Tuesday, 4 March 2025

காந்தி கருணாமூர்த்தியா?கல்நெஞ்சனா?

#காந்தி #கருணாமூர்த்தியா_கல்நெஞ்சனா?
                       🌑🌑🌑🌑🌑

பகத்சிங், சுகதேவ், ராஜ குருவழக்கில்
1930 அக்டோபர் 7-ந் தேதி நீதிமன்றத்திற்குள்ளே தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நாடே பயந்ததைப் போல பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தண்டிக்கப்பட்டனர்.

பகத்சிங் உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை என்ற செய்தி நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கண்டன கூட்டங்கள் நடந்தன.

தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி 6 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சித்தலைவரான வைஸ்ராய் இர்வின் பிரபுக்கு அனுப்பினார்கள்.

மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா போன்ற தலைவர்கள் வைஸ்ராய்க்கு கடிதங்கள் எழுதினார்கள். 

1931, பிப்ரவரி 17-ந் தேதியை தேசம் முழுக்க பகத்சிங் தினமாக அறிவித்து, தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தினார்கள். 

பகத்சிங்கின் பெற்றோர் செய்த மேல்முறையீட்டை அன்றைய இந்தியாவின் உச்சநீதிமன்றமாக லண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் ஒரே வாரத்தில் தள்ளுபடி செய்தது.

1931, மார்ச் 24-ந் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதைஅடுத்து பஞ்சாப் மாநில ஆளுநருக்கு பகத்சிங் ஒரு கடிதம் எழுதினார்.

1931 மார்ச் 3-ந் தேதியிட்ட அக்கடிதத்தில்... ‘ஆளுநர் அவர்களே, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாங்கள் யுத்தம் தொடுத்தோம் என்று குற்றம்சாட்டி எங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யுத்தக் கைதிகளான எங்களை ராணுவ முறைப்படி போர் வீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்வதுதானே நியாயம்? தூக்கிலிட்டுக் கொல்வது தேவையற்றது. ஆகவே, ராணுவ வீரர்களை அனுப்பி எங்களை சுட்டுக் கொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’
என்ற கோரிக்கையை வைத்திருந்தார் பகத்சிங்

பகத்சிங் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் பெருங் குரலாக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி, ஆங்கிலேய அரசுடன் சமாதான பேச்சு நடத்திக் கொண்டிருந்தார்.

 காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் காந்தி எப்படியாவது பகத்சிங்கை தூக்கிலிருந்து காப்பாற்றி விடுவார் என்று நம்பினார்கள்.

ஆனால் இயல்பிலேயே வன்முறை நடவடிக்கைகளை ஆதரிக்காத காந்தியடிகள் அதற்கான முயற்சி களை மேற்கொள்ளவில்லை. மார்ச் 25-ந் தேதி கராச்சியில் காங்கிரஸ் மாநாடு நடக்கவிருப்பதால் தண்டனை நிறைவேற்றத்தை ஒரு வாரம் #ஒத்திவைக்குமாறு வைஸ்ராய் இர்வினிடம் காந்தி கேட்டார். அதற்கு
இர்வின் ஒப்புக்கொள்ளவில்லை.

காந்தி ஒரு வார்த்தை அழுத்தமாக சொன்னால் தூக்கிலிடுவது நிறுத்தப்பட்டுவிடும் என்று கடைசி நேரம் வரையிலும் நேரு உள்ளிட்ட தலைவர்கள் நம்பினார்கள். 

அறிவித்ததற்கு ஒரு நாள் முன்பே பகத்சிங்கை தூக்கிலிடப்போகும் தகவல் அவர்களுக்குத் 
தெரிந்து விட்டது.

1931 மார்ச் 23 அன்று டெல்லியில் காந்தியடிகள் தங்கியிருந்த டாக்டர் எம்.ஏ.அன்சாரியின் வீட்டுக்கு நேருவும் மதன்மோகன் மாளவியாவும் போனார்கள்.

அன்று காந்தி மவுன விரதம். கைராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார். நேருவுக்கு குளிர் ஜுரம். ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்கிய படியே காந்தி முன்பு அமர்ந்தார்.

மாளவியா பதறியபடிகேட்டார், ‘பாபுஜி, இன்று மாலையில் பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் தூக்கிலிடப் போகிறார்களாம். இனியும் நாம் தாமதிப்பதற்கில்லை. நானும், நீங்களும், பட்டேலும், ஜவஹர்லாலும் சேர்ந்து இங்கிலாந்துக்கு தந்தி அனுப்பலாம். உடனே புறப்பட்டுச் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரலாம். புறப்படுங்கள்’ என்றார்.

அதற்கு, ‘நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்து விட்டேன். இனிமேல் ஒன்றுமில்லை. ஆண்டவன் விட்ட வழி’ என்று ஒரு தாளில் எழுதிய காந்தி அதை மாளவியாவிடம் நீட்டினார். 

மாளவியா ஒன்றும் பேசாமல் அந்தத் தாளை நேருவிடம் காட்டினார். அவரும் அதைப் படித்துவிட்டு காந்தியை உற்றுப் பார்த்தார். அவரோ எதுவுமே நடக்காதது போல மீண்டும் ராட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.

அதைக் கண்ட நேரு கோபப்பட்டு பேசினார்.

"ஆம்... இந்த நாட்டின் எண்ணற்ற இளம் மலர்கள் மண்ணில் உதிரட்டும். பகத்சிங்கு தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் நீங்கள் முற்றும் துறந்த புத்தரைப்போல சம்மணம் போட்டு உட்கார்ந்து நூல் நூற்றுக்கொண்டே இருங்கள்.....

"போன வாரம் வைசிராய் இர்வின் பிரபுவோடு நீங்கள் கையெழுத்திட்ட சமரச ஒப்பந்தத்தை நாளை வரை தள்ளிப் போட்டிருந்தால், இன்று மாலையில் தூக்கிலிடப்படும் பகத்சிங் ரத்தத்தால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கலாமே பாபுஜி" என்று ஆத்திரமும், கேலியும், வேதனையும் கலந்து குமுறினார் நேரு.

காந்தி அதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை. அவரை மீறி எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் மதன் மோகன் மாளவியாவும் ஜவஹர்லால் நேருவும் கோபத்தோடு வெளியேறினர்.

மார்ச் 23, 1931இல் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு
மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

அன்று இரவு, காந்தி எனும் கருணாமூர்த்தியின் ( ? )
மனசாட்சியும், அவர்களுடன் தூக்கில் தொங்கியது
                             🌑🌑🌑🌑🌑🌑🌑🌑

                (பல்வேறு தரவுகளின் தொகுப்பு)

                           ⚖️ #துலாக்கோல் / 5.3.2024🙏