Saturday, 27 September 2025

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

கட்டுரை, ஞாயிறு மலர்

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர்.

இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!

பாம்புகளின் வகைகள்

பாம்புகளில் நஞ்சு உள்ளவை நஞ்சு இல்லாதவை என இரண்டு வகை உள்ளது.  அதேபோல் நஞ்சு உள்ளவைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

1.. நீயூரோ டாக்சிக்’ (Neurotoxic) உள்ளவை.  2.‘ஈமோ டாக்சிக்’(Hemotoxic) உள்ளவை. என்பனவாகும்.

நியூரோ டாக்சிக் நஞ்சு உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சு இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் ‘நியூரோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ‘ராட்டில் ஸ்னேக்ஸ்’ மற்றும் ‘அட்டர்ஸ்’ போன்ற விரியன் பாம்புகள் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன.

கீரிப்பிள்ளையும் பாம்பும்

கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை மூண்டால் கீரிப்பிள்ளையே வெல்லும்.   கீரிப்பிள்ளை விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது. இதனால் பாம்பிடம் சண்டை போட்டு, போக்கு காட்டி, பாம்பை சோர்வடைய வைக்கும். கீரிப்பிள்ளை தனது உடலில் இருக்கும் மயிர்களை சிலிர்க்க வைத்து பாம்புக்கு பெரிய உடலாக காண்பிக்கும்; இதனால் பாம்பின் கடி கீரிப்பிள்ளையின் உடல் மீது பதியாமல், மயிர் பகுதியிலேயே பதியும்.  அதோடு அதன் தோல் பகுதி மிகவும் கடினமானதால், கடியும் சரியாக பதியாது. கீரிப்பிள்ளை பாம்பின் தலையை சிதைத்தும்; கழுத்தை குதறியும் கொன்றுவிடும். கீரிப்பிள்ளையின் கடி மிக வலிமை வாய்ந்தது.  அப்படியே பாம்பின் கொத்து, கீரியின் உடம்பில் பட்டு நஞ்சு பாய்ந்தாலும் பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாது. காரணம் கீரிப்பிள்ளையின் உடம்பில் பாம்பின் நஞ்சுக்கான எதிர் புரதம் (Antibody), அதாவது மாறுபட்ட ‘அசிட்டோகோலின் ஏற்பி’ (Acetylcholine receptor) என்ற நச்சு முறிவு பொருள் (anti venom) உள்ளது. அதேபோல் கிளைக்கோ புரதம் ((Glycoprotein) என்கிற நஞ்சு எதிர்ப்பு பொருளும் உள்ளது. இந்தப் பொருள்கள் பாம்பின் நஞ்சை முறித்து விடும். இதனால் கீரிப்பிள்ளை பாம்பு கடியால் இறக்காது தப்பித்துவிடும்.   இதே போல் பாம்பு நஞ்சிற்கு எதிரான ‘புரதப் பொருள்’ உள்ள பல உயிரினங்கள் உள்ளன.

அதில் ஒன்று குதிரை. குதிரையின் காலில் பாம்பு கொத்திய பிறகு, குதிரையின் உடம்பில் பாம்பு நஞ்சுக்கு எதிரான புரதம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குதிரை பிழைத்து விடும்.

இதை பயன்படுத்தி குதிரையின் இரத்தத்திலிருந்து பாம்பு கடிக்கு ‘முறிவு மருந்து’ தயாரிக்கிறார்கள்.

 பாம்பு கடிக்கு மருந்து

பாம்பின் நஞ்சை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஊசி மூலம் குதிரைக்கு செலுத்துகிறார்கள். சில நாட்களில் குதிரையின் உடம்பில் ‘நஞ்சு முறிவு புரதம்’ சுரக்கிறது. குதிரையின் இரத்தத்தில் இருக்கக்கூடிய இந்த புரதத்தை பிரித்தெடுத்து, மனிதர்களுக்கு ஏற்படும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

அதேபோல், கோழியின் உடலில் சிறிய அளவில் பாம்பின் நஞ்சை செலுத்தி;, அது இடும் முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். பாம்பு கடிக்கு மருந்து உயிரினத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ‘இறைச்சி உணவு’ கூடாது என்பவர்கள் (Non-Vegetarian); பாம்பு கடிக்கு பலியாக வேண்டியது தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 27.09.2025 

1. குதிரை மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை

2. கோழி மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை





Friday, 26 September 2025

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு: ‘தினமலர்’, பா.ஜ.க. கும்பலின் புரட்டு அம்பலம்!

 viduthalai


தந்தை பெரியார் படத்தை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தில் 04.09.2025 அன்று நடக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி திறந்து வைக்கிறார்.

பிற இதழிலிருந்து...

