.8.1922 வெளியிடப்பட்டது. 12 அம்ச ரோஸ்டர் சிஸ்டத்தை உள் அடிக்கற்றையாகப் போட்டு போதிய விளக்கத்தை தந்தும், மீண்டும் அந்நாளைய ‘‘அக்கிரகார நந்திகள்’’ – தங்களது ‘‘Red Tape Juggary’’ – தங்களது ‘‘சிவப்பு நாடா’’ வித்தக ஜால விளையாட்டு மூலம் செயல்பட விடவே இல்லை – சில வெள்ளைக்கார மேல் அதிகாரிகள் பார்ப்பனரது ஆசைக்கும், எண்ணத்துக்கும் துணை போய் பலியாகி, திராவிட இனத்தை வஞ்சித்தனர்.

ஆர்.ஏ.கிரஹாம் (R.A.Graham) என்பவர் இந்த துரோகத்திற்கு ஆரிய – பார்ப்பன மேலான் மக்களுக்குப் பெரிதும் வயப்பட்டவர் ஆனார். ஜி.ஜி.டாட்டன்ஹாம் என்பவர் பார்ப்பனர் நலத்திற்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற பார்ப்பனர் பென்ஷனைப் பாதிக்கும் என்று அவாளுக்குப் பரிந்து வாதாடி, இந்த ஆணை மறுபடியும் “ஊறுகாய் ஜாடி”க்கு அனுப்பப்படுவதற்கான காரணஸ்தரானார்!

முத்தையா (முதலியார்) சாதனை!

திராவிடர் கழகம்

ஊறுகாய் ஜாடியி லிருந்து வெளியே கொண்டு வந்து அதற்கு மீண்டும் உயிர் ஊட்டி ‘‘புதுப் பிறப்பாக’’ 1928இல் நீதிக்கட்சி ஆதரவுடன் செயல்பட்ட  டாக்டர் சுப்பராயன், சுயேச்சை அமைச்சரவையின் அமைச்சரான முத்தையா முதலியாரால்தான் G.O./071/4.11.1927, and 1129/15.12.1928 ஆகியவை செயலாக்கத்திற்கு வந்தன.

நீதிக்கட்சி, திராவிடர் ஆட்சியின் பெருத்த விளைச்சல் – சமூகநீதிச் சரித்திரமாகத் தொடங்கியது இதிலிருந்துதான்.

இந்த வகுப்புரிமைப் படிக்கட்டு மூலம்தான் ஒடுக்கப்பட்ட நம் மக்கள் கல்வி, உத்தியோகம் மற்றும் அதன் காரணமாக வாழ்வாதாரம் பெற்று புலம் பெயர்ந்து அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முன்பு கூலிகளாகச் சென்ற அதே சமூகம் அதே நாடுகளுக்கு நல்ல ஊதியத்துடன் இன்று மதிப்புறு பணி வாய்ப்புகளோடு செல்வது வியக்கத்தக்கது.

இந்த வகுப்புரிமையை ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் அன்று 1928இல் தொடங்கிய சதிச் செயலில் 1950இல் அவர்களுக்கு – “சுயராஜ்ய இந்தியாவின்” அரசமைப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி, பொய் உரிமையை முன்வைத்து நடத்தப்பட்ட செண்பகம் – துரைராஜன் வழக்கு மூலம் வெற்றி பெற்றனர்.

முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் –

76 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும்!

தந்தை பெரியார் களம் கண்டு வகுப்புரிமைக் கிளர்ச்சியை 1950-1951இல் மக்களைத் திரட்டி நடத்தி பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் வந்து வகுப்புரிமை வேறு சமூகநீதி வடிவத்துடன செயலுக்கு வந்தது – திராவிடம் வென்றது! அந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடங்கி அந்த நீதிக்கட்சி விதைத்து பெரும் விளைச்சலாகி 69 சதவிகித இடஒதுக்கீடு என்று பெரியார் மண்ணில், பூத்துக் குலுங்க 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்று இரும்பு வேலி அதனை எந்த மாடும் மேயாதபடி காத்தது.

பெரியார் தொண்டர்கள், திராவிடர் கழகத்தின் அயராத முயற்சியால் மூன்று பார்ப்பனர் தலைமையினாலும் தடுக்க இயலாது தலைவணங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தால் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வெற்றி பெற்றது.

