Published February 17, 2024, விடுதலை நாளேடு
வி.சி.வில்வம்
பெயரை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டபோது, சமஸ்கிருத ‘ஜெ’ பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் என்றும் பெரியார் சாக்ரடீசு சொல்லியுள்ளார் எனத் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் காரைக்குடி
தி.ஜெயலெட்சுமி அவர்கள்! நான்கு தலைமுறையாக ஒரே இயக்கம், ஒரே கொள்கை என்பது பெரும் சாதனை தான்!
“எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் முக்கியமல்ல; தொடர்ச்சி தான் முக்கியம்” என்பார்கள். அந்த வகையில் காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தின் மருமகளாக 55 ஆண்டுகள் இருந்து வரும் நிலையில், குடும்பம் வேறு; இயக்கம் வேறு என்றில்லாமல், மிகச் சிறந்த பெரியார் தொண்டராக இயங்கி வருபவர் தி.ஜெயலெட்சுமி அவர்கள்! இவர் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களின் வாழ்விணையர் ஆவார்!
விடுதலை ஞாயிறு மலருக்காக அவரைச் சந்தித்தோம்.
வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
நான் பிறந்தது காரைக்குடி தான். எனது பெற்றோர் கும.ராம.நா.இராமநாதன் – லெட்சுமி அம்மாள். நகரத்தார் குடும்பம் என்று அழைப்பார்கள். எனது தந்தையார் சிவபக்தர். கட்டுப்பாடான குடும்பம். நான் காரைக்குடி எஸ்.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, அதே பள்ளியில் படித்த சாமி.திராவிடமணி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு 1968 ஆம் ஆண்டு பெரியார் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
நீங்கள் நகரத்தார் குடும்பம் என்கிறீர்கள், அவர்கள் கடுமையான பெரியாரியல் குடும்பம். திருமணத்திற்கு எதிர்ப்பு அதிகம் இருந்திருக்குமே?
ஆமாம்! எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. சமாளிக்க முடியாது என்கிற சூழலில், சிவகங்கையில் சாமி.திராவிடமணி அவர்களின் சகோதரி தமிழரசி – ஜெயராமன் இல்லத்திற்குச் சென்று விட்டோம். அங்கு 15 நாட்கள் இருந்தோம். அப்போது பொட்டு வைக்க வேண்டும் என நான் சொன்ன போது, நாங்கள் பொட்டு வைப்பதில்லை எனத் தமிழரசி கூறினார்கள். அப்போது தான் இவர்கள் அனைவரும் பெரியார் கொள்கையில் இருப்பதையே அறிந்தேன்.
பிறகு திருச்சி சென்று பெரியாரை சந்திக்கலாம் என, சிவகங்கையில் இருந்து தொடர்வண்டியில் பயணம் செய்தோம். காரைக்குடி இரயில் நிலையத்தில் இவர்களின் அண்ணன் சாமி.சமதர்மம் அவர்கள் எங்களைச் சந்தித்தார்கள். பெரியாருக்குச் சிபாரிசு கடிதமும், கொஞ்சம் பணமும் கொடுத்தார்கள்.
முதன் முதலாக நான் திருச்சி பெரியார் மாளிகைக்குச் செல்கிறேன். அப்போது என் வயது 18, திராவிடமணி அய்யாவுக்கு 20. கருப்புச் சட்டை அணிந்த தோழர்கள் ஏராளம் நின்றனர். இரண்டு கருப்பு நாய்களும் அங்கே இருந்தன. எனக்குப் புது அனுபவம். எனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட பெரியார், அருகில் வர சொல்லி அமர வைத்தார்.
“இந்தத் திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா? நகரத்தாரிடம் கடுமையான எதிர்ப்பு இருக்கும். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?”, என்று பலமுறை கேட்டுக் கொண்டார். அன்றைய தினம் திருச்சி டவுன் ஹாலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார், மணியம்மையார், புலவர் இமயவரம்பன், மகாலிங்கம் ஆகியோருடன் எங்களையும் வேனில் ஏற்றிக் கொண்டனர். மேடையில் தனக்குப் பக்கத்தில் எங்கள் இருவரையும் அமர வைத்து, “இந்தப் பெண் நகரத்தார் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். குறைந்தது ரூ.5 இலட்சம் இல்லாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். பையன் வணிகம் செய்பவர். இருவரும் இரண்டு மாலைகளுடன் வந்துள்ளார்கள். மிக எளிமையான திருமணம்”, எனக் கூறி ஒப்பந்த உறுதிமொழியைக் கூறினார் பெரியார்! கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம்.
திருமணத்திற்குப் பிறகு உங்கள் பெற்றோரை சந்தித்தீர்களா?
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் காரைக்குடிக்கே வரவில்லை. சிவகங்கையில் 6 மாதமும், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 4 மாதமும் இருந்தோம். அதன் பிறகே காரைக்குடி வந்தோம். சுமார் 25 ஆண்டுகள் கழித்தே பெற்றோரைச் சந்தித்தேன்.
திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை எப்படி போனது?
குடும்பம் புதிது; கொள்கையும் புதிது! இந்நிலையில், “உங்கள் வீட்டில் எப்படி இருப்பீர்களோ, அப்படியே இங்கும் இருக்கலாம்”, என மாமா என்.ஆர்.சாமி அவர்கள் கூறினார்கள். என்னை அவர்கள் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. “சாக்ரடீஸ் அம்மா” என்று தான் அழைப்பார்கள். பின்னாளில் நானும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போகத் தொடங்கினேன்.
குடும்பமே இயக்கம் என்கிற அளவில்தான் இருந்தது. என்.ஆர்.சாமி அவர்களின் குடும்பத்தில் மட்டும் இதுவரை 19 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 3 திருமணங்களைப் பெரியார் நடத்தி வைத்துள்ளார். 16 திருமணங்களைத் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் தான் நடத்தி வைத்தார். இதில் தன் விருப்பத் திருமணம் (காதல்) மட்டும் 13.
பெரியாரைப் பிறகு எப்போது சந்தித்தீர்கள்?
1968ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளன்று, திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள மனமகிழ் மன்றத்தில், “பெரியார் சுயமரியாதைக் குடும்பங்கள் விருந்து” என்கிற சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம். தந்தை பெரியார், ஆசிரியர் போன்றோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
1968இல் திருமண வாழ்க்கைத் தொடங்கியதில் இருந்து, இன்று வரை அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்கேற்று வருகிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு நான் தான் தலைமை வகித்தேன். முதல் நாள் முழுக்க உடல்நிலைச் சரியில்லாத சூழலிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையிலே விழுந்து விட்டேன். உடனே மதுரை அன்னத்தாயம்மாள் உள்ளிட்ட தோழர்கள் தூக்கிச் சென்றனர்.
இயக்க நிகழ்வுகளில் பங்கேற்ற மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?
நிறைய இருக்கிறது! தஞ்சை மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற மாவட்ட மகளிரணி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான மாநாடுகளில் தீர்மானங்கள் வாசித்திருக்கிறேன். தஞ்சை திலகர் திடலில் சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது.
சேலம் அண்ணாமலை, இறையன், திருவாரூர் சுப்புலெட்சுமிபதி, ஆம்பூர் மீரா ஜெகதீசன், குயில்தாசன், சென்னை ஹேமலதா தேவி, தங்கமணி, குணசேகரன் போன்றோர் குடும்பமாகப் பங்கேற்று அங்கேயே தங்கிக் கொள்வோம். தனியாக வந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வருவார்கள்.
ஒருமுறை காரைக்குடி கூட்டத்திற்குப் பெரியார் வந்திருந்தார். அப்போது நான் செல்லவில்லை. ஜெயலட்சுமி எங்கே எனப் பெரியார் கேட்டதும், உடனே காரை எடுத்துக் கொண்டு திராவிடமணி அய்யா வீட்டிற்கு வந்துவிட்டார்கள். நான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறேன்.
பெரியார் கேட்கிறார், உடனே வா என அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது, பெரியார் பேசிக் கொண்டிருக்கிறார். நான் மேடை ஏறியதும், என்னைப் பார்த்த பெரியார், “இந்த நோஞ்சானுக்கு ரெண்டாவது டெலிவரியா?” என ஒலிபெருக்கியிலே கேட்க, கூட்டத்தில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
பொதுவாக என்னைப் பார்த்தால், “எப்படி ஆச்சி இருக்கீங்க?” என்றுதான் பெரியார் கேட்பார். “பெற்றோர் பேச வில்லை என்று வருத்தப்பட வேண்டாம். மணி (திராவிடமணி) நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏதாவது குறை என்றால், என்னைத் தந்தையாக நினைத்து என்னிடம் கூறவும்” எனப் பெரியார் கூறுவார்.
மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலில், கருவறை நுழைவுப் போராட்டத்தை 1973 இல் பெரியார் அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம், போராட்டத்தில் பங்கேற்போர் பெயர் கொடுக்கவும் என ‘விடுதலை’யில் அறிவிப்பு வந்தது. “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை” என நாங்களும் பெயர் கொடுத்தோம். அப்படி பெயர் கொடுத்த பட்டியலில் எங்கள் வரிசை எண் 1073, 1074.
மணியம்மையார் அவர்களின் நட்பு குறித்துக் கூறுங்கள்?