இது குறித்து  ‘‘ரூ.25,000 வாடகை செலுத்தி ஈ.வெ.ரா. படத் திறப்பு’’ என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி  கீழே தரப்பட்டுள்ளது.

‘‘ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டதும், அப்பல்கலை. பி.ஆர்.ஓ., மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈ.வெ.ராமசாமி படத்திறப்பும் இல்லை’’ என தெரிவித்தது. ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும்.

பிற இதழிலிருந்து...

அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’

இவ்வாறு ஒருவர் சொன்னதாக தினமலர் செய்தி வெளி யிட்டுள்ளது.

‘உண்மையின் உரை கல்’ என்று தன்னுடைய பத்திரிகையை விளம்பரம் செய்யும் அந்தப் புரட்டு மலர், குறைந்தபட்சம் இந்தச் செய்தியைப் பதிப்பிக்கும்முன் இணையதளத்தில் தேடியிருக்கலாம். ஆனால், ‘உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால் வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்பதையே ‘தாரக மந்திரமாகக்’ கொண்டு செயல்பட்டு வரும் தினமலரும்,  இந்துத்துவ கும்பலின் ‘அய்.டி. விங்’குகளும் சமூக ஊடகத்திலும், பத்திரிகையிலும் பொய்யை, புரட்டைப் பரப்புவது என முடிவெடுத்து நேற்று (30.8.2025) முதலே இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்பி தந்தை பெரியாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் இழிவு செய்ய வேண்டும் என நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர்.

பிற இதழிலிருந்து...

உண்மை இதுதான்! இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின்  செயின்ட் ஆண்டனி மற்றும் பெல்லியோல் கல்லூரி இணைந்து நடத்தும் நிகழ்வு ஆகும்.

இதுகுறித்து செயின்ட் ஆண்டனி கல்லூரியின் இணையதளத்திலும்,

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. (அவற்றின் இணைப்புச் சுட்டியும் படமும் இங்கே தரப்பட்டுள்ளது.)

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆக்ஸ்போர்டு டாக்ஸ் (OXford Talks) பகுதியில் இடம் பெற்றுள்ள இணைப்பக்கங்களில் நிகழ்வை ஒருங்கிணைப்பது St
Antony’s College, 62 Woodstock Road OX2 6JF என்பதும், அதன்  Asian Studies Centre துறை ஒருங்கிணைப்பதும், ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்கள் Jim Mallinson (University of
Oxford), Faisal Devji (St Antony’s College) என்பதும், துறையின் அலுவல் பூர்வ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டனவும் கொடுக்கப்பட்டு, நிகழ்வில் பங்கேற்பதற்குப் பதிவு செய்ய இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதே போல் செப்.4 மாலை  தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இணைப்பும், மறுநாள் நடக்கும் கருத்தரங்கு தொடர்ச்சிகான இணைப்பும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன.

அப்படியிருக்க திமுகவில் இருந்து  ஓடி போய் அண்மையில்  பாஜகவில் இணைந்த ‘இவர் தாவாத கட்சியில்லை தரணியிலே’ என்ற சிறப்புக்குரிய ஒருவரது புரளிப் பேச்சை செய்தியாக்கி வெளியிடுவதுதான் அவாளின் பத்திரிகா தர்மமா?

 - விடுதலை நாளேடு, 31.08.25

Saturday, 20 September 2025

குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


‘குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


கட்டுரை, ஞாயிறு மலர்

சைவ மதத்தின் பெருமையை கூறுவதோடு, அதன் கதாநாயகர்களான பார்வதி பரமசிவனின் திருமணக் காட்சி களையும், அவர்களின் மகனாக ஸ்கந்தன் (கந்தன் – முருகன்) பிறப்பதை பற்றியும் ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் கூறுகிறது.

இந்த காப்பியத்தை காளியின் பக்தராக கூறப்படும், ‘கவிஞர் காளிதாசர்’ இயற்றியதாக கூறப்படுகிறது. (இவர் வாழ்ந்த காலம் பொ.மு 01 முதல் பொ.பி. 05 வரை ஏதோ ஒரு நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது!

‘குமார சம்பவம்’ என்கிற இந்த காப்பியத்தில் 17 சருக்கங்கள் இருக்கின்றன. இதில் எட்டு சருக்கங்களை தான் ‘காளிதாசர்’ இயற்றிய தாகவும், மற்ற 9 சருக்கங்களை வேறு யாரோ எழுதி ‘இடை செருகல்’ செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

முதல் 8 எட்டு சருக்கங்களைத் தான் பலர் ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். சிலர் மட்டுமே 17 சருக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பக்தி நூல்களை வெளியிடும் ‘லிட்டில் பிளவர் பதிப்பகம்’ ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் 8 சருக்கங்கள் கொண்டதையே வெளியிட்டுள்ளது.