76 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத் தின்படி சட்டமானது. ஒன்றிய – மத்திய அரசில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு முன்பு கிடைக்காத இடஒதுக்கீடு, மண்டல் பரிந்துரை மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள ஓ.பி.சி.(OBC)யினருக்குக் கிடைத்தது.

திராவிட மாடலே எல்லாம்!

இதை இன்றும் கண்காணித்து நிலைக்க வைக்கும் அரசாக, தமிழ்நாடு மாநிலமாகிய, பெரியார் மண்ணில் திமுக அரசுகளும் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகளும் முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியிலும் கூட – முன்பு ஓமந்தூரார் ஆட்சி, காமராசர் ஆட்சி என்ற நிலைமையிலும் அனைத்துமே சமூக நீதியைச் செயல்படுத்திய ஆட்சிகளாக அமைந்ததற்குக் காரணம் நீதிக்கட்சி ஏற்படுத்திய தாக்கம்தானே!

மகளிருக்கு வாக்குரிமை (1922), தேவதாசி ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமணச் தடைச் சட்டம், ஆதி திராவிட மக்களின் கல்வி உரிமை, சமத்துவ உரிமை, அதிகாரப் பங்களிப்பு, இழிவு ஒழிப்புச் சட்டம், கோயில் பார்ப்பனர் சர்வ கொள்கைகளைத் தடுத்த – பானகல் அரசின் இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்.

இவை ஒவ்வொன்றையும் தங்களுக்குத் தரப்பட்ட குறுகிய அதிகார எல்லைக்குள்ளயே இவ்வியக்கம் சாதித்துக் காட்டியது.

நீதிக்கட்சியின் நீட்சியே தி.மு.க. ஆட்சி!

1956இல் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து இரண்டு பொதுத் தேர்தல்களில் 1956, 1962 – பத்தே ஆண்டுகளில் 1967இல் ‘‘சென்னை ராஜ்யத்தில்’’ அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்து அரிய சாதனை செய்தபோது, அவரிடம் செய்தி யாளர் கேட்ட கேள்விக்கு, “இது பழைய நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியின் பேரன் ஆட்சி” என்று பொருத்தமாகப் பதிலைச் சொல்லி வியக்க வைத்தார்!

பிறகு கலைஞர் ஆட்சி, இன்று மு.க.ஸ்டாலின் ஆட்சி! (இடையிடையே அதிமுக ஆட்சி –
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி என்றாலும், எல்லாம் இந்த எல்லையைத் தாண்ட முடியாதவைகள்.) அதற்குப் பிறகு அது அடமானக் கட்சியாகியது அரசியல் கொடுமை!

அறிஞர் அண்ணாவின் ஆட்சி ஓராண்டு தான் என்றாலும் அதன் முப்பெரும் சாதனைகளாக பல நூறாண்டு நிலைத்து நிற்கும் சமூக கலாச்சார அரசியல் புரட்சியை அமைதி வழியில் சாதித்தார்.

இப்போது உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நீதிக்கட்சி, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் – தாய்க்கழகமான திராவிடர் கழகம் – ஆகியவற்றின் அடிச்சுவட்டில் அந்த பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதிச் சுடரை ஏந்தி, அடுத்த பல தலைமுறைகளை ஆயத்தப்படுத்திடும் கொள்கை வழி நிற்கும் சரித்திரச் சாதனை அரசாகத் தொடர்ந்து இன எதிரிகளையும், கொள்கை எதிரிகளையும் கலங்கடித்துக் களத்தில் சளைக்காத ஓர் உரிமைப் போர் நடத்தும் சாதனை அரசாக திராவிட நாயகன், சமூக நீதிகாத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் சிறப்பாக பீடு நடை போடுகின்றது. 2026–லும் மீண்டும் வெற்றி மகுடம் சூடி வரலாறு படைப்பது உறுதி.

பல தலைமுறைகளைக் காக்கும் தலைமுறை ஆட்சிதான் என்பதைத் தலை நிமிர்ந்து பெருமை பொங்க, முரசொலித்து, சமூக விடுதலைக் கொடி பறக்கப் பார் புகழும் ஆட்சி! ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ தனது பாட்டனாரின் தோளில் ஏறி நின்று இன்றும் சாதித்துக் கொண்டே தொடருகிறது!

தொடரட்டும் திராவிட ஆட்சியின் சிறப்புகள்!

படைக்கட்டும் புதியதோர் இணையற்ற இமாலயச் சாதனைகள்!!

- விடுதலை நாளேடு, 20.11.25