கூட்டங்களில் பெரியாருடன் நிறைய முறை பார்த்துள்ளேன். பெரியார் மறைவுக்குப் பிறகு, சரியாக ஒரு மாதம் கழித்து, 24.01.1974 அன்று காரைக்குடி வருகிறார்கள். ஆசிரியரும் வருகை தந்தார்கள். உறுதிமொழி ஏற்பு நாள் பொதுக் கூட்டம் அப்போது நடைபெற்றது. எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள். தோழர்கள் அனைவரையும் சந்திக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் பெரியார் வேனில், மணியம்மையாரும், ஆசிரியர் அவர்களும் பயணம் செய்தார்கள். எங்கள் வீட்டில் இருந்த போது, எனது அத்தை பேராண்டாள் அவர்களிடம் அடுப்படிக்குச் சென்று சில சமையல் முறைகளை மணியம்மையார் அவர்கள் கேட்பார்கள். பெரியாருக்கு எலும்புக் குழம்பு (எலும்பு சூப்) மிகவும் பிடிக்கும்.
தேவகோட்டை, காரைக்குடி தோழர்கள் குறித்து சொல்லுங்கள்?
திராவிடர் கழக மாநில மாநாடு, சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு ஆகியவை 1973ஆம் ஆண்டு, ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்தது. இதுதான் பெரியார் நடத்திய கடைசி மாநாடு. அந்த மாநாட்டில் நாங்கள் நாடகம் நடத்தினோம். பார்ப்பன எதிர்ப்பை மய்யமாக வைத்து “தீ பரவட்டும்” எனும் ஒரு நாடகம். இது பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன் எழுதியது. மூடநம்பிக்கையை மய்யமாக வைத்து “சந்தனதேவி” என்றொரு நாடகம். இது காரைக்குடி தங்கராசு எழுதியது.
அந்த மாநாட்டிற்கு காரைக்குடி, தேவகோட்டையில் இருந்து இரண்டு பேருந்துகளில் சென்றோம். இறையன், செம்பியன், இளங்கீரன், டாக்டர் சுப்பிரமணியன். ஆசிரியர் மு.முருகன், பெருவழுதி, கமலம் செல்லத்துரை, தேவ.சீனி.அருணன், பள்ளத்தூர் சிவ.சுப்பிரமணியன் போன்றோர் குடும்பமாகச் சென்றோம்.
கழக மகளிருக்கு அப்போது சீருடை இருந்ததா?
பெண்களுக்குச் சட்டை மட்டும் கருப்பு நிறம் இருந்தது. பிறகு கருப்பு நிற சேலை, சிவப்பு நிற சட்டை என மணியம்மையார் அறிவித்தார்கள். நான்கு நாளில் அது வெள்ளை நிற சட்டை என மாறியது. ஆக கருப்பு சேலை, வெள்ளை சட்டை என்பது இன்று வரை தொடர்கிறது. பெண்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் அடிக்கடி வலியுறுத்துவார்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டிற்கு, வீட்டில் பெண்களை அழைத்து வரவில்லை என்றால், 5 ரூபாய் அபராதம் என்று கூட ஆசிரியர் அறிவித்தார்கள்.
நகரத்தார் சமூகத்தில் இருந்து, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, இந்த இயக்கக் குடும்பத்திற்கு வந்த நிலையில், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
குடும்பத்தினருடன் இணைய பல காலங்கள் பிடித்தது. அதுவும் 1968இல் காதல் திருமணம் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சில பொருளாதார சிரமங்கள் இருந்தது. ஆனால் நாளடைவில் அது மாறியது. ஒருவேளை பெற்றோர் விரும்பியவாறு திருமணம் நடந்திருந்தால், சமூக உணர்வுகள் இன்றி, சராசரியாக வாழ்க்கை போயிருக்கும். பெரியார் சந்திப்பு, அதுவும் பொதுக் கூட்டத்தில் திருமணம், இயக்க உறவுகள், குறிப்பாக நமது ஆசிரியரின் பேரன்பு போன்றவை நிகழ்ந்தே இருக்காது. என்னை நேர்காணல் செய்வதற்கும் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது!
அப்போது மாவட்டப் பொருளாளராக இருந்தவர் மரக்கடை சுப்பிரமணியன் அவர்கள். எல்லா வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். பெரியார் சாக்ரடீசை, “வாடா மணி மகனே” (மணி என்பது திராவிடமணி) என்றுதான் அழைப்பார். அந்த நினைவில் தான் உண்மை இதழில் “மணிமகன்” என்கிற புனைப் பெயரில் பெரியார் சாக்ரடீசு எழுதினார்.
ஒருமுறை நான் இறந்துவிட்டதாகக் காரைக்குடியில் சிலர் வதந்தியைப் பரப்பிவிட்டார்கள். உடனே மரக்கடை சுப்பிரமணியம் அவர்கள் காரைக்குடி முழுவதும் என்னை ஊர்வலமாக வர ஏற்பாடு செய்து, அவர்கள் வீட்டில் எங்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார்கள்.
இயக்க நிகழ்வுகளைப் பேசப் பேச அது மலரும் நினைவுகளாய், வரலாறாய் செல்கிறது” என தி.செயலெட்சுமி கூறினார்!