காப்பியத்தின் பெயர் ‘குமார சம்பவம்’, ஆனால் இந்த எட்டு சருக்கங்களில் குமார சம்பவத்தை பற்றியே குறிப்பிடப்படவில்லை!. அதாவது குமாரன் எனப்படும் ஸ்கந்தனின் பிறப்பு பற்றியே குறிப்பிடப்படவில்லை. குமாரனின் பிறப்பு பற்றி காவியம் எழுத வந்த காளிதாசர், குமாரனின் பிறப்பை பற்றி, கூறாமலா இருந்திருப்பார்?

பிறகு வரும் 9, 10, 11 ஆகிய சருக்கங்களில் தான் கந்தன் எனப்படும் குமாரன் எப்படி பிறந்தான் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வர்ணனை மிகவும் அருவருப்பாக (ஆபாசமாக) இருப்பதால் தான் இடைச்செருகல் என புறக்கணித்து விடுகின்றனர்.

‘குமார சம்பவம்’ என்கிற காப்பியத்தில் உள்ளபடி…..

பார்வதி – பரமசிவன் திருமணம் பருவதமலையில் நடைபெறுகிறது. அங்கே ஒரு மாதம் தங்கி இன்பம் அனுபவிக்கின்றனர். பிறகு இமய மலையின் உச்சிக்கு(கந்தமாதன மலை) புறப்பட்டு சென்று அங்கு யாரும் அறியா இடத்தில் மதுவை உண்டு, பாலின்ப களிப்பில், வாழ்க்கை வாழ்கின்றனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இப்படியே நூறு தேவ ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர்.(மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் ஒரு நாள். 360 மனித ஆண்டுகள் தேவர்களின் ஒரு ஆண்டு. அப்படியானால் 360×100 =36000 மனித ஆண்டுகள்) அதாவது 36,000 மனித ஆண்டுகள் பார்வதியும் -பரமசிவனும் உடலுறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் பார்வதிக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலங்கி போய், இனிமேல் ஒரு குழந்தை பிறந்தால் யாரால் தாங்க முடியும்? என அஞ்சிய தேவர்கள் ‘அக்னி’ தேவனை தூது அனுப்ப முடிவு செய்தனர். அக்னி தேவன் ‘புறா’ வடிவில், பார்வதியும் பரமசிவனும் உடலுறவு கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான். துணுக்குற்ற சிவன் அப்படியே வெளியே வந்து அக்னி தேவனிடம் ‘என்ன அவசரம்?’ என்று கேட்டான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ‘தாரகாசுர’னை கொல்ல, ஒரு மகனை தாங்கள் பெற்றுத் தர வேண்டும்’ என தேவர்கள் என்னை அனுப்பி வைத்துள்ளனர்’ என கூறினார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

சமாதானம் அடைந்த சிவன், “உடலுறவுக்கு இடையே என்னை தொந்தரவு செய்ததால் வெளியேறும் ஸ்கலிதத்தை (விந்துவை) நீ ஏந்தி கொள்” என அக்னி பகவானிடம் விட்டார்.

அக்னி பகவான் அதன் வெப்பத்தை தாளமாட்டாமல் கங்கை நதியின் ‘சரவணப் பொய்கை’யில் மூழ்கி அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டான். அங்கே நீராட வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த விந்துவின் நீரினால் கர்ப்பமானார்கள். அந்த கர்ப்பத்தை அங்கேயே ஈன்று விட்டு விட்டனர்.

அதைப் பார்வதி எடுக்க ஆறு குழந்தைகளாக மாறின. அதை ஒன்றாக சேர்க்க ஆறு தலை 12 கை உடைய கந்தனாக (ஆறுமுகம் – ஷண்முகம்) மாறியது.

‘குமார சம்பவம்’; சருக்கம்: 9,10,11 பகுதிகள் தான் இவற்றை விவரிக்கின்றன.

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், பால காண்டம் சருக்கம் 36, 37இலும்,

ஸ்ரீ சிவ மஹா புராணம்,1 ஞான சம்ஹிதை,18. தாரகாசூரன் உதயமும் திரிபுரத் தோற்றமும்’ பகுதியிலும்  இதே கதை இடம்பெற்றுள்ளது.

‘குமார சம்பவம்’ என்ற பெயரில் காப்பியம் எழுத வந்தவர், குமாரனின் பிறப்பு பற்றி எழுதாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. பிறகு வந்தவர்கள் காப்பியத்தை நகலெடுக்கும் போது அந்தந்த காலகட்டத்தில் இருந்த மொழி நடைக்கேற்றாற் போல் எழுதியிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு “இந்தப் பகுதி இப்படி இருக்கிறது; அந்தப் பகுதி அப்படி இருக்கிறது’ அதனால் இந்த பகுதிகளை அவர் எழுதி இருக்க மாட்டார்” என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதையே!

- விடுதலை ஞாயிறு மலர், 20.09.